சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று 'எந்தனையோ மதங்கள் இருக்கின்றன. அவற்றில் என்னை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் மதம் எது என எப்படிக் கண்டறிவது?' எனக் கேட்டான். அவர் அவனை ஆற்றங்கரைக்குக் கூட்டிக் கொண்டு போய் 'அடுத்த கரைக்குப் போக படகு தயார் செய். அங்கு உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார்.
அவன் தயார் செய்து காட்டிய ஒவ்வொரு படகுக்கும் ஏதோ ஒரு குறை கூறி ஒதுக்கித் தள்ளினார் குரு. சீடனுக்கோ எப்படியாவது அடுத்த கரைக்குப் போய் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு! பொறுமை இழந்த அவன் ஏதோ ஒரு படகில் ஏறிக்கொண்டு மறுகரைக்குச் சென்றான். அங்கு அவன் கேள்விக்கு விடை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை. குருவிடம் வந்து மீண்டும் கேட்டான்.
அவர் சொன்னார், 'உனக்கு உண்மையை அறிந்து கொள்ள மறுகரைக்குப் போயாக வேண்டும் என்ற உத்வேகத்தான் முக்கியமாக இருந்ததே தவிர மறுகரைக்குக் கொண்டு போகும் படகு முக்கியமாகப் படவில்லை. மேலும், மறுகரைக்குப் போவதுதான் முக்கியமே தவிர படகு முக்கியமல்ல. அதே போல் இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிரந்தான் முக்கியமே தவிர பின்பற்றும் மதம் முக்கியமல்ல. எந்தப் படகும் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும். எந்த மதமும் இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.
சீடன் உண்மையை உணர்ந்தான்.
No comments:
Post a Comment