Monday, April 13, 2015

நாம் பேசுவதை பற்றி விதுரர் சொன்னது ....

விதுரர் எம தர்மராஜரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு இஷ்டமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்.
பேசுவதில் சிறந்தது எது என விதுர நீதியில் விதுரர் என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போம்..
நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக துன்பமோ மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும்.
மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம் மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார்.
பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர்

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர். வசுதேவரின் சகோதரி குந்தியின் மகன் அர்ஜுனன். மற்றவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர்.  ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசித்தது பகவத் கீதை.   தன் அவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லும் முன் உத்தவருக்கு உபதேசித்தது உத்தவ கீதை. பாகவதத்தில் ஹரிதாஸர் என்ற பட்டத்தைப் பெற்றவர்கள் உத்தவர், யுதிஷ்டிரர், கோவர்த்தனகிரி ஆகிய மூவரே. கம்ச வதத்திற்குப் பின் கிருஷ்ணர் பிருந்தாவன கோபிகைகளுக்கு உபதேசிக்க உத்தவரை அனுப்பினார். உத்தவரின் உபதேசம் கேட்ட ராதை முதலானோர் தம் பக்தியை மனமுருக எடுத்துச் சொன்ன பாடல்தான் ப்ரமர கீதை (வண்டின் கீதம்). அவதாரம் முடியப் போகிற நிலையில் கிருஷ்ணர் உத்தவர் விரும்பியதைக் கேட்கும்படி கோரினார். எதையும் அவர் கேட்டதில்லை. இனி கேட்கவும் விரும்பாதவர். ஆயினும் தயங்கி, கிருஷ்ணா, எனது நீண்ட கால ஒரு சந்தேகத்தைத் தீர்ப்பாயா? என்றார். கிருஷ்ணர் ஊக்குவிக்க உத்தவர் கேட்டார். 

கண்ணா, உன்னை லோக ரட்சகன், பரந்தாமன் என்று உலகம் போற்றுகிறது. ஆனால் நீயோ உடன் படித்த குசேலனை நீண்ட நாள் வறுமையில் வாடச் செய்தாய். கோபிகைளைத் தவிக்க விட்டு கோபிகா கீதம் பாடி ஆடச் செய்தாய். உன்னிடமே தஞ்சம் புகுந்த பாண்டவர்களைச் சூதாட்டத்தில் அனைத்தையும் சகுனியிடம் இழக்க வைத்து வனவாசம், அஞ்ஞாத வாசம் என அலைய வைத்தாய். திரௌபதியை மான பங்கத்தில் வாட்டி, கடைசியில்தான் காப்பாற்றினாய். நீ நினைத்திருந்தால் இவற்றையெல்லாம் நடக்காமல் தடுத்து அவர்களுக்குச் சுகம் அளித்திருக்க முடியாதா?கிருஷ்ணர் பொறுமையாகக் கூறினார்: அன்பு நண்பா, நீ சொன்னது உண்மையே. ஆனால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் இருந்த காரணத்தை நீ அறியாததால் இப்படிப் பேசுகிறாய்.  நானும் குசேலனும் சமித்துக்களைத் திரட்டக் காட்டுக்குப் போனோம். அப்போது குருபத்தினி எங்கள் இருவருக்கும் நான்கு பிடி அவலை குசேலனிடம் கொடுத்தனுப்பினாள். நல்ல மழையில் நாங்கள் குளிரில் வாடியபோது குசேலன் என் பங்கான இரு பிடி அவலையும் சேர்த்துச் சாப்பிட்டான். அதே இரண்டு பிடி அவல் அவன் எனக்குத் தரும் வரை அவன் ஏழ்மையில் வாடும்படி அவனது வினை செயல் பட்டது. 

கோபியர் ஒவ்வொருவருக்கும் நான் அடிமை, அவர்களிடம் மயங்கிக் கிடக்கிறேன் என்று கர்வம் கொண்டனர். அந்த எண்ணத்தை அகற்றச் சிறிது நேரம் மறைந்து அவர்களைத் தவிக்கச் செய்தேன். சூதாடுவது தவறு எனத் தெரிந்திருந்தும் எனக்குத் தெரிந்தால் நான் தடுத்து விடுவேன் என எண்ணி நான் அங்கு வந்து உட்கார்ந்து விடக்கூடாதே என்று பாண்டவர்கள் வேண்டியதால் நான் மண்டபத்தின் நுழைவாயிலிலே காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாது போயிற்று.  எனக்குப் பதிலாக சகுனி ஆடுவார் என்று துரியோதனன் கூறியபோது, எனக்குப் பதிலாக கிருஷ்ணர் ஆடுவார் என்று தர்மபுத்திரர் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.  தன்னால் தனது மானத்தைக் காத்துக் கொள்ள முடியும் என முதலில் நம்பிய திரௌபதி முடிவில் தன்னால் ஏதும் ஆகாது என்று உணர்ந்து என்னை அழைத்தபோதுதான் என்னால் ரட்சிக்க முடிந்தது.  என் பக்கபலம் இருந்ததால்தான் பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞாத வாசம் இவற்றைக் கடந்து போரிலும் வெற்றி பெற முடிந்தது. என்னைச் சரணடைந்தவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை. 

அவரவர் வினைகளுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது. நான் அதை இயக்குவதுமில்லை. அதில் தலையிடுவதுமில்லை. உள்ளே இருந்து நடப்பதை எல்லாம் நெருக்கமாகப் பார்த்து வரும் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எவரும் உணர்ந்து விட்டால் என்னை வைத்துக்கொண்டு எந்தத் தவற்றையோ, பாவத்தையோ செய்யத் தயங்குவார்கள். எனக்குத் தெரியாமல் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு தவறு செய்யும்போது அதற்கு அவரவர் பொறுப்பேற்க வேண்டும். இல்லை எனில் உணரவும் மாட்டார்கள், மீண்டும் தவறு செய்து கொண்டிருப்பார்கள்.  கீதையில் அர்ஜுனனுக்கு உரைத்தது போலவே உத்தவருக்கும் கிருஷ்ணர் ஆத்ம தத்துவத்தை உத்தவகீதை மூலம் உணர்த்தினார். தெளிவடைந்த உத்தவர் பத்ரிகாச்ரம் சென்று தவமியற்றி பரமபதம் அடைந்தார்.  பக்தி யோகம் மறைந்து அதை முறைப்படி போதிக்கத் தகுந்த குருவின்றி மக்கள் தவித்த நிலையில் ஸ்ரீகிருஷ்ணரின் திருவுளப்படி பண்டரிபுரத்தில் நாமதேவர் என்ற பெயருடன் அவதரித்தவர் உத்தவரே என்பது நம்பிக்கை.

Monday, March 30, 2015

ஓஷோ முத்துக்கள்


உயிருக்குயிரான தோழா!
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ?
காலம் வென்றுவிட்டதே உன்னை,
உன் உடலில் பலமில்லை,
கண்ணில் காதலில்லை,
மூளையில் பகுத்தறிவில்லை.
நீ உன் பேராசையில்..........
தங்கத்தைத் தேடி நிலத்தை உழுவதில் உன்னை மறந்துவிட்டாய்,
கண்ணை விற்று ஓவியம் வாங்கி என்ன பயன் ?
எனக்கு நெருக்கமான நெஞ்சங்களே!
புதையலைத் தேடி பூமியை மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்,
அது உனக்குள் புதைந்திருக்கிறது!
இந்த போராட்ட பூமியை விட்டு சிறிது விலகு,
கண்ணை மூடி தளர்வாய் அமரு,
இதயத்தின் முணுமுணுப்பு கேட்கிறதா?
உன்னை முழுதாய் சேகரித்துக்கொண்டு அந்தக் குரலின்
பின்னே போ,
உடனே நீ சொர்க்கத்திலிருப்பாய்!
மலர்கள் உன்னை மலர வைக்கும்,
மரம் காற்றோடு சேர்ந்து சிரிப்பூட்டும்,
புல்லும் உன்னிடம் சேதி சொல்லும்,
விலங்குகள் விளையாட அழைக்கும்,
நீ மகிழ்ச்சியின் அதிகச்சுமை தாங்காமல் ஆனந்தக்கூத்தில்
அன்பைப் பொழிவாய்!
நீ கொடுத்த கணமே, அது பலகோடி மடங்காய்
திரும்பப் பிறக்கும்!
இதுதான் வாழ்வுக் கணக்கு!
! கணக்கில் அடங்கிவிட்ட என் நண்பனே!
இறந்தவைகளை எண்ணுவதை நிறுத்து!
உயிருள்ள ஒரு விதை ஒருகோடி மரங்களைப் படைக்கும்!
இதுதான் வாழ்க்கைக் கணக்கு!
வா, சேர்ந்து ஆடுவோம்,!
அன்பை, நேசத்தை, அமரத்துவத்தை ஆனந்திப்போம்!!
சூரிய ஒளி தழுவும் சிகரங்களில் நாம் சேர்ந்து அமர்வோம்!
இருண்ட பொந்துகளில் அல்ல,
ஒவ்வொரு இரவும் வெவ்வேறு நிலவின் அடியில்
விருந்துண்போம் !

Friday, March 13, 2015

ஓஷோவின் விளக்கம்


பொறுப்போடிருப்பது என்பது என்ன – பகுதி - 1
விழிப்புணர்வோடிருக்கும் மனிதன் சுதந்திரமானவன். அவன் செயல் செய்ய நினைக்கும்போது அவன் செய்கிறான். அப்போது அவன் அதை அனுபவித்து செய்கிறான், ஏனெனில் அது அவனுடைய இயல்பிலிருந்து தானாகவே வருகிறது.
ஆனால் உண்மையிலேயே இந்த மதங்கள் மக்களை மிகவும் மோசமாக குழப்பி வைத்திருக்கிறது. உன்னை விழிப்படைய செய்வதற்கு பதிலாக அவை உனக்கு பத்து கட்டளைகள் கொடுத்து வைத்திருக்கிறது. நீ எதை தேர்ந்தெடுக்க வேண்டும், எதை தேர்ந்தெடுக்கக் கூடாது என அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் உனக்கு பொறுப்புகளையும் கடமைகளையும் கொடுத்திருக்கிறார்கள்.
விழிப்புணர்வுள்ள மனிதனுக்கு பொறுப்புக்களோ, கடமைகளோ, தேர்ந்தெடுப்பதோ தேவையில்லை. அப்போதுதான் சரியான சமயத்தில் சரியான செயலை செய்ய அவன் திறமையுள்ளவனாக இருப்பான்.
நான் ஒரு சிறிய கிறிஸ்துவ பள்ளியைப் பற்றிய கதை ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பாதிரியார் வாரத்திற்கு ஒரு முறை வந்து அந்த குழந்தைகளை பார்த்துவிட்டுப் போவார்.
ஒருமுறை அவர் வந்த போது குழந்தைகளிடம், வாரத்திற்கு ஒருமுறை ஏதாவது நல்ல செயல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்.
ஒரு பையன்,நல்லது என்றால் என்ன? அது நல்லது என்று நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?” எனக் கேட்டான்.
எப்போதும் பாதிரியார்கள் பதில் சொல்வதுபோல அந்த பாதிரியாரும் மக்களுக்கு உதவுவது நல்லது, உதாரணமாக ஒரு குருட்டு மனிதன் தெருவை கடக்க அவருக்கு உதவுவது நல்லது என்று கூறினார்,
அடுத்த முறை அவர் வந்தபோது,கடந்த வாரத்தில் ஏதாவது நல்லது செய்தீர்களா?”என்று கேட்டார். மூன்று பையன்கள் எழுந்து நின்றனர். பாதிரியார், சிறப்பாக இல்லை, எனினும் ஏதோ ஆரம்பிக்கபட்டுவிட்டது. நூறு பையன்களில் மூன்று பையன்கள் மட்டுமே ஏதோ நல்லது செய்திருக்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொருவராக சொல்லுங்கள், என்ன நல்லது செய்தீர்கள்?”என்று கேட்டார்.
முதல் பையன்,நான் நீங்கள் நல்லது என உதாரணம் கூறியபடியே ஒரு குருட்டு பெண் தெருவைக் கடக்க உதவி செய்தேன். என்றான்.
பாதிரியார், மிகவும் நல்லது, நீ ஒரு உண்மையான கிறிஸ்துவன் என சொன்னார்.
இரண்டாவது பையனை,நீ என்ன செய்தாய்?” எனக்கேட்டார்.
அவன்,நான் செய்ததும் அதுவேதான்! ஒரு குருட்டு பெண் தெருவை கடக்க உதவி செய்தேன் எனக் கூறினான்.
பாதிரியாருக்கு ஒரு சிறிது சந்தேகம் வந்தது. இந்த சிறிய கிராமத்தில் எப்படி இரண்டு குருட்டு பெண்கள் உதவி செய்ய கிடைத்தார்கள்? ஆனால் அது சாத்தியம்தான், நடக்காத காரியம் அல்ல. அதனால் அவர், நீ செய்ததும் நல்ல செயல்தான்! நீயும் ஒரு சிறந்த கிறிஸ்துவன். என்றார். அவர் மூன்றாவது பையனைப் பார்த்து,நீ என்ன செய்தாய்?” எனக் கேட்டார்.
அவன்,நானும் அதையேதான் செய்தேன். ஒரு குருட்டுப் பெண் தெருவைக் கடக்க உதவி செய்தேன் என்று கூறினான்.
இப்போது இது மிகவும் அதிகம். அந்த பாதிரியார்,எனக்கு இந்த முழு கிராமமும் தெரியும். மூன்று வயதான குருட்டு பெண்கள் யார்?” என்று கேட்டார்.
மூன்று பையன்களும் ஒரே நேரத்தில் சத்தமிட்டனர். அது மூன்று பேர் அல்ல. அது ஒரே பெண்தான். அவள் ரோடை கடக்க விரும்பவில்லை. அதனால் போராட வேண்டியதாக இருந்தது. ஆனால் நாங்கள் மூன்று பேராக இருந்ததால்........ அவள் கத்தி எங்களை அடித்தாள், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்துவன் கஷ்டப்பட்டாக வேண்டும். இறுதியில் நாங்கள் அவளை தெருவைக்கடந்து கொண்டு சென்று விட்டோம்.
விழிப்புணர்வில்லாத ஒரு குருட்டு மனிதன் இது போலத்தான் எதையாவது செய்வான். இவர்கள் இதை உலகம் பூராவும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது கதையல்ல, அது உண்மை.
மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா மதத் தலைவர்களும் பிரசவ கட்டுப்பாட்டிற்கு எதிராக போதிக்கிறார்கள். கருக்கலைத்தலுக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களது விவாதம் ஒன்றேதான் – பிரசவ தடை மூலமாக கடவுள் கொடுப்பதற்கு எதிராக இருக்கிறீர்கள். அது மதத்தன்மையுடையதல்ல. – ஆனால் இந்த வித்தியாசத்தைப் பாருங்கள். கடவுள் உனக்கு கேன்சரைக் கொடுக்கும்போது, உனக்கு இருதய நோயைக் கொடுக்கும்போது, உனக்கு ஓரினச் சேர்க்கையை கொடுக்கும்போது, இறுதியாக அவர் உனக்கு நோபல் பரிசு போன்ற எய்ட்ஸ் நோயைக் கொடுக்கும் போது நீ ஏன் அவற்றை மறுதலிக்கிறாய்?
எல்லாமும் கடவுளால் கொடுக்கப்படுகிறதென்றால், கடவுளே நீ உயர்ந்தவன், நீ எனக்கு கேன்சரைக் கொடுத்திருக்கிறாய். நன்றி என அவற்றை நாம் நன்றியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவமனைக்குப் போகக் கூடாது, எந்த கேன்சர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கும் போகக் கூடாது, ஏனெனில் அது மதத்திற்கு எதிரானது, அது கடவுளுக்கு எதிரானது. கடவுள் உனக்கு கேன்சரைக் கொடுத்திருக்கிறார், நீ அதை ஆபரேஷன் செய்ய ஒரு மருத்துவரிடம் போவாயா? அப்படி போனால் நீ மதத்திற்கு எதிரான வழியில் செயல் படுகிறாய். ஆனால் யாரும் நீ ஏற்றுக் கொள்...... என இந்த மக்களை கேட்பதில்லை.
உண்மையில் மதம் மருத்துவமனைகளை நடத்துகிறது. குருடர்களின் கண் பார்வை திரும்ப கிடைக்க கண் மருத்துவமனைகளை நடத்துகிறது. கடவுள் அவனை குருடாக படைத்திருக்கிறார், ஆனால் கடவுளுக்கு சேவை புரியும் நீ அவனுக்கு பார்வை கிடைக்க செய்வாயா? ஆனால் இது போல விஷயங்கள் அவர்கள் மனதில் தோன்றுவதேயில்லை. அவர்கள் எதிர்க்கும் ஒரே விஷயம் பிறப்பு தடுப்புதான். ஏன்?
அது கடவுளுடன் எந்த விதத்திலும் சம்பந்தபட்டதல்ல. கடவுள் ஏதாவது பரிசு கொடுத்தால்கூட அதை - நன்றி, தேவையில்லை - என திருப்பி கொடுக்க உனக்கு எல்லா உரிமையும் உண்டு. அதில் தவறென்ன இருக்கிறது?. உனக்கு அது தேவையில்லாவிடில் ..........அவர் ஏற்கனவே அதிக பரிசுகள் கொடுத்திருக்கிறார், நீ அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறாய், அதனால் நீ சிரமப்பட்டுக் கொண்டும் இருக்கிறாய்.
நீ அவரிடம், இது போன்ற பரிசுகள் அனுப்புவதை நிறுத்துங்கள். என்னிடம் ஏற்கனவே அதிகம் இருக்கிறது, தேவையை விட அதிகமாகவே இருக்கிறது. உன்னுடைய பரிசுகள் இறந்து கொண்டிருக்கின்றன. எத்தியோப்பியாவில் மட்டுமே நாளென்றுக்கு ஆயிரக்கணக்கில் இறக்கின்றன. உலகம் பூராவிலும் சேர்க்கும்போது எண்ணிக்கை அதிகமானதாக இருக்கும். என்று கூற வேண்டும்.
ஆனால் இது கடவுளுடன் சம்பந்தப்பட்டத்தல்ல. அது பாதிரியார்களுடன் சம்பந்தபட்டது. எல்லா மதங்களும் தங்களது எண்ணிக்கையை அதிகப் படுத்துவதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. அதிக எண்ணிக்கை என்றால் அதிக அதிகாரம் அவர்கள் கையில் வரும். இல்லாவிடில் இந்த போலந்து போப் – அவரைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? ஒரு அதிசயம் நடந்து இந்த உலகத்திலுள்ள எல்லா கத்தோலிக்கர்களும் மறைந்து போய்விட்டால் இந்த போலக் போலந்துக்குத்தான் திரும்ப போக வேண்டும். அவர் என்ன செய்வார்?
அவருக்கு அதிக கத்தோலிக்கர்கள் தேவை. ஏற்கனவே ஆறுநூறு கோடி கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு அந்த எண்ணிக்கை போத வில்லை. மக்கள் பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்தால், கருகலைப்பு செய்தால், பின் கத்தோலிக்கர்கள் அனாதை ஆஸ்ரமத்தை அமைக்க முடியாது. ஏழைகளை காண முடியாது, கத்தோலிக்கர்களாக மாற்ற பிச்சைக்காரர்களை காண முடியாது.
இந்த உலகத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஏழைகள் இருக்க வேண்டும், எவ்வளவு அனாதை இல்லங்கள் இருக்க முடியுமோ அவ்வளவு இருக்க வேண்டும், கஷ்டப்படும் மக்கள் எவ்வளவு பேர் உண்டோ அவ்வளவு நல்லது, ஏனெனில் இவைதான் அவர்களுக்கு எண்ணிக்கைகளைக் கொடுக்கும். அதனால்தான் அவர்களுக்கு இதில் அக்கறை. இதே போல் ஒவ்வொரு மதமும் தங்களுக்கே உரிய வழிமுறையை வைத்துள்ளன.
உதாரணமாக முகம்மதியர்கள் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். ஒரு பெண் நான்கு கணவன்களை வைத்துக் கொள்ள அனுமதித்தால் மக்கள் தொகை உயராது. ஏனெனில் ஒரு கணவனோ நான்கு கணவன்களோ அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவள் ஒரே ஒரு கர்ப்பம்தான் தரிக்க முடியும். அதனால் எந்த மதமும் ஒரு மனைவிக்கு நான்கு கணவன்களை அனுமதிப்பதில்லை அப்படி இருந்தால் அது மக்கள் தொகையை சமன்படுத்தும்.
ஆனால் முகம்மதியர்கள் ஒரு கணவனுக்கு நான்கு மனைவிகள் இருக்க அனுமதிக்கின்றனர். அதனால் இப்போது அவன் ஒரு வருடத்திற்கு நான்கு குழந்தைகளை உருவாக்க முடியும். உதாரணமாக முகம்மதுவே ஒன்பது மனைவிகளை வைத்திருந்தார்.
இந்தியாவில் உள்ள ஒரு முகம்மதிய மன்னரான ஹைதராபாத் நிஜாம் ஐநூறு மனைவிகள் வைத்திருந்தார். கிட்டத்தட்ட முகம்மதியர்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை. முகம்மதியர்கள் கிறிஸ்துவர்களை விட குறைவாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முதலிடத்திற்கு வர விரும்புகிறார்கள்.
இது எண்ணிக்கை அரசியல். இதில் இல்லாத கடவுளை இழுக்கவேண்டியதில்லை. அவர்கள் கருக்கலைப்பு வாழ்வுக்கு எதிரானது, கருகலைப்பு செய்வதும் பிறப்பு தடுப்பு செய்வதும் தவறு என்று அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மனிதனின் உடலியல் புரியவில்லை. ஒவ்வொரு கலவியின் போதும் பத்து லட்சம் உயிர்கள் ஆண் விந்தில் வெளியேற்றப்படுகிறது. அதில் ஒன்றே ஒன்று கூட பிறக்காமல் போகலாம், ஏனெனில் பெண் ஒவ்வொரு முறையும் கர்ப்பமாவதில்லை. ஏதோ ஒரு தடவை ஆணின் ஏதோ ஒரு விந்து குறித்த காலநேரத்திற்குள் பெண்ணின் கர்ப்பமுட்டையை வந்தடைகிறது. அந்த காலநேரம் மிகவும் குறுகியது. வெறும் இரண்டு மணி நேரம்தான் அவற்றின் வாழ்க்கை– அதன் அளவையும் அது ஓடிக் கடக்க வேண்டிய தூரத்தையும் ஒப்பிட்டால் அது இரண்டு மைல் தூரம் ஓட வேண்டி வருகிறது. இரண்டு மைல் தூரம் எந்த வித பயிற்சியும் இல்லாமல் எந்த வித ஒத்திகையும் இன்றி, தகுதி பெறாமல், திறமையை வளர்த்துக் கொள்ளாமல் என்ன நடக்கிறதென்று கூட தெரியாமல் மற்றவர்கள் குதித்து ஓடுவதைப் பார்த்து தானும் ஓடியும் குதித்தும் கடந்து செல்ல வேண்டி வருகிறது. தாங்கள் எங்கு செல்கிறோம் என்று அவற்றிற்குத் தெரியாது, ஏன் போகிறோம் என்று தெரியாது. ஒரு விஷயம் உறுதி, அது அவர்கள் வேகமாக செல்ல வேண்டும், ஏனெனில் மற்றவர்கள் வேகமாக செல்கிறார்கள்.
அதனால்தான் இந்த உலகத்தில் ஏகப்பட்ட முட்டாள்கள் இருக்கிறார்கள், ஏனெனில் புத்திசாலி மக்கள் கூட்டத்தை தவிர்த்து விடுவர். மேலும் புத்திசாலிகள் முதலில் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். அவர்கள் தெருவோரமாக நின்றுகொண்டு நாம் எதற்காக ஓட வேண்டும் ஏன் ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் புத்திசாலிகள் சிறிது சோம்பேறிகளாக இருப்பார்கள். இந்த போக்குவரத்து நெரிசலை தெருவோரத்தில் நின்று எல்லோரும் போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு பின் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்வர்.
ஆனால் வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மணி நேரம்தான். இரண்டு மணி நேரத்திற்க்குள் அவர்கள் இறந்து போய் விடுவர். அதனால் ஒவ்வொரு கலவியின் போதும் லட்சக்கணக்கான உயிர்கள் இறக்கின்றன. ஒரு ஆண், தனது வாழ்நாளில் பதிநான்கு வயதிலிருந்து ஐம்பது வயது வரை பல தடவை கலவி செய்கிறான். ஒரு ஆணுடைய விந்துக்கள் அனைத்திற்க்கும் வாய்ப்பு கிடைக்குமானால் அவன் ஒருவனே போதும் இந்த உலகம் முழுவதும் இப்போதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கையை அடைய. ஆனால் பிரச்னை என்னவென்றால் பெண் ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையைத்தான் விடுவிக்கிறாள்.
பெண் இந்த மனித குலத்திற்க்கே மிகப் பெரிய வரம். அவளும் ஒரு லட்சம் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் விடுவித்தால், பின் அப்போது இந்த உலகில் எங்கும் இடமே இருக்காது. நீ எப்போதும் கூட்டத்திற்கு இடையேதான் இருப்பாய், உனது படுக்கையறையில் கூட. மாதம் ஒரு முட்டை என்பதே இந்த உலகம் தாங்க முடியாத அளவு இவ்வளவு கூட்டத்தை உருவாக்கியுள்ளது.
கடவுள் எங்கேயும் இல்லை. இல்லாவிடில் ஏன் இந்த முட்டாளதனம்? நீ எல்லா மடத்தனங்களையும் கணக்கிட்டால் அவை உனக்கு கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்தைத்தான் தரும். ஒரு கலவியின் போது லட்சக்கணக்கான விந்துக்கள் விடுவிக்கப்படுவதும் ஒன்றே ஒன்றுதான் அதில் பிறக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதும் எதற்காக? ஏன் லட்சமோ அல்லது அதற்கு மேலோ உயிர்கள் அதில் இருக்க வேண்டும் ?
கடவுள் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது கணக்கு தெரியாதவராக இருக்க வேண்டும்...... அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாத ஒருவரை மடையன் என்று சொல்வதற்கு பதிலாக ஏனெனில் இப்படி சொல்வது கண்டனம் செய்வது போல இருப்பதால் இப்படி சொல்வதற்கு பதிலாக அவர் இல்லையென்று சொல்லிவிடலாம். கடவுள் இல்லையென்று சொல்வது அவரிடம் நாம் கருணையோடு இருப்பதாகும். அப்போது நாம் அவரை எல்லாவித மடத்தனத்திலிருந்தும், எல்லா வித குற்றங்களிலிருந்தும் கொலை, கொள்ளை, கற்பழித்தல் போன்ற எல்லாவிதமான செயல்களிலிருந்தும் நாம் அவரை விடுதலை செய்கிறோம், ஏனெனில் இவைதான் அவரது பரிசுகள்.
குருமார்களுக்கு உன் மேல் அக்கறை கிடையாது. அவர்கள் உன்னுடைய விழிப்புணர்வின் மீது அக்கறை படுவதில்லை, ஏனெனில் விழிப்பு பெற்ற மனிதன் இந்த உலகம் ஏற்கனவே அதிக மக்கள் தொகையால் அவதிப் படுவதைப் பார்ப்பான். இந்த உலகத்துக்கு மேலும் அதிக குழந்தைகளை கொண்டு வருவது மேலும் அதிக ஏழ்மையை, பசியை, படிப்பறிவின்மையை, பட்டினியைத்தான் கொண்டுவரும் என அவனுக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
விழிப்புணர்வுடைய மனிதனுக்கு பிறப்பு தடுப்பை உபயோகிப்பதைப் பற்றி ஏந்த மாற்றுக் கருத்தும் இருக்காது, அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதற்கு அவனது விழிப்புணர்வே போதுமானது அவன் அவனது விழிப்புணர்வு அனுமதிப்பதைத்தான் செய்வான்.
From Death to Deathlessness
Chapter #27

Thursday, March 5, 2015

மரண காலம் மனிதனுக்கு மிக முக்கியமானது

அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதை மரண காலம் அவனுக்குத் தெளிவாகச் சொல்லும்.
மரண காலத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயமான அக்‌ஷர ப்ரஹ்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மிகத் தெளிவாகச் சொல்கிறார். அதற்கு அச்சாரமாக கீதையின் ஏழாம் அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தின் கடைசி சுலோகத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:
அதிபூதம், அதிவைதம், அதியக்ஞம் – இவற்றுடன் கூடியவனாகவும், எல்லாவற்றிற்கும் ஆத்மசொரூபனாகவும் உள்ள என்னை மரணத்தறுவாயிலும் கூட அறிகிறார்களோ, அத்தகைய ஒன்றிய மனதோடு கூடிய அவர்கள் என்னையே அறிகிறார்கள்- அடைகிறார்கள்.
அந்த மூன்று சொற்களும் அர்ஜுனனுக்குப் புதிதானதால் அவன் அதிபூதம் அதிவைதம் அதியக்ஞம் என்ற சொற்களுக்கு என்ன பொருள் என்றும் இந்த சரீரத்தை விட்டுப் புறப்படும் போது மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் உன்னை எப்படி அறிய வேண்டும் என்று கேட்பதில் இருந்து எட்டாம் அத்தியாயம் ஆரம்பமாகிறது.
அதற்கு பகவான் பதிலளிக்கிறார்.
“அழியும் சுபாவமுள்ளது அதிபூதம். புருஷன் அதிவைதம். இந்த உடலில் அதியக்ஞமாக இருப்பவன் நானே.
மரண காலத்திலும் என்னையே தியானித்துக் கொண்டு சரீரத்தை விட்டுச் செல்பவன் என் நிலையை அடைகிறான். அதில் சந்தேகமேயில்லை.
குந்திமகனே! மரண காலத்தில் எந்தெந்த எண்ணங்களை நினைத்தபடியாக மனிதன் சரீரத்தைத் துறக்கிறானோ எப்போது அந்த நிலையையே நினைத்ததன் பலனாக அவன் அந்தந்த நிலையையே அடைகிறான்.”
அதிபூதம் என்பது மூலப்பொருள்கள். இயற்கையாகவே தோன்றி, அழியும் சுபாவம் உள்ளது. அதில் உறைந்திருந்து அது இயங்கத் தேவையான தனிப்பட்ட சக்தி (இங்கு புருஷன் என்ற சொல் கையாளப்படுகிறது) அதிவைதம். அதில் மூல சக்தியாக இருப்பது இறைசக்தியான அதியக்ஞம்.
இந்த மூன்று பிரிவுகளின் மூலமாகவும் இயங்குவது எல்லாம் வல்ல இறைவனே. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் அணுக்கள் மூலக்கூறுகள் என்ற ஜடப்பொருள், அவற்றிற்குள் உறைந்திருக்கும் தனிப்பட்ட இயங்கு சக்தி, எல்லாவற்றையும் தீர்மானித்து இயக்கும் பிரபஞ்ச சக்தி எனச் சொல்லலாம்.
இன்றைய விஞ்ஞானிகள் அணுவையும் துளைத்தெடுத்து கடைசியில் ஜடப்பொருளாகத் தோற்றம் அளிக்கும் அணுவில் இருந்து அண்டம் வரை ஆராய்ந்து கொண்டே போனால் மிஞ்சுவது அனைத்துமே சக்தி வீச்சுக்களே, சக்தியின் பேரியக்கமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதையே தான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.
அடுத்ததாக இங்கு மரண காலத்திற்கும், அந்தக் கட்டத்தில் என்ன நினைக்கிறோம் என்பதற்கும் இவ்வளவு முக்கியத்துவம் ஸ்ரீகிருஷ்ணர் தந்திருப்பது ஏன் என்று பார்ப்போம்.
ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கையே மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பயணம் தான். மற்ற எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு முயற்சியை மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் மரணத்திற்கு அவன் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அது தானாக ஒரு நாள் நிகழும். அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. ஒரு இடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அமரும் பயணி தானாக மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக அந்த ஸ்டேஷனுக்கு அவனை ரயில் அழைத்துப் போகும். அப்படித்தான் நாமும் மரணத்திற்கு டிக்கெட் வாங்கி வந்தவர்கள். வாழ்க்கை தானாக அதில் கொண்டு போய் விட்டு விடும்.
ஆனால் இந்த வாழ்க்கைப் பயணத்தில் இருக்கும் பெரிய வித்தியாசம் என்ன என்றால் மரணம் என்ற அந்த ஸ்டேஷனில் இறங்கும் போது நமக்கிருக்கும் மனநிலை அடுத்த பயணத்தைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது என்பதே. அதன் சூட்சுமத்தை இனி ஆராய்வோம்.
காலையில் விழித்தெழும் கணத்திலிருந்து இரவு உறங்கப் போகும் கணம் வரை மனிதன் ஆயிரக்கணக்கான செயல்களில் ஈடுபடுகிறான். தானாக செய்யும் செயல்கள், அனிச்சையாகச் செய்யும் செயல்கள் என தொடர்ந்து அவன் செய்யும் செயல்கள் எண்ணிக்கையில் பல்லாயிரமாக விரிந்தாலும் இரவில் உறங்கும் முன் தன் அன்றைய வாழ்வை அவன் திரும்பிப் பார்த்தானானால் நினைவில் மிஞ்சுவது கைவிரல்களால் எண்ண முடிந்த மிகச்சில செயல்களே. அவையே அவனுக்கு அன்றைய முக்கிய செயல்கள். அல்லது அவற்றின் தொடர்ச்சியாக அவன் மேற்கொண்டு செய்ய வேண்டி இருப்பவை. மற்றவை எல்லாம் பரிபூரணமாக முடிந்து விட்டவை. அவற்றின் நோக்கம் முடிந்து விட்டதால் அவன் தொடர வேண்டியிருக்காத செயல்கள். அதனால் அவை மறக்கப்பட்டு விட்டன.
இப்படி ஒரு நாளைப் போலத் தான் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் வாழ்க்கை முழுவதும் நடக்கின்றது. மரணத்தறுவாயில் மனிதனின் நினைவில் மிஞ்சுவது வாழ்க்கையின் சாராம்சமும், முக்கியமாய் நினைத்திருந்து முடித்து விடாத விஷயங்களும் மட்டுமே.
முழுமையாக வாழ்ந்து முடிந்தவனுக்கு மட்டுமே மரணத்தறுவாயில் இறைவன் நினைவு வரும். பிரபஞ்சத்தின் ஜடப்பொருள்கள் முதலான அனைத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனை உணர்ந்தவன் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனைக் காணுவதைத் தவற விடுவதில்லை. வாழ்க்கையின் முடிவிலோ, அவன் வாழ்நாள் எல்லாம் உணர்ந்ததன் தாக்கம் கண்டிப்பாகத் தங்கவே செய்யும். அதனால் அந்த நேரத்தில் அவனால் இறைவனை மனதார நினைக்கவும் தியானிக்கவும் முடியும். அதுவே அவனை இறைநிலையை அடையவும் செய்யும். இதைத்தான் பகவத் கீதை சொல்கிறது.
நல்ல உதாரணமாய் மகாத்மா காந்தியைச் சொல்லலாம். சிறிதும் எதிர்பாராமல் சுடப்பட்ட அதிர்ச்சியான நேரத்திலும் “ஹே ராம்” என்று அவரால் சொல்ல முடிந்தது மனதளவில் அவர் இருந்த தயார்நிலையையே சுட்டிக் காட்டுகிறது. வாழ்நாள் பூராவும் வாயால் மட்டுமல்லாமல் மனதார வாழ்ந்த ஆன்மிக வாழ்க்கை அவரை அந்தக் கணத்திலும் இறைவனை நினைக்க வைத்திருக்கிறது.
வெறும் வார்த்தைகளினால் மட்டும் இறைவன் இருந்திருப்பாரேயானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு கிளிப்பிள்ளையின் உதாரணத்தை பெரியோர் சொல்வார்கள். எப்போது பார்த்தாலும் ”ராதே கிருஷ்ணா” என்று அந்தக் கிளி சொல்லிக் கொண்டிருக்கும். அதை வளர்த்தும் வீட்டாருக்கோ அதை நினைக்கையில் ஒரே பெருமை. ஒருநாள் வீட்டு ஆள்கள் வெளியே சென்றிருக்கையில் ஒரு பூனை வந்து விட்டது. அந்தப் பூனை கிளியைப் பிடிக்கையில் அது வரை ”ராதே கிருஷ்ணா” சொல்லிக் கொண்டிருந்த அந்தக்கிளி கீச்சு கீச்சென்று கத்த ஆரம்பித்து விட்டது.
வாழ்நாள் எல்லாம் வாயளவில் சொன்னாலும் இதயத்தில் நிலைக்காத வரை இறை நினைவு இறுதியில் வராது!

தெய்வீகக் கதைகள் ....



அன்பை உணர்ந்தால் தானாகவே கருணை பிறக்கும். 
மாமரத்தில் ஒரு பிஞ்சு தொங்கிக் கொண்டிருக்கிறது. அது விழாது இருப்பதற்கக் காம்பு அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. அது மேலும் வளரும்போது அதனுடைய கனத்திற்குத் தக்கவாறு காம்பு பெரிதாகி அதை விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் அன்பு. அதற்கு மேலாக அது வளர்வதற்கு வேண்டிய இரசத்தை ஊட்டி பாதுகாத்துப் பெரிதாக்கி பழமாக வளரச் செய்கிறது. அதுதான் கருணை. இந்த அன்பும் கருணையும் இறைநிலையின் தன்மை. இதை எல்லா இடங்களிலும் காணலாம். இது சீவகாந்தத்தின் மூலமாக எழும் இறைநிலையின் மலர்ச்சி.
பழைய பாடல் ஒன்றிலே,
' கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிருக்கும் நல்  உணவை வைத்த இறைவன் என்னை மட்டும் விட்டு விடுவானா?'. என்பதாக வருகிறது.
எவ்வாறு கல்லுக்குள் இருக்கின்ற தேரைக்கு உணவு கிடைக்கிறது என்றால், பாறையின் மீத உள்ள தண்ணீரில் தவளையானது முட்டையிட்டு இருக்கும். அந்த பாறையில் உள்ள, கண்களுக்குப் புலனாகாத சிறிய சந்துகளின் வழியாக தண்ணீர் கசிந்து செல்லும்பொழுது அந்த முட்டையும் வழுக்கிக் கொண்டு சென்று ஒரு வசதியான இடத்தில் பாறைக்குள் தங்கிக் கொள்ளும்.
நாளடைவில் அது வளர்ந்து, பெரிதாகி வெளியில் வர வழியில்லாமல் நின்று விடும். அந்தக் கல்லிலே இருக்கின்ற நுண்ணிய பிளவு வழியாகவே அதற்கான காற்று உள்ளே சென்று கொண்டிருக்கும். அங்கு வாழ்வதற்கு உயிர்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் இறைநிலை அளிக்கிறது. அதுதான் கருணை.
ஒரு முட்டையை எடுத்துக் கொள்வோம். அதற்குள்ளாக மஞ்சள் கரு இருக்கிறது. அதைச் சுற்றிலும் வெள்ளைக் கரு இருக்கிறது, மஞ்சள் கருதான் குஞ்சாக மாறுகிறது. அவ்வாறு உருவாக அதற்கு உணவு கொடுப்பது யார்? இறைநிலையே அதைச் சுற்றி உணவாக வெள்ளைக்கரு வைத்திருக்கிறது.
இந்த இரண்டையும் பாதுகாக்க, இயற்கை யாரும் செய்ய முடியாத அளவிற்கு இரசாயனக் கூட்டு சேர்த்து முட்டை ஓடு இல்லாது, தானே உடையுமாறு அந்த ஓட்டை அமைந்திருக்கின்றது. அதுதான் அன்பு.
அன்பும் கருணையும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், எல்லா சீவராசிகளிடத்தும், மலர்ந்து இருப்பதைக் காணலாம். எல்லா சீவராகசிகளிடமும் இறைநிலையே அறிவாக இருப்பதால் அங்கு அன்பும், கருமையும் மிளர்கின்றன. அப்படியென்றால், விலங்கினங்கள் ஒன்றையொன்று கொன்று தின்கின்றனவே. அங்கு அன்பும், கருணையும் ஏது எனக் கேட்கலாம்.
இயற்கையின் நியதிப்படி, அது தானே உற்பத்தி செய்து சாப்பிட முடியாத வகையில் ஒன்றை ஒன்று அடித்துச் சாப்பிட்டு, அப்படியே பழகிக் கொண்டுள்ளது. அதில் கூட நாம் பார்த்தால் சில உயிர்கள், தாம் மற்றொன்றை அடித்துச் சாப்பிடும்பொழுது அதற்குச் சிறிது மயக்கத்தை ஊட்டி, உணர்ச்சியே இல்லாது செய்து, தம்முடைய சக்தியை அதன் மேல் பாய்ச்சி, தாம் உண்பதே அதற்கு இன்பமாக இருக்கும் வகையிலே உண்ணுகின்றன. இறைநிலை இந்த இடத்தில் கூட கருணையோடு துன்பம் இல்லாது அந்த உயிரைத் தன் வயப்படுத்திக் கொள்கின்றது.
பாம்பு தவளையைப் பிடிக்கிறது என்று சொன்னால் முதலில் அந்தப் பாம்பு தினமும் காலை வேளையில் சூரியனைப் பார்த்துத் தன்னுடைய காந்த சக்தியை அதிகரித்துக் கொள்கிறது. அது தவளையைப் பிடித்த உடனே தன்னுடைய காந்த சக்தியைப் பாய்ச்சி அதற்கு ஒன்றும் தெரியாதவாறு மயக்கம் அடையச் செய்கின்றது. தவளை கூச்சல் போடுவது எல்லாம் அதனுடைய நரம்பு இயக்கம் தானே தவிர அதற்குத் துன்பம் தெரிவதில்லை.
இதே போன்று பல்லி ஒரு பூச்சியைப் பிடிக்கும்பொழுது தன்னுடைய கண்கள் வழியாகக் காந்த சக்தியை அதன் மேல் பாய்ச்சி அதை மயக்கம் அடையச் செய்து அதனுடைய மயக்க நிலையில் (வுசயளெ ளுவயவந) அதற்குத் துன்பம் கொடுக்காது உண்கிறது. இவ்வாறு எல்லா இடங்களிலும் இறைநிலையில் ஒரு செயல் நடக்கும் பொழுது அங்கு அன்பும், கருணையும் சேர்ந்து இருப்பதைப் பார்க்கலாம்.
நமக்கு உடலில் காயம்பட்டு இரத்தம் வருகிறது. இந்த இரத்தம் போய்க் கொண்டே இருந்தால் உயிர் போய் விடும். ஆனால், சிறிது காற்றுப் பட்ட உடனே இரத்தம் உறைந்து வீணாவது நின்று விடுகிறது. இந்தக் கருணைச் செயல் எல்லா உயிர்களிடத்தும் இறைநிலை உள்ளது. இந்த உண்மையை நாம் எந்த அளவுக்கு உணர்ந்து கொள்கிறோமோ அது தான் இறைவழிபாடு. அதற்கு ஒத்த முறையில் அதோடு இணைந்து நடப்பதுதான் அறநெறி.

மகாபாரதப் போர் .....

மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..
 40 லட்சம்பேர் பங்கு பெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப் பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்....இதை பிரமாண்டமான திரைப் படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation).....
................................மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது
படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி
குருஷேத்திரப்போர் படை விபரங்கள்
குருஷேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்த்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒரு புறத்திலுமாகப் போரிட்டன.
கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி
பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி......
......................தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில்11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.