Tuesday, August 5, 2014

தஷிணாமூர்த்தி வழிபாடு..

தென்முகக் கடவுளாம் தஷிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோருக்கு உபதேசம் செய்ய எழுந்தருளிய குருமூர்த்தமாகும்.
அவர் தம் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் அகலவிட்டுக் காட்டும் சின்முத்திரையால் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் அகற்றிக் கடவுளை அடைதல் வேண்டும் என உபதேசிக்கிறார்.
இந்தச் சின்முத்ரை சாதக சின்முத்ரை, சாத்ய சின்முத்ரை, போதக சின்முத்ரை என்று முத்திறப்படும்.
ஸாதக சின்முத்ரா என்பது பெருவிரல் அடியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
ஸாத்ய சின்முத்ரை என்பது பெருவிரல் மத்தியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
போதக சின்முத்ரை என்பது பெருவிரல் நுனியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருத்திக் கையை உயர்த்திக் காட்டுவதே இந்தப் போதக சின்முத்ரை எனப்படும்.
ஆதலால் கோவில்களில் தஷிணாமூர்த்தி சந்நிதியில் நாம் இறைவனைக் குருவாய்ப் பாவித்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது கீழ்வரும் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்..

"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:"

"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் தஷிணாமூர்த்தயே நம:"

தஷிணாமூர்த்தி காயத்ரி..


"ஓம் தஷிணாஸ்யாய வித்மஹே த்யானரூபாய தீமஹி
தந்நோ போத ப்ரசோதயாத்||"

Friday, July 25, 2014

மனம்....


இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒருதவறும் இல்லை. இவை நம்மை வழிநடாத்த நாம் எருமை மாடுகள் போல் இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்ப வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவரினதும்இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம். நம் பிரக்ஞையின்றி நம் மனதிலிருந்துதான்தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது. நம் மனம் எப்பொழுது தான்தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்
நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார்.ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.
மனம் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.
நம் பிரஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.
பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (sub unconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)
என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும்.
இவை ஒவ்வொன்றும் நம் கடந்தகாலங்கள். நம்மால் அடக்கப்பட்டவை. ஒதுக்கப்பட்டவை.

Saturday, July 12, 2014

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...

ஆறுபடை வீடுகள்
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை
5. திருத்தணி
6. பழமுதிர்ச்சோலை
இவைகளே ஆறுபடை வீடுகள்.
ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள்
அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.
1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்
4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி
6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை
மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.
ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

Thursday, July 10, 2014

காயத்ரி.. குண வளர்ச்சி... பரிணாம உயர்வு


காயத்ரி சாதனை ஒருவனது சூஷ்ம உடலில் எப்படி செயல் புரிகிறது?குணவளர்ச்சி மூலம், காயத்ரி மந்திர அலைகள் ஒருவனில் குறித்த குணவளர்ச்சியினை உண்டு பண்ணக்கூடியவை. ஒருவனது தமோ, ரஜோ, சத்துவ குணங்களை படிப்படியாக உருமாற்றியமைத்து ஒருவனது பரிணமத்தினை அதிகரிக்கிறது. உதாரணமாக தமோ குணம் நிறைந்த ஒருவன் காயத்ரி சாதனையினை ஆரம்பிக்கின்றான் எனில் அவனில் ரஜோகுணம் படிப்படியாக வளர ஆரம்பிக்கும். சோம்பித்திரிந்தவன் உற்சாகமாக வேலையில் ஈடுபட ஆரம்பிப்பான். அதுபோல் ரஜோகுணம் மிகுந்தவனுக்கு சத்துவ குணம் வளர ஆரம்பிக்கும். இறைசாதனை, பொறுமை என்பன செய்யக்கூடிய பக்குவம் வளர ஆரம்பிக்கும். 
காயத்ரியின் மூன்று பாதங்களும் சரஸ்வதி,மஹா லட்சுமி, காளி ஆகிய மூன்று சக்திகளை குறிக்கும். சரஸ்வதி ஞான சக்தியாக யோகிகள், முனிவர்களில், தத்துவ ஞானிகளிடம் காணப்படும் ஆற்றலுக்கு மூலகாரணமாக விளங்க்குபவள், அதாவது இவர்கள் சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள். அதுபோல் பெற்ற சமூக சீர்திருத்தவாதிகள், செல்வந்தர்கள், புத்தி ஜீவிகள் என்பவர்கள் மஹா லட்சுமியின் அருள் பெற்றவர்கள். பௌதீக விஞ்ஞானிகள் காளியின் அருள் பெற்றவர்கள், அதாவது பிரபஞ்ச சக்தியின் குறைத்த அலைவேக சக்தியினை தம்மில் கவர்ந்து செயற்படுத்த கூடிய வழிமுறையினை ஏதோ ஒரு முறையில் அறிந்தவர்கள். 
இந்த மூன்று அம்சங்களும் ஒருவருக்கு சரியாக அமையும் போதுதான் வாழ்வு பூரணமடைகிறது, அதாவது ஒருவருக்கு ஆன்ம வாழ்க்கை, புத்தி/மனோமய வாழ்க்கை, பௌதீக வாழ்க்கை ஆகிய மூன்றும் சரியாக வளர்ச்சியுறும் போதுதான அவனது பரிணாமம் உயர ஆரம்பிக்கிறது. இதனை ஒருவருடைய கர்மம், சூழல், தன்மை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற விகிதத்தில் வளர்ச்சியுற செய்யும் அரிய சாதனமே காயத்ரி சாதனை.  
அனைவரும் காயத்ரி சாதனை செய்வோம்!

Wednesday, July 9, 2014

குறள் பற்றி அறிஞர்களின் கருத்துகள்...

திருக்குறள் என்பதன் உண்மையான பெயர் திரிக்குறள் என்பதாகும்.
இதன் மூல நூல் மூவர் மொழியாக அழைக்கப்படும் திரிபேத வாக்கியமாகும்.
இதனை திரிபீட வாக்கியம் என்றும் அழைப்பார்கள்.
இது பாலி மொழியில் இயற்றப்பட்டதாகும்.
தன்மபீடக, சூத்ர பீடக, வினய பீடகமாம் மகா பாஷா நூலே இது.
இதன் வழி நூலே திருக்குறளாகும்.
திரிவர்க்கம் என்பதன் ஆசிரியர் பிரம தேவர்.
மகாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் 58-ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.
சிவனால் இயற்றப்பெற்றது வைசாலவம்.
இந்திரனால் இயற்றப்பெற்றது பாகுதந்தகம்
குருவால் இயற்றப்பெற்றது பார்ஹசுபத்யம்
சுக்ர நீதி இயற்றப்பெற்றது சுக்ராச்சாரியாரால்.
பிரமனின் திரிவர்க்கமே முப்பாலாக பரிணமித்தது.
பின்னரே மற்ற நீதி நூல்கள் தோன்றின.
பிரமனின் அவதாரமே வள்ளுவர். அதானால் தான் அவருக்கு நான் முகன் என்று பெயர்.
தமிழில் தோன்றிய முதல் நீதி நூலும் அதுவே.
வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி அல்ல. மாதானுபங்கி என்பதாகும்.
வள்ளுவர் வடநூல் சார்பு மிக்கவர். அவர் வைதீகச் சார்புடையவராதலின் தென்புலத்தார், இல்வாழ்வான் ஆகிய குறட்கள் மூலம் பஞ்சம காயறங்களினை ஈண்டொழுகக் கூறினார்.
ஆதி பகவன் என்பது புத்தனையே குறிக்கும்.
மண்டல முனிவரும் தனது நிகண்டுரையில் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
”ஆதி பகவன் அருமறை ஓதுமின்” என்று திருமூலரும் கூறியுள்ளார்.
”ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல்
சோதி பராசக்தி தான் பசுவே சொந்தமாகாதோ” என்றும் சித்தர் கூறியுள்ளார்.
ஆக புத்தமதக்கருத்துக்களை அடியொற்றியே குறள் யாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழிநூலே.
வள்ளுவர் ஒரு பௌத்தரே!
காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் –வள்ளுவர் ஒரு வைதீகரே!

Wednesday, June 18, 2014

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ப்ராம்ஹி..
ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||
மாஹேஸ்வரி..
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||
கௌமாரி..ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||
வைஷ்ணவி..
ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||
வாராஹி..
ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||
இந்த்ராணி..
ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||
சாமுண்டி..
ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||

Sunday, June 15, 2014

ரிஷ்யசிருங்கர்

                                                    
ஒரு காலத்தில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருந்தார். இவரது காலடி எங்கு பட்டாலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்கிறது புராணம். இவரது வரலாற்றை வால்மீகி முனிவர் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.
விபண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். அவரது புத்திரன் ரிஷ்யசிருங்கர். தாய் முகம் அறியாதவர். பிறந்தது முதல் தந்தையை மட்டுமே தெரியும். மழை இல்லாத இடத்தில் அவர் காலடி பட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும். இவர் பிறந்தது முதல் காட்டிலுள்ள தங்கள் ஆசிரமத்திலேயே வசித்தார். தந்தையும், மகனும் மட்டுமே அங்கு வசித்தனர். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத <உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிகள் பட்ட இடத்தில் மழை கொட்டுவதில் வியப்பென்ன! இந்நிலையில் தான் அங்கதேசத்து அரசன் ரோமபாதன் மழையின்றி நாட்டு மக்கள் வாடுவதைக் கண்டு தானும் வாட்ட முற்றான். என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர முடிவெடுத்தனர். அரசன் அவர்களைச் சமாதானம் செய்தான். சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டினான். எப்படியேனும் மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த உறுதியளித்தான். அமைச்சர்களையும், அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டிவிடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேண்டும், என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக மன்னன் வாக்களித்தான்.
அரசே! ரிஷ்ய சிருங்கரை எவ்வகையிலாவது அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சாந்தையை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால்... என்றெல்லாம் அரசன் பேசவில்லை. முழு மனதுடன் சம்மதித்தான். எனக்கு நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு தான். சாந்தையை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன், என சத்தியம் செய்தான். இதன்பிறகு முனிவரை அழைத்து வர யார் செல்வது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த மகானை தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அமைச்சர்களுக்கு தோன்றியது. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். அவர்கள் ஒரு உபாயம் செய்தனர். இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே தாசிகளை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. தாசிகள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர். சந்தனம், அகில், வாசனைத் திரவியங்கள் பூசி, அலங்காரம் செய்து, மனதை மயக்கும் அழகுடன், அந்நாட்டிலேயே மிகச்சிறந்த தாசிப் பெண்கள் காட்டிற்கு சென்றனர். அவர்கள் விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர். காட்டிற்கு சென்ற தாசிகள் ரிஷ்யசிருங்கரின் தந்தை எங்காவது வெளியே போகட்டும் என ஒளிந்து காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, விபண்டகர் வெளியே போய் விட்டார். அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று ஆஸ்ரமத்திற்குள் சென்று, முனிவரைப் பணிவாக வணங்கினர். ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம். உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா? இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே. கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் தென்படுகின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது, என ஆச்சரியப்பட்டார். அப்பெண்களை அவர் உபசரித்தார். ஆஸ்ரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அவர்களுக்கு பூஜை செய்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவர் சாப்பிட்டுப் பார்த்தார். தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி.
தன்னை மறந்த நிலையில் இருந்த சிருங்கரிடம், மகாமுனிவரே! தாங்கள் எங்களுடன் எங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். அங்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும், என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் தாபத்துடன் தூபம் போட, அவர் அங்கதேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது. மக்கள், மன்னன் மகிழ்ந்தனர். கால்நடைகள் குதித்தாடின. சிறுவர்கள் மழையில் நனைந்து விளையாடினர். மன்னன் ரிஷ்யசிருங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். தங்கள் நிலையை எடுத்துச் சொன்னான். ஒரு நல்ல காரியத்திற்காக தாசிகளை அனுப்பி உங்களை வரவழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக எங்களை மன்னிக்க வேண்டும். தங்களைப் போன்ற தவசீலர்கள் அவர்களிடம் நட்பு கொள்ளாலாகாது. தாங்கள் என் மகள் சாந்தையை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்றான். உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சாந்தையை திருமணம் செய்து சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது. ரிஷ்ய சிருங்கரின் கதையைப் படித்த நாமும் நம் தமிழகத்தில் தேவையான மழை கொட்டுமென நம்புவோம்.