Saturday, May 30, 2015

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலி.....

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலியும் மனிதனுக்காக கொடுக்கப் படும் பலியும் (முக்கிய விளக்கங்கள்):

*இந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்குவது அகிம்சை. 'அகிம்சா பரமோ தர்ம' (அகிம்சையே உச்ச பட்ச தர்மம்) எனும் பிரமாண வாக்கியத்தை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வியாசர். இந்து தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் பலரும் ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உயிர் பலி இடுகின்றனர்.
*இது போன்ற செய்திகளைக் கேள்வியுறும் பொழுது நம்மில் பலரும் ஆலயங்களில் பலியிடுவோரை மிகக் கடுமையாக நிந்திப்பதைக் காண்கிறோம். எனினும் புலால் உண்பவர்கள் அத்தகைய விமரிசனத்துக்கு உள்ளாவதில்லை. மேலும் பல நேரங்களில் ஆலய பலியினை எதிர்ப்பவர்களே அசைவ வழக்கத்தினை மேற்கொள்பவராக இருக்கின்றனர். இது புதிரன்றோ?.
*
உயிர் பலியிடுபவரோ 'புலால் உண்பதே கொடிய பாவம்' என்றும் புலால் உண்பவரோ 'ஆலயங்களில் உயிர் பலியிடுவதே கொடும் பாவமென்றும்' வாதிடுவர். இதற்கு முடிவு தான் என்ன? எவ்வகையிலும் உயிர்க் கொலை ஞாயமாகாது. தர்மங்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப வகுத்துக் கொள்வதை விடுத்து அருளாளர்களின் அறிவுரைகளைச் செவி மடுப்பதே நன்மை பயக்கும்.
*
பிள்ளைப் பெரு விண்ணப்பம் - 63,64ஆம் பாடல்கள் (திருவருட்பா 6ஆம் திருமுறை):
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
-
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுளம் அறியும்!!
*
மேற்குறிப்பிட்ட பாடல்களில் பலியிட எடுத்துச் செல்லப் படும் உயிர்களைக் கண்டு பதை பதைக்கிறார் வள்ளலார். பாடலில் 'குக்குடம்' என்ற பதம் கோழியைக் குறிக்கும். மேலும் மீன் பிடிக்க உதவும் தூண்டில்; வலை இவைகளைக் கண்டால் (அவ்வுயிர்களின் நிலையினை எண்ணி) பயந்து நடுங்குகிறார் வள்ளல் பெருமானார்.
*
நம் நாட்டில் ஆலயங்களில் பலியிடப்படும் பிராணிகள் சுமார் 5 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும், உலக நாடுகள் முழுவதும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு மனித இனத்துக்காக (உண்ணும் பொருட்டு) பலியிடப் படும் பிராணிகளோ 65 பில்லியன் (அதாவது சுமார் 6500 கோடி பிராணிகள்). மீன் முதலிய நீர் வாழ் உயிரனங்கள் இந்த கணக்கில் சேராது.
*
மேற்கூறிய கணக்கில், மக்கள் தொகை மிகுந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்றான பாரத நாட்டின் பங்கு 10 சதவிகிதம் என்று கொண்டாலும் 'எத்தனை கோடி பிராணிகள் மனித இனத்திற்காக வதைக்கப் படுகிறது' என்று எண்ணும் பொழுது உள்ளம் பதைக்கும். 'சரி நான் ஒருவன் இன்று புலாலை நிறுத்தினால் உயிர்க் கொலை நின்று விடுமா ?' என்ற கேள்வி தோன்றுவது இயல்பு.
*
உயிர்க்கொலையை முற்றிலும் ஒழித்து விட முடியாது. உண்மை; எனினும் நம்மை நாம் பாவச் செயலில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலும். நம்மைக் கருணையுள்ளவராக பரிணமித்துக் கொள்ள இயலும். இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக்கிக் கொள்ள இயலும். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் வள்ளலார் (சிவ சிவ)..

Friday, May 22, 2015

கீழே வந்தவன் திளைத்திருப்பான்

உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)[falls.JPG]
இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத் தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.
உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?
ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக் கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக் கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப் பாறைகள். அத் தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்க வைத்துக் கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.

கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது ....
 அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோ

எளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.

Thursday, April 16, 2015

நம்பினார் கெடுவதில்லை!

ஒரு மடத்தில் இருந்த துறவி, ஏழைகளுக்கு விருந்தளிக்க விரும்பினார். ஆனால், கையில் பணமில்லை.
""கடவுளே! விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று மட்டும் வேண்டிக் கொண்டார். 
தன் சீடர்களை அழைத்து, விருந்துக்கான ஏற்பாட்டைச் செய்யும்படி கூறினார்.
விருந்து அன்று ஏராளமான முதியவர்கள் ஆசையோடு காத்திருந்தனர். தட்டு, தண்ணீர் வைத்தாகி விட்டது.
சீடர்கள், தங்கள் மனதிற்குள், ""நம் குருவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலும்! உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் 
முதியோர்கள் அமர்ந்தால், அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது கூட இவருக்கு தெரியாதா...'' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
நேரம் கடந்தது.
சீடன் ஒருவன் குருவிடம், "இப்போது என்ன செய்வது?'' என்றான்.
"கவலை வேண்டாம். உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு. எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்'' என்றார்.
என்ன நடக்கப்போகிறதோ என எல்லாரும் திகைத்து நிற்க, குரு மனஒருமையுடன் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது, வாசலுக்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவும் இருந்தது.
அந்த வண்டியை ஓட்டி வந்தவர் குருவிடம், ""குருவே! எங்கள் முதலாளி இந்த விருந்தை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.
நடந்த விஷயம் இது தான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தினால் விருந்து தடைபட்டதால், உணவை ஏழைகளுக்கு வழங்க முடிவெடுத்து அனுப்பி வைத்தார்.
"பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால், இந்த உணவு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி சொல்லி விருந்தை பரிமாறுவோம்,'' என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். எதிர்பார்த்ததை விட விருந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. 

Monday, April 13, 2015

நாம் பேசுவதை பற்றி விதுரர் சொன்னது ....

விதுரர் எம தர்மராஜரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு இஷ்டமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்.
பேசுவதில் சிறந்தது எது என விதுர நீதியில் விதுரர் என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போம்..
நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக துன்பமோ மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும்.
மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம் மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார்.
பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர்

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர். வசுதேவரின் சகோதரி குந்தியின் மகன் அர்ஜுனன். மற்றவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர்.  ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசித்தது பகவத் கீதை.   தன் அவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லும் முன் உத்தவருக்கு உபதேசித்தது உத்தவ கீதை. பாகவதத்தில் ஹரிதாஸர் என்ற பட்டத்தைப் பெற்றவர்கள் உத்தவர், யுதிஷ்டிரர், கோவர்த்தனகிரி ஆகிய மூவரே. கம்ச வதத்திற்குப் பின் கிருஷ்ணர் பிருந்தாவன கோபிகைகளுக்கு உபதேசிக்க உத்தவரை அனுப்பினார். உத்தவரின் உபதேசம் கேட்ட ராதை முதலானோர் தம் பக்தியை மனமுருக எடுத்துச் சொன்ன பாடல்தான் ப்ரமர கீதை (வண்டின் கீதம்). அவதாரம் முடியப் போகிற நிலையில் கிருஷ்ணர் உத்தவர் விரும்பியதைக் கேட்கும்படி கோரினார். எதையும் அவர் கேட்டதில்லை. இனி கேட்கவும் விரும்பாதவர். ஆயினும் தயங்கி, கிருஷ்ணா, எனது நீண்ட கால ஒரு சந்தேகத்தைத் தீர்ப்பாயா? என்றார். கிருஷ்ணர் ஊக்குவிக்க உத்தவர் கேட்டார். 

கண்ணா, உன்னை லோக ரட்சகன், பரந்தாமன் என்று உலகம் போற்றுகிறது. ஆனால் நீயோ உடன் படித்த குசேலனை நீண்ட நாள் வறுமையில் வாடச் செய்தாய். கோபிகைளைத் தவிக்க விட்டு கோபிகா கீதம் பாடி ஆடச் செய்தாய். உன்னிடமே தஞ்சம் புகுந்த பாண்டவர்களைச் சூதாட்டத்தில் அனைத்தையும் சகுனியிடம் இழக்க வைத்து வனவாசம், அஞ்ஞாத வாசம் என அலைய வைத்தாய். திரௌபதியை மான பங்கத்தில் வாட்டி, கடைசியில்தான் காப்பாற்றினாய். நீ நினைத்திருந்தால் இவற்றையெல்லாம் நடக்காமல் தடுத்து அவர்களுக்குச் சுகம் அளித்திருக்க முடியாதா?கிருஷ்ணர் பொறுமையாகக் கூறினார்: அன்பு நண்பா, நீ சொன்னது உண்மையே. ஆனால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் இருந்த காரணத்தை நீ அறியாததால் இப்படிப் பேசுகிறாய்.  நானும் குசேலனும் சமித்துக்களைத் திரட்டக் காட்டுக்குப் போனோம். அப்போது குருபத்தினி எங்கள் இருவருக்கும் நான்கு பிடி அவலை குசேலனிடம் கொடுத்தனுப்பினாள். நல்ல மழையில் நாங்கள் குளிரில் வாடியபோது குசேலன் என் பங்கான இரு பிடி அவலையும் சேர்த்துச் சாப்பிட்டான். அதே இரண்டு பிடி அவல் அவன் எனக்குத் தரும் வரை அவன் ஏழ்மையில் வாடும்படி அவனது வினை செயல் பட்டது. 

கோபியர் ஒவ்வொருவருக்கும் நான் அடிமை, அவர்களிடம் மயங்கிக் கிடக்கிறேன் என்று கர்வம் கொண்டனர். அந்த எண்ணத்தை அகற்றச் சிறிது நேரம் மறைந்து அவர்களைத் தவிக்கச் செய்தேன். சூதாடுவது தவறு எனத் தெரிந்திருந்தும் எனக்குத் தெரிந்தால் நான் தடுத்து விடுவேன் என எண்ணி நான் அங்கு வந்து உட்கார்ந்து விடக்கூடாதே என்று பாண்டவர்கள் வேண்டியதால் நான் மண்டபத்தின் நுழைவாயிலிலே காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாது போயிற்று.  எனக்குப் பதிலாக சகுனி ஆடுவார் என்று துரியோதனன் கூறியபோது, எனக்குப் பதிலாக கிருஷ்ணர் ஆடுவார் என்று தர்மபுத்திரர் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.  தன்னால் தனது மானத்தைக் காத்துக் கொள்ள முடியும் என முதலில் நம்பிய திரௌபதி முடிவில் தன்னால் ஏதும் ஆகாது என்று உணர்ந்து என்னை அழைத்தபோதுதான் என்னால் ரட்சிக்க முடிந்தது.  என் பக்கபலம் இருந்ததால்தான் பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞாத வாசம் இவற்றைக் கடந்து போரிலும் வெற்றி பெற முடிந்தது. என்னைச் சரணடைந்தவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை. 

அவரவர் வினைகளுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது. நான் அதை இயக்குவதுமில்லை. அதில் தலையிடுவதுமில்லை. உள்ளே இருந்து நடப்பதை எல்லாம் நெருக்கமாகப் பார்த்து வரும் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எவரும் உணர்ந்து விட்டால் என்னை வைத்துக்கொண்டு எந்தத் தவற்றையோ, பாவத்தையோ செய்யத் தயங்குவார்கள். எனக்குத் தெரியாமல் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு தவறு செய்யும்போது அதற்கு அவரவர் பொறுப்பேற்க வேண்டும். இல்லை எனில் உணரவும் மாட்டார்கள், மீண்டும் தவறு செய்து கொண்டிருப்பார்கள்.  கீதையில் அர்ஜுனனுக்கு உரைத்தது போலவே உத்தவருக்கும் கிருஷ்ணர் ஆத்ம தத்துவத்தை உத்தவகீதை மூலம் உணர்த்தினார். தெளிவடைந்த உத்தவர் பத்ரிகாச்ரம் சென்று தவமியற்றி பரமபதம் அடைந்தார்.  பக்தி யோகம் மறைந்து அதை முறைப்படி போதிக்கத் தகுந்த குருவின்றி மக்கள் தவித்த நிலையில் ஸ்ரீகிருஷ்ணரின் திருவுளப்படி பண்டரிபுரத்தில் நாமதேவர் என்ற பெயருடன் அவதரித்தவர் உத்தவரே என்பது நம்பிக்கை.

Monday, March 30, 2015

ஓஷோ முத்துக்கள்


உயிருக்குயிரான தோழா!
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ?
காலம் வென்றுவிட்டதே உன்னை,
உன் உடலில் பலமில்லை,
கண்ணில் காதலில்லை,
மூளையில் பகுத்தறிவில்லை.
நீ உன் பேராசையில்..........
தங்கத்தைத் தேடி நிலத்தை உழுவதில் உன்னை மறந்துவிட்டாய்,
கண்ணை விற்று ஓவியம் வாங்கி என்ன பயன் ?
எனக்கு நெருக்கமான நெஞ்சங்களே!
புதையலைத் தேடி பூமியை மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்,
அது உனக்குள் புதைந்திருக்கிறது!
இந்த போராட்ட பூமியை விட்டு சிறிது விலகு,
கண்ணை மூடி தளர்வாய் அமரு,
இதயத்தின் முணுமுணுப்பு கேட்கிறதா?
உன்னை முழுதாய் சேகரித்துக்கொண்டு அந்தக் குரலின்
பின்னே போ,
உடனே நீ சொர்க்கத்திலிருப்பாய்!
மலர்கள் உன்னை மலர வைக்கும்,
மரம் காற்றோடு சேர்ந்து சிரிப்பூட்டும்,
புல்லும் உன்னிடம் சேதி சொல்லும்,
விலங்குகள் விளையாட அழைக்கும்,
நீ மகிழ்ச்சியின் அதிகச்சுமை தாங்காமல் ஆனந்தக்கூத்தில்
அன்பைப் பொழிவாய்!
நீ கொடுத்த கணமே, அது பலகோடி மடங்காய்
திரும்பப் பிறக்கும்!
இதுதான் வாழ்வுக் கணக்கு!
ஓ! கணக்கில் அடங்கிவிட்ட என் நண்பனே!
இறந்தவைகளை எண்ணுவதை நிறுத்து!
உயிருள்ள ஒரு விதை ஒருகோடி மரங்களைப் படைக்கும்!
இதுதான் வாழ்க்கைக் கணக்கு!
வா, சேர்ந்து ஆடுவோம்,!
அன்பை, நேசத்தை, அமரத்துவத்தை ஆனந்திப்போம்!!
சூரிய ஒளி தழுவும் சிகரங்களில் நாம் சேர்ந்து அமர்வோம்!
இருண்ட பொந்துகளில் அல்ல,
ஒவ்வொரு இரவும் வெவ்வேறு நிலவின் அடியில்
விருந்துண்போம் !

Friday, March 13, 2015

ஓஷோவின் விளக்கம்


பொறுப்போடிருப்பது என்பது என்ன – பகுதி - 1
விழிப்புணர்வோடிருக்கும் மனிதன் சுதந்திரமானவன். அவன் செயல் செய்ய நினைக்கும்போது அவன் செய்கிறான். அப்போது அவன் அதை அனுபவித்து செய்கிறான், ஏனெனில் அது அவனுடைய இயல்பிலிருந்து தானாகவே வருகிறது.
ஆனால் உண்மையிலேயே இந்த மதங்கள் மக்களை மிகவும் மோசமாக குழப்பி வைத்திருக்கிறது. உன்னை விழிப்படைய செய்வதற்கு பதிலாக அவை உனக்கு பத்து கட்டளைகள் கொடுத்து வைத்திருக்கிறது. நீ எதை தேர்ந்தெடுக்க வேண்டும், எதை தேர்ந்தெடுக்கக் கூடாது என அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் உனக்கு பொறுப்புகளையும் கடமைகளையும் கொடுத்திருக்கிறார்கள்.
விழிப்புணர்வுள்ள மனிதனுக்கு பொறுப்புக்களோ, கடமைகளோ, தேர்ந்தெடுப்பதோ தேவையில்லை. அப்போதுதான் சரியான சமயத்தில் சரியான செயலை செய்ய அவன் திறமையுள்ளவனாக இருப்பான்.
நான் ஒரு சிறிய கிறிஸ்துவ பள்ளியைப் பற்றிய கதை ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பாதிரியார் வாரத்திற்கு ஒரு முறை வந்து அந்த குழந்தைகளை பார்த்துவிட்டுப் போவார்.
ஒருமுறை அவர் வந்த போது குழந்தைகளிடம், “வாரத்திற்கு ஒருமுறை ஏதாவது நல்ல செயல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்”என்று கூறினார்.
ஒரு பையன்,“நல்லது என்றால் என்ன? அது நல்லது என்று நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?” எனக் கேட்டான்.
எப்போதும் பாதிரியார்கள் பதில் சொல்வதுபோல அந்த பாதிரியாரும் “மக்களுக்கு உதவுவது நல்லது, உதாரணமாக ஒரு குருட்டு மனிதன் தெருவை கடக்க அவருக்கு உதவுவது நல்லது” என்று கூறினார்,
அடுத்த முறை அவர் வந்தபோது,“கடந்த வாரத்தில் ஏதாவது நல்லது செய்தீர்களா?”என்று கேட்டார். மூன்று பையன்கள் எழுந்து நின்றனர். பாதிரியார், “சிறப்பாக இல்லை, எனினும் ஏதோ ஆரம்பிக்கபட்டுவிட்டது. நூறு பையன்களில் மூன்று பையன்கள் மட்டுமே ஏதோ நல்லது செய்திருக்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொருவராக சொல்லுங்கள், என்ன நல்லது செய்தீர்கள்?”என்று கேட்டார்.
முதல் பையன்,“நான் நீங்கள் நல்லது என உதாரணம் கூறியபடியே ஒரு குருட்டு பெண் தெருவைக் கடக்க உதவி செய்தேன்.” என்றான்.
பாதிரியார், “மிகவும் நல்லது, நீ ஒரு உண்மையான கிறிஸ்துவன்” என சொன்னார்.
இரண்டாவது பையனை,“நீ என்ன செய்தாய்?” எனக்கேட்டார்.
அவன்,“நான் செய்ததும் அதுவேதான்! ஒரு குருட்டு பெண் தெருவை கடக்க உதவி செய்தேன்” எனக் கூறினான்.
பாதிரியாருக்கு ஒரு சிறிது சந்தேகம் வந்தது. இந்த சிறிய கிராமத்தில் எப்படி இரண்டு குருட்டு பெண்கள் உதவி செய்ய கிடைத்தார்கள்? ஆனால் அது சாத்தியம்தான், நடக்காத காரியம் அல்ல. அதனால் அவர், “நீ செய்ததும் நல்ல செயல்தான்! நீயும் ஒரு சிறந்த கிறிஸ்துவன்.” என்றார். அவர் மூன்றாவது பையனைப் பார்த்து,“நீ என்ன செய்தாய்?” எனக் கேட்டார்.
அவன்,“நானும் அதையேதான் செய்தேன். ஒரு குருட்டுப் பெண் தெருவைக் கடக்க உதவி செய்தேன்” என்று கூறினான்.
இப்போது இது மிகவும் அதிகம். அந்த பாதிரியார்,“எனக்கு இந்த முழு கிராமமும் தெரியும். மூன்று வயதான குருட்டு பெண்கள் யார்?” என்று கேட்டார்.
மூன்று பையன்களும் ஒரே நேரத்தில் சத்தமிட்டனர். “அது மூன்று பேர் அல்ல. அது ஒரே பெண்தான். அவள் ரோடை கடக்க விரும்பவில்லை. அதனால் போராட வேண்டியதாக இருந்தது. ஆனால் நாங்கள் மூன்று பேராக இருந்ததால்........ அவள் கத்தி எங்களை அடித்தாள், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்துவன் கஷ்டப்பட்டாக வேண்டும். இறுதியில் நாங்கள் அவளை தெருவைக்கடந்து கொண்டு சென்று விட்டோம்.”
விழிப்புணர்வில்லாத ஒரு குருட்டு மனிதன் இது போலத்தான் எதையாவது செய்வான். இவர்கள் இதை உலகம் பூராவும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது கதையல்ல, அது உண்மை.
மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா மதத் தலைவர்களும் பிரசவ கட்டுப்பாட்டிற்கு எதிராக போதிக்கிறார்கள். கருக்கலைத்தலுக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களது விவாதம் ஒன்றேதான் – பிரசவ தடை மூலமாக கடவுள் கொடுப்பதற்கு எதிராக இருக்கிறீர்கள். அது மதத்தன்மையுடையதல்ல. – ஆனால் இந்த வித்தியாசத்தைப் பாருங்கள். கடவுள் உனக்கு கேன்சரைக் கொடுக்கும்போது, உனக்கு இருதய நோயைக் கொடுக்கும்போது, உனக்கு ஓரினச் சேர்க்கையை கொடுக்கும்போது, இறுதியாக அவர் உனக்கு நோபல் பரிசு போன்ற எய்ட்ஸ் நோயைக் கொடுக்கும் போது நீ ஏன் அவற்றை மறுதலிக்கிறாய்?
எல்லாமும் கடவுளால் கொடுக்கப்படுகிறதென்றால், “கடவுளே நீ உயர்ந்தவன், நீ எனக்கு கேன்சரைக் கொடுத்திருக்கிறாய். நன்றி” என அவற்றை நாம் நன்றியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவமனைக்குப் போகக் கூடாது, எந்த கேன்சர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கும் போகக் கூடாது, ஏனெனில் அது மதத்திற்கு எதிரானது, அது கடவுளுக்கு எதிரானது. கடவுள் உனக்கு கேன்சரைக் கொடுத்திருக்கிறார், நீ அதை ஆபரேஷன் செய்ய ஒரு மருத்துவரிடம் போவாயா? அப்படி போனால் நீ மதத்திற்கு எதிரான வழியில் செயல் படுகிறாய். ஆனால் யாரும் நீ ஏற்றுக் கொள்...... என இந்த மக்களை கேட்பதில்லை.
உண்மையில் மதம் மருத்துவமனைகளை நடத்துகிறது. குருடர்களின் கண் பார்வை திரும்ப கிடைக்க கண் மருத்துவமனைகளை நடத்துகிறது. கடவுள் அவனை குருடாக படைத்திருக்கிறார், ஆனால் கடவுளுக்கு சேவை புரியும் நீ அவனுக்கு பார்வை கிடைக்க செய்வாயா? ஆனால் இது போல விஷயங்கள் அவர்கள் மனதில் தோன்றுவதேயில்லை. அவர்கள் எதிர்க்கும் ஒரே விஷயம் பிறப்பு தடுப்புதான். ஏன்?
அது கடவுளுடன் எந்த விதத்திலும் சம்பந்தபட்டதல்ல. கடவுள் ஏதாவது பரிசு கொடுத்தால்கூட அதை - ‘நன்றி, தேவையில்லை’ - என திருப்பி கொடுக்க உனக்கு எல்லா உரிமையும் உண்டு. அதில் தவறென்ன இருக்கிறது?. உனக்கு அது தேவையில்லாவிடில் ..........அவர் ஏற்கனவே அதிக பரிசுகள் கொடுத்திருக்கிறார், நீ அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறாய், அதனால் நீ சிரமப்பட்டுக் கொண்டும் இருக்கிறாய்.
நீ அவரிடம், “இது போன்ற பரிசுகள் அனுப்புவதை நிறுத்துங்கள். என்னிடம் ஏற்கனவே அதிகம் இருக்கிறது, தேவையை விட அதிகமாகவே இருக்கிறது. உன்னுடைய பரிசுகள் இறந்து கொண்டிருக்கின்றன. எத்தியோப்பியாவில் மட்டுமே நாளென்றுக்கு ஆயிரக்கணக்கில் இறக்கின்றன. உலகம் பூராவிலும் சேர்க்கும்போது எண்ணிக்கை அதிகமானதாக இருக்கும்.” என்று கூற வேண்டும்.
ஆனால் இது கடவுளுடன் சம்பந்தப்பட்டத்தல்ல. அது பாதிரியார்களுடன் சம்பந்தபட்டது. எல்லா மதங்களும் தங்களது எண்ணிக்கையை அதிகப் படுத்துவதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. அதிக எண்ணிக்கை என்றால் அதிக அதிகாரம் அவர்கள் கையில் வரும். இல்லாவிடில் இந்த போலந்து போப் – அவரைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? ஒரு அதிசயம் நடந்து இந்த உலகத்திலுள்ள எல்லா கத்தோலிக்கர்களும் மறைந்து போய்விட்டால் இந்த போலக் போலந்துக்குத்தான் திரும்ப போக வேண்டும். அவர் என்ன செய்வார்?
அவருக்கு அதிக கத்தோலிக்கர்கள் தேவை. ஏற்கனவே ஆறுநூறு கோடி கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு அந்த எண்ணிக்கை போத வில்லை. மக்கள் பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்தால், கருகலைப்பு செய்தால், பின் கத்தோலிக்கர்கள் அனாதை ஆஸ்ரமத்தை அமைக்க முடியாது. ஏழைகளை காண முடியாது, கத்தோலிக்கர்களாக மாற்ற பிச்சைக்காரர்களை காண முடியாது.
இந்த உலகத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஏழைகள் இருக்க வேண்டும், எவ்வளவு அனாதை இல்லங்கள் இருக்க முடியுமோ அவ்வளவு இருக்க வேண்டும், கஷ்டப்படும் மக்கள் எவ்வளவு பேர் உண்டோ அவ்வளவு நல்லது, ஏனெனில் இவைதான் அவர்களுக்கு எண்ணிக்கைகளைக் கொடுக்கும். அதனால்தான் அவர்களுக்கு இதில் அக்கறை. இதே போல் ஒவ்வொரு மதமும் தங்களுக்கே உரிய வழிமுறையை வைத்துள்ளன.
உதாரணமாக முகம்மதியர்கள் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். ஒரு பெண் நான்கு கணவன்களை வைத்துக் கொள்ள அனுமதித்தால் மக்கள் தொகை உயராது. ஏனெனில் ஒரு கணவனோ நான்கு கணவன்களோ அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவள் ஒரே ஒரு கர்ப்பம்தான் தரிக்க முடியும். அதனால் எந்த மதமும் ஒரு மனைவிக்கு நான்கு கணவன்களை அனுமதிப்பதில்லை அப்படி இருந்தால் அது மக்கள் தொகையை சமன்படுத்தும்.
ஆனால் முகம்மதியர்கள் ஒரு கணவனுக்கு நான்கு மனைவிகள் இருக்க அனுமதிக்கின்றனர். அதனால் இப்போது அவன் ஒரு வருடத்திற்கு நான்கு குழந்தைகளை உருவாக்க முடியும். உதாரணமாக முகம்மதுவே ஒன்பது மனைவிகளை வைத்திருந்தார்.
இந்தியாவில் உள்ள ஒரு முகம்மதிய மன்னரான ஹைதராபாத் நிஜாம் ஐநூறு மனைவிகள் வைத்திருந்தார். கிட்டத்தட்ட முகம்மதியர்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை. முகம்மதியர்கள் கிறிஸ்துவர்களை விட குறைவாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முதலிடத்திற்கு வர விரும்புகிறார்கள்.
இது எண்ணிக்கை அரசியல். இதில் இல்லாத கடவுளை இழுக்கவேண்டியதில்லை. அவர்கள் கருக்கலைப்பு வாழ்வுக்கு எதிரானது, கருகலைப்பு செய்வதும் பிறப்பு தடுப்பு செய்வதும் தவறு என்று அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மனிதனின் உடலியல் புரியவில்லை. ஒவ்வொரு கலவியின் போதும் பத்து லட்சம் உயிர்கள் ஆண் விந்தில் வெளியேற்றப்படுகிறது. அதில் ஒன்றே ஒன்று கூட பிறக்காமல் போகலாம், ஏனெனில் பெண் ஒவ்வொரு முறையும் கர்ப்பமாவதில்லை. ஏதோ ஒரு தடவை ஆணின் ஏதோ ஒரு விந்து குறித்த காலநேரத்திற்குள் பெண்ணின் கர்ப்பமுட்டையை வந்தடைகிறது. அந்த காலநேரம் மிகவும் குறுகியது. வெறும் இரண்டு மணி நேரம்தான் அவற்றின் வாழ்க்கை– அதன் அளவையும் அது ஓடிக் கடக்க வேண்டிய தூரத்தையும் ஒப்பிட்டால் அது இரண்டு மைல் தூரம் ஓட வேண்டி வருகிறது. இரண்டு மைல் தூரம் எந்த வித பயிற்சியும் இல்லாமல் எந்த வித ஒத்திகையும் இன்றி, தகுதி பெறாமல், திறமையை வளர்த்துக் கொள்ளாமல் என்ன நடக்கிறதென்று கூட தெரியாமல் மற்றவர்கள் குதித்து ஓடுவதைப் பார்த்து தானும் ஓடியும் குதித்தும் கடந்து செல்ல வேண்டி வருகிறது. தாங்கள் எங்கு செல்கிறோம் என்று அவற்றிற்குத் தெரியாது, ஏன் போகிறோம் என்று தெரியாது. ஒரு விஷயம் உறுதி, அது அவர்கள் வேகமாக செல்ல வேண்டும், ஏனெனில் மற்றவர்கள் வேகமாக செல்கிறார்கள்.
அதனால்தான் இந்த உலகத்தில் ஏகப்பட்ட முட்டாள்கள் இருக்கிறார்கள், ஏனெனில் புத்திசாலி மக்கள் கூட்டத்தை தவிர்த்து விடுவர். மேலும் புத்திசாலிகள் முதலில் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். அவர்கள் தெருவோரமாக நின்றுகொண்டு நாம் எதற்காக ஓட வேண்டும் ஏன் ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் புத்திசாலிகள் சிறிது சோம்பேறிகளாக இருப்பார்கள். இந்த போக்குவரத்து நெரிசலை தெருவோரத்தில் நின்று எல்லோரும் போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு பின் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்வர்.
ஆனால் வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மணி நேரம்தான். இரண்டு மணி நேரத்திற்க்குள் அவர்கள் இறந்து போய் விடுவர். அதனால் ஒவ்வொரு கலவியின் போதும் லட்சக்கணக்கான உயிர்கள் இறக்கின்றன. ஒரு ஆண், தனது வாழ்நாளில் பதிநான்கு வயதிலிருந்து ஐம்பது வயது வரை பல தடவை கலவி செய்கிறான். ஒரு ஆணுடைய விந்துக்கள் அனைத்திற்க்கும் வாய்ப்பு கிடைக்குமானால் அவன் ஒருவனே போதும் இந்த உலகம் முழுவதும் இப்போதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கையை அடைய. ஆனால் பிரச்னை என்னவென்றால் பெண் ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையைத்தான் விடுவிக்கிறாள்.
பெண் இந்த மனித குலத்திற்க்கே மிகப் பெரிய வரம். அவளும் ஒரு லட்சம் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் விடுவித்தால், பின் அப்போது இந்த உலகில் எங்கும் இடமே இருக்காது. நீ எப்போதும் கூட்டத்திற்கு இடையேதான் இருப்பாய், உனது படுக்கையறையில் கூட. மாதம் ஒரு முட்டை என்பதே இந்த உலகம் தாங்க முடியாத அளவு இவ்வளவு கூட்டத்தை உருவாக்கியுள்ளது.
கடவுள் எங்கேயும் இல்லை. இல்லாவிடில் ஏன் இந்த முட்டாளதனம்? நீ எல்லா மடத்தனங்களையும் கணக்கிட்டால் அவை உனக்கு கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்தைத்தான் தரும். ஒரு கலவியின் போது லட்சக்கணக்கான விந்துக்கள் விடுவிக்கப்படுவதும் ஒன்றே ஒன்றுதான் அதில் பிறக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதும் எதற்காக? ஏன் லட்சமோ அல்லது அதற்கு மேலோ உயிர்கள் அதில் இருக்க வேண்டும் ?
கடவுள் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது கணக்கு தெரியாதவராக இருக்க வேண்டும்...... அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாத ஒருவரை மடையன் என்று சொல்வதற்கு பதிலாக ஏனெனில் இப்படி சொல்வது கண்டனம் செய்வது போல இருப்பதால் இப்படி சொல்வதற்கு பதிலாக அவர் இல்லையென்று சொல்லிவிடலாம். கடவுள் இல்லையென்று சொல்வது அவரிடம் நாம் கருணையோடு இருப்பதாகும். அப்போது நாம் அவரை எல்லாவித மடத்தனத்திலிருந்தும், எல்லா வித குற்றங்களிலிருந்தும் கொலை, கொள்ளை, கற்பழித்தல் போன்ற எல்லாவிதமான செயல்களிலிருந்தும் நாம் அவரை விடுதலை செய்கிறோம், ஏனெனில் இவைதான் அவரது பரிசுகள்.
குருமார்களுக்கு உன் மேல் அக்கறை கிடையாது. அவர்கள் உன்னுடைய விழிப்புணர்வின் மீது அக்கறை படுவதில்லை, ஏனெனில் விழிப்பு பெற்ற மனிதன் இந்த உலகம் ஏற்கனவே அதிக மக்கள் தொகையால் அவதிப் படுவதைப் பார்ப்பான். இந்த உலகத்துக்கு மேலும் அதிக குழந்தைகளை கொண்டு வருவது மேலும் அதிக ஏழ்மையை, பசியை, படிப்பறிவின்மையை, பட்டினியைத்தான் கொண்டுவரும் என அவனுக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
விழிப்புணர்வுடைய மனிதனுக்கு பிறப்பு தடுப்பை உபயோகிப்பதைப் பற்றி ஏந்த மாற்றுக் கருத்தும் இருக்காது, அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதற்கு அவனது விழிப்புணர்வே போதுமானது அவன் அவனது விழிப்புணர்வு அனுமதிப்பதைத்தான் செய்வான்.
From Death to Deathlessness
Chapter #27