Showing posts with label சாரதா தேவியார். Show all posts
Showing posts with label சாரதா தேவியார். Show all posts

Tuesday, October 9, 2012

நடப்பதெல்லாம் அவன் செயல்



* ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை.

* ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. ஆனால், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பதால் அதனை முழுமையாக நம்மிடமிருந்து விலக்க முடியாவிட்டாலும், அதன் வலிமையையாவது குறைத்து விடலாம். கர்மபலன்படி, உங்களுக்கு பெரிய காயம் ஒன்று ஏற்படுவதாக இருந்தால், இறைநாமத்தை சொல்லி அவரை வழிபட்டதன் பலனால் மிகச்சிறிய காயம் மட்டும் ஏற்படும்படி அமைந்துவிடும். 
 
* நீங்கள் இங்கு இருப்பதும், இல்லாததும், ஒரு செயலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களது விருப்பப்படி நிகழ்வது இல்லை. அது இறைவனின் விருப்பப்படி நடக்கிறது. அவர் நீங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் அதன்படிதான் நடப்பீர்களே தவிர, வேறு வழியில் நிச்சயமாக செல்ல முடியாது. எனவே, உங்களை இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.

* லாபம் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசாதீர்கள். உண்மை பேசுபவன் இறைவனுக்கு பிடித்தமானவன் ஆகிறான். விரைவாகவே அவரை அடைந்து விடுகிறான்.

Sunday, September 18, 2011

சோம்பேறித்தனம் கூடாது

* எப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
* முதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும்.
* இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.
* சிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.
* காலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.

ஏற்றத்தாழ்வற்ற நிலை



ஆன்மிக சாதனை என்பது இறைவனின் தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்குவதாகும். இறைவனிடம் அடைக்கலம் புகுபவனுக்கு, விதி தன் கைகளினாலேயே தான் எழுதியதை அழித்து விடுகிறது. உலகியல் வாழ்க்கையில் மக்களுக்கு மிக ஆழ்ந்த பற்று இருக்கிறது. பலரில் ஓரிருவரே இந்தப் பற்றில் இருந்து விடுபடுகின்றனர். அதிக பற்று கொண்டவன் வாழ்வில் சலனப்பட்டு வருந்துகிறான். செடியில் இருந்து பறிக்கப்பட்டு விட்டால், இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் போது தான் மலர் பெருமை கொள்கிறது. இல்லாவிட்டால், செடியில் இருந்து வாடி உயிர் விடுவதையே அது பெருமையாகக் கருதுகிறது. செடியில் பூத்த மலரினை இறைவனுக்கு அர்ச்சிப்பது போல, வாழ்க்கையை ஆண்டவனுக்காக அர்ப்பணித்தல் மட்டுமே பயனுள்ள வாழ்வாகும். இல்லாவிட்டால் வாழ்வதில் அர்த்தமில்லை. பணக்காரன் தன் பணத்தால் இறைவனை வழிபடும் அடியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஏழையோ, இறைவனது திருநாமத்தைத் திரும்பத்திரும்ப ஜபிப்பதன் மூலம் அவரை வழிபட வேண்டும். அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும். அன்பில் பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதல்ல. 

Saturday, September 17, 2011

கட்டாய தியானம் வேண்டாம்

* உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் இறைவனுடைய கருணை எப்போதும் பொழிந்து கொண்டிருக்கிறது. கருணையைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. தியானத்தை ஒழுங்காகச் செய். இறைவனின் எல்லையற்ற கருணையைப் புரிந்து கொள்வாய். உண்மை அன்பையே கடவுள் விரும்புகிறார்.

* தியானம் செய்ய முடியவில்லை என்றால் ஜபம் செய். ஜபத்தின் வாயிலாகவும் அனுபூதியடையலாம். பாராயணம் தியானம் செய்யும் மனநிலை வருமானால் நல்லது. கட்டாயப்படுத்திக்கொண்டு தியானம் செய்யாதே.

* காற்று எவ்வாறு மெழுகுவர்த்தியின் சுடரை அலைக்கழிக்கிறதோ அதுபோல ஆசைகள் நம் மனத்தை அலைக்கழிக்கின்றன.

*மனிதனுடைய புத்தி நிலையற்றது. இது ஆணியின் பிரிக்கு ஒப்பானது. ஒரு பிரி தளர்ந்து விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது.

* அலைபாய்வது மனதின் இயல்பு. இறைவனின் நாமம் பலன்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தது. சிலவற்றைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாமல் விட்டதற்காக கவலைப்படாதே.

* கணவன், மனைவி, உடல் உட்பட அனைத்தும் மாயை. இவை மாயையின் தளைகள். இந்தத் தளைகளில் இருந்து விடுபடும் வரை உன்னால் பிறவிக் கடலைக் கடந்து மறுகரையை அடைய இயலாது.

* இவ்வுடல் தீக்கிரையாகும் பொழுது மிஞ்சுவது ஒரு பிடிச்சாம்பலே. அழகே வடிவாக விளங்கினாலும், வலிமை நிறைந்ததானாலும் இவ்வுடலின் முடிவு சாம்பலாவது தான். இருப்பினும் மக்கள் இவ்வுடல்மீது எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள்?

* துன்பங்களால் நொந்து கிடக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் திறந்து காட்டு நைந்துருகி கண்ணீர் விட்டு அழுதால், படிப்படியாக நீ அமைதி பெறுவாய்.

தியானம் செய்வது எப்படி?


  
ஒருவன் இடைவிடாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முறை மந்திரத்தை ஜபிக்கும்போது, அவனுடைய மனம் தானாகவே வலிமையடைந்து, தியானத்தில் மூழ்குகிறது. இறுதியில் குண்டலினி சக்தி அவனிடம் விழித்தெழுகிறது. தூய்மையான மனம் படைத்தவர்கள் தியானம் செய்யும்போது, அவர்கள் ஜெபிக்கும் மந்திரம் தானாகவே எந்தவித முயற்சியும் இல்லாமல் அவர்களுக்குள்ளிருந்து கொப்பளித்து பொங்குகிறது. யார் இந்த நிலையை அடைகிறார்களோ அவர்கள் ஜபத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

* எண்ணங்களையும், சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி, நல்லுணர்வுகளை உருவாக்க தியானம் ஒரு சிறந்த வழி. ஆழ்ந்த தியானம் என்பது முதலில் சிரமமாகத் தோன்றினால், கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தையே ஜபம் செய்யுங்கள். நாளடைவில் ஜபம் செய்யும் நிலையே தியான நிலைக்கு மாறி, மனதை ஒருமுகப்படுத்த வாய்ப்பு கிட்டும். அப்படியும் மனம் அடங்காவிட்டால், மனத்தூய்மை ஏற்படுவதற்கு வழி பிறக்கும்.

* மலர்களை கையில் எடுத்து முகர்ந்து பார்க்காவிட்டாலும், அவற்றின் மணம் நம் நாசியை எட்டுகிறது. சந்தனத்தை அரைத்தாலே நம் கையிலும் சந்தன மணம் கமழ்கிறது. அதைப்போலவே ஜபம் செய்தாலே தியானநிலைக்கு அது மூலாதார சாதனையாக அமைந்துவிடுகிறது. ஜபமானாலும், தியானமானாலும் நம்பிக்கையோடு, பரிசுத்தமான உள்ளத்தோடு, தீவிர வைராக்கியத்தோடு செய்ய வேண்டும்.

* மந்திரம் உடலை தூய்மைப்படுத்துகிறது. இறைவனின் மந்திரத்தை ஜபிப்பதால் மனிதன் தூய்மையடைகிறான்.