Monday, April 30, 2012

சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள்

மழை பொழிய பாடிய மகான்
ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மழை வேண்டிப் பிரார்த்தித்து மனமுருகி பாடி மழை பெய்வித்தவர் ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள். இவரது இயற்பெயர் தத்தாத்ரேயா. இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு ....... தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து இந்த பட்டபெயர் திலைத்தது. தீர்த்தார்யா என்றால் சாஸ்திஞானி என்று அர்த்தம். 15ம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்க வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசர் அச்சுதப்ப நாயக்கர், முக்கிய அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப்போற்றி ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர். இவ்வூரில் (1551-1661) பங்குனி திருவோண நட்சத்திரம் அவதரித்த தீர்த்தார்யா சுவாமிடகள் பெருமாளின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்த பிரம்மச்சாரி. ஒருமுறை மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மக்கள் இத்துன்பத்திலருந்து மீள தீர்த்தாய சுவாமியை மக்கள் அணுகி, மழை வேண்டி பெருமாளிடம் பிரார்த்திக்குமாறு வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற சுவாமிகள், சவுராஷ்டிர மொழியில், ஸ்ரீரங்கநாதா ! இத்தருணமே மழை பெய்வித்து ஏரி, கிணறு, நதிகள் நிறையும் படி செய்வாயாக ! அரிசி முதலிய உணவுபொருட்களை மலிவாக கிடைக்க செய்.
உன்னையே கதியென்று சரணடைந்த திரவுபதிக்கு ஆபத்பாந்தவனா ரட்சித்தாய். எங்களையும் வறட்சி எனும் ஆபத்திலிருந்து காத்தருள்வாய் ரங்கா ! முன்பெல்லாம் மக்கள் போதிய வசதியுடன் வாழ்ந்தனர். இன்றோ பஞ்சக்கொடுமையினை அனுபவிக்கின்றனர். உனது திக்கரத்தில் உள்ள சக்கரத்தினை ஏவி அந்த கொடுமைகளை அழித்து விடு ரங்கா ! பஞ்சத்தால் மக்கள் செய்வதறியாது கிடக்கின்றனர். இந்நிலை நீங்க மழை பொழிவிப்பாய் ரங்கா ! பஞ்சம், பசிக்கொடுமையால் மக்கள் கண்டதை உண்ணும் அவல நிலை ஏற்பட்டு அலைகின்றனர். மக்களை இப்படி அலைய விடாமல் போதிய மழையினை பொழியச்செய் ரங்கா ! மழையின்றி மக்கள் பரிதவிக்கும் போது நீ ஆனந்தமாக அறிதுயில் கொள்ளலாமோ ? உன் பக்த ஜனங்கள் நலம் பெற மழை பொழிவிப்பாய் ரங்கா ! ரங்கா ! ரங்கா ! என கீர்த்தனை ஒன்றை முகாரி ராகத்தில் மனமுருகி பாடினார். மழையும் பொழிந்தது. நாமும் நீரின்றி வறட்சியால் வாடும் இந்நேரத்தில், சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடி, மழை பொழிய, பெருமாளை வேண்டுவோம். அதுமட்டுமல்ல, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்தும் பாதுகாப்பை வேண்டிக் கேட்போம்

Saturday, April 28, 2012

ஜெயவந்த்

அப்பா, நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? நன்றாக நடந்து கொண்டிருக்கும் வியாபாரத்தை ஏன் நிறுத்துகிறீர்கள். இவ்வுலகம் பொருள் என்ற அச்சாணியில் சுற்றுவதை நீங்கள் அறியவில்லையா? எங்களையாவது வியாபாரம் செய்ய விடுங்கள், என தங்கள் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர் அவரது ஆறுமகன்கள். தந்தை ஜெயவந்த் அவர்களிடம், மக்களே! நீங்கள் இவ்வூரில் நல்லபெயர் வாங்கவில்லை. நம்மை விட வளர்ந்தவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறீர்கள். நான் விஷ்ணு பக்தன் என்பதை ஊரறியும். நீங்களோ கடவுளுக்கு பயப்படாமல், இருக்கிற பொருட்களை யெல்லாம் தவறான வழியில் செலவழிக்கிறீர்கள். உங்களிடம் இல்லாத கெட்ட குணமே இல்லை. நான் இன்னும் சம்பாதித்தால், பணம் உங்களை அடிமைப்படுத்தி விடும். நம்மிடம் இப்போது இருப்பதே காலம் முழுமைக்கும் போதும். சம்பாதித்த பணத்தில் பாதியை தர்மத்திற்கு ஒதுக்கி விடுவோம். மற்றதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், என்றார். மகன்கள் ஆறு பேருக்கும் கடும் கோபம். அவர்கள் தந்தையைத் திட்டி தீர்த்தனர். இவர்களில் மூத்தவன் தன் தம்பிகளிடம், அடேய்! இவரிடம் பணம் இருந்தால், நமக்கு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார். தானம், தர்மம், கோயில், குளம் என பாழாக்கி விடுவார். நாம் அரசனிடம் செல்வோம். இவரைப் பற்றி புகார் செய்து, செல்வத்தை தக்க வைத்துக் கொள்வோம், என்றான். அனைவரும் அரசவைக்கு சென்றனர்.
மூத்தவன் அரசனிடம், அரசே! எங்கள் தந்தையார் எங்கள் தாத்தா சொத்துக்களை வைத்துக் கொண்டு, எங்களிடம் தர மறுக்கிறார். சொந்தமாக செய்த வியாபாரத்தையும் நிறுத்தி விட்டார். அதில் சேர்த்த செல்வத்தை தான தர்மம் செய்கிறார். எங்களுக்கு எதுவும் தரவில்லை. நாங்கள் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்றால் முதல் போடுவதற்கு பணம் தர மறுக்கிறார். நாங்கள் எப்படி வாழ முடியும்? எங்களுக்கு சொத்தை வாங்கித் தாருங்கள், என்றான். அரசன் யோசித்தான். அவர்களை அனுப்பிவிட்டு, ஜெயவந்த்தை அழைத்து வர உத்தரவிட்டான். ஜெயவந்த் கம்பீரத்தோற்றத்துடன் அரசவைக்குள் வந்தார். நெற்றியில் நாமம் பளிச்சென மின்னியது. பண்புடன் அரசருக்கு வணக்கம் தெரிவித்தார். அரசன் அவரிடம், நீர் உமது மகன்களுக்கு பொருளைக் கொடுக்காமல், உம்மிடமே வைத்துக் கொண்டிருக்கிறீராமே, அதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றான் கடுமையாக. மன்னா! பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். இறக்கும் போது என்ன கொண்டு செல்லப்போகிறோம் எதுவும் இல்லை. நாம் செய்யும் நல்ல செயல்களும், தீய செயல்களும்தான் நம்முடன் வரப்போகின்றன. இறைவன் கொடுத்த செல்வத்தில், ஏழை, எளியோருக்கு சிறிது கொடுப்பதில் என்ன தவறு? தானம் தர்மம் செய்வதற்கு நேரம் காலம் கிடையாது. நினைத்தவுடனேயே செய்துவிட வேண்டும். இது புண்ணியத்தைச் சேர்க்கும், என்றார்.
அரசன் மேலும் மேலும் கேள்விகள் கேட்க, ஜெயவந்த் தர்க்க ரீதியாக பதிலளித்தார். அவற்றைப் புரிந்து கொள்ள முடியாத மன்னன், இந்த மனிதர் சரியான பைத்தியமாக இருக்க வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து, இப்படிப்பட்டவரை ஊருக்குள் நடமாடவிட்டால் ஏதேனும் அபாயம் நேரும், எனவே அவரை சிறையில் அடைப்பதே சரி என எண்ணினான். சற்று நேரத்தில் மனம் மாறிய அவன் இவருக்கு சிறைதண்டனை கொடுத்தால் சிறைத்துறைக்கு வீண் செலவு தான் ஏற்படும், ஒரு பைத்தியத்தை சிறையில் அடைப்பதை விட, கொன்று விடுவதே மேல் என கணக்குப் போட்டான். காவலர்களே! இவரை நீங்கள் நாளை ஒரு சாக்கில் கட்டி குளத்தில் எறிந்து விடுங்கள், என்றான். ஜெயவந்த் இழுத்துச் செல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பெருமாளே! நான் உனது பக்தன். எனக்கு நீ இப்படிப்பட்ட சோதனையை தந்திருக்கிறாய். இதை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தானம், தர்மம் செய்வதைப் பாவம் என நீ கருதினால், இந்த தண்டனையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் யாருக்கும் இதுவரை எந்த கெடுதலும் செய்ததில்லை. அந்த திருப்தியுடன் விரைவில் உனது பாதத்தை அடைவதில் பெருமைப்படுகிறேன், என்றவராய், இரவு முழுவதும் கைகொட்டி பஜனை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காவலர்கள் அவரை ஒரு சாக்கில் கட்டி குளத்திற்கு தூக்கிச் சென்றனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது. மக்கள் ஒன்றுகூடி குளக்கரையில் நின்றனர்.
ஏழை எளியோர்களுக்கு உதவிய இந்த பெரியவருக்கு இப்படி ஒரு தண்டனையா? இந்த மன்னனுக்கு கேடுகாலம் துவங்கிவிட்டது. அதனால்தான் இப்படியொரு தண்டனையை விதித்திருக்கிறான், என்று பேசிக் கொண்டனர். ஆனாலும், மன்னனை எதிர்க்க யாருக்கு துணிவு வரும்? சாக்கிற்குள் இருந்த ஜெயவந்த், இறைவா, எனக்கு இனி பிறவி வேண்டாம். ஒருவேளை பிறக்க வைப்பதே சித்தமானால், உன்னை மறவாதிருக்கும் இதயத்தை தா எனக் பிரார்த்தித்தார். காவலர்கள் மூடையை குளத்திற்குள் வீசினர். தென்நாட்டில் அப்பர் பெருமானைக் கல்லில் கட்டி கடலில் தள்ளியபோது, கல்லோடு சேர்ந்து அப்பர் மிதந்தார். அதுபோன்ற அதிசயம் இந்த குளத்திலும் நடந்தது. ஜெயவந்த் இருந்த மூடை மூழ்குவதும், வெளியே தெரிவதுமாக இருந்தது. சற்றுநேரத்தில் அங்குள்ளோர் கண்கள் கூசின. பளபளக்கும் பொன்னிறமுள்ள ஆமை ஒன்று மூடையை தன் முதுகில் சுமந்து வந்தது. அது மெல்ல மெல்ல ஊர்ந்து குளக்கரையை அடைந்து மூடையுடன் நின்றது. மன்னனுக்கு தகவல் பறந்தது. அவன் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான். மூடை அவிழ்க்கப்பட்டது. மூடைக்குள் ஜெயவந்த் பத்மாசனத்தில் இருகரம் கூப்பி அமர்ந்திருந்தார். மன்னனும் சுற்றி நின்ற மக்களும் அவரது கால்களில் விழுந்தனர். பெருமாளே கூர்ம வடிவில் வந்து அவரை காத்துள்ள விஷயம் அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது. மகான் ஜெயவந்த் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்நேரத்தில் கரையில் நின்ற ஆமை தண்ணீருக்குள் சென்று மறைந்துவிட்டது. அதன்பிறகு ஜெயவந்தை, தனது குருவாக மன்னன் ஏற்றுக் கொண்டான். நாடு முழுவதும் பக்தியில் சிறந்து விளங்கியது

பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகா÷க்ஷத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.
பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.

Friday, April 27, 2012

இதயத்தில் இருக்கும் இறைவன் - சுவாமி கமலாத்மானந்தர்

* புலனடக்கமும், ஆன்மிக சாதனைகளும் நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில் ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவதற்கு வழியே இல்லை. வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும். வேலையே செய்யாத ஒருவன் கூலியை மட்டும் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. * மனிதன் பிறருக்குப் பரோபகாரமாகவும், நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து தவத்தில் சிறந்து விளங்கி, இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலப்பதே வாழ்வின் நோக்கமாகும்.
* எந்த அளவிற்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவனிடம் மனச்சாட்சியும் விழிப்புடன் இருந்து அவனை நல்வழியில் செலுத்திக் கொண்டிருக்கும். அதனால் மனமே குருவாக இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.
* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். வெளியில் ஆலய வழிபாடு செய்வதோடு திருப்தி கொள்ளாமல் இதயத்தில் இருக்கும் கடவுளை அறிவதே நம் பெரியோர்களின் நோக்கமாகும்.
* இறைவனை உள்ளத்தில் உண்மையாகவே ஆராதிக்கத் தொடங்கினால், நான் என்ற அகந்தை எண்ணம் அழிந்து விடும். ஒளி வந்தவுடனேயே இருள் நீங்குவதுபோல, இறைவன் இருக்கும் இடத்தில் தான் என்னும் அகந்தை நிற்க முடியாது.

Wednesday, April 25, 2012

மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி

ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவை அருளும் பொருளும். இவை இரண்டும் இருந்து விட்டால், எதற்கும் கவலை இல்லை. அருள் அதிகம் இருக்க வேண்டும். பொருள் போதுமான அளவில் இருக்க வேண்டும். பொருள் அதிகம் இருந்தால், அருளைப் பெறுவதில் சிரமம் இருக்கும். அதாவது, அருளைப் பெறுவதில் மனம் நாட்டம் கொள்ளாது. அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அருளை வைத்துக் கொண்டு பொருள் பெற முடியாது; பொருளை வைத்துக் கொண்டு அருளைப் பெற முடியாது. இரண்டையுமே தேடித்தான் பெற வேண்டும். நல்ல ராசிக்காரர்கள் சிலரை இவை இரண்டுமே தேடி வருவதும் உண்டு. அருள் என்றால், இறை இன்பம். இறை அருள். இறைவனின் ஆசி என்றெல்லாம் சொல்லலாம். என்றென்றைக்கும் எப்போதும் நல்ல நிலையில் ஒருவரை வைத்திருக்க உதவுவது அருள். இத்தகையோரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பொருள் என்றால், நாம் தேடிச் சேகரித்த செல்வம். பொருள் தேடும் ஆசை குறையக் குறையத்தான் அருள் வந்து சேரும். ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் செல்வத்தால், படிப்பால், பதவியினால், ஞானத்தால் அருளை வாங்க முடியாது. அருள் கடைச் சரக்கு அல்ல.
மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி. ஸ்ரீராமபிரானின் மனத் தூய்மையை ராவணனே வியந்து போற்றி இருக்கிறான். எதிரியே என்றாலும், ராமனின் இந்தக் குணத்தை தன் மனைவியான மண்டோதரியிடம் வியந்து சொன்னதாக, பரமஹம்சர் சொல்வார். சீதையைத் தங்கள் நாயகி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஏன் இவ்வளவு அவஸ்தைப்படுகிறீர்கள்? ராமனைப் போன்ற மாய வடிவம் எடுத்து, சீதையிடம் சென்று அவளை ஏன் ஏமாற்றி அடையக் கூடாது. என்று கேட்டாளாம் மண்டோதரி. கணவனின் இந்த இச்சையைப் பூர்த்தி செய்ய விரும்பிய மண்டோதரியே இப்படி ஒரு வழியைச் சொன்னாள். அதற்கு ராவணன், சேச்சே... அப்படி இல்லை மண்டோதரி. ராமனை நினைத்த மாத்திரத்திலேயே வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் இன்பமும் மனதில் உண்டாகின்றன. பரமபதமான சொர்க்கமும்கூட வெறுப்பாகி விடும் போலிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவனுடைய திவ்ய சொரூபத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு எப்படி சிற்றின்பத்தில் நாட்டம் செல்லும்? மனம் இச்சையில் லயிக்காது என்று மண்டோதரியிடம் சொன்னானாம். பொருளாசை மற்றும் இன்ன பிற ஆசைகளில் மனம் சென்று கொண்டிருந்தால், அருள் கிடைக்காது. இறைவனை தரிசிக்க முடியாது. பணம், பதவி, பட்டம், ஆற்றல் இவற்றைச் சேர்க்க முயலும் ஆசை அறவே அடங்கினால்தான் இறை தரிசனம் கிடைக்கும். அந்த இன்பத்தை உணர முடியும்.
அருளில் கிடைக்கும் ஆனந்தத்தை ஒருமுறை ருசித்துப் பார்த்து விட்டால், அதன் பின் வேறு எந்த ஆசையும் ஒரு மனிதனுக்கு எழாது. சான்றோர்கள் அனுபவித்துப் பெற்ற அந்த அருள் அமுதத்தைப் பெற முயற்சிக்கலாமே! அருளைப் பெறுவதற்கு மனதை முதலில் பக்குவப்படுத்துங்கள். பக்குவப்பட்ட மனதில்தான் அருள் ஆனந்த தாண்டவம் ஆடும்.

Saturday, April 21, 2012

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?
”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.
முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)
நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?
இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.
भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥

அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )
அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.
ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

 
எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.
 
 

ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்

நிம்மதிக்கான வழி இது தான்
* நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். ஞானம் என்பது என்ன? பரம்பொருளாகிய கடவுள் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது தான்.
* பரம்பொருள் என்னும் ஒன்று தான் உலகத்தில் உள்ள அத்தனைப் பொருளுமாக இருக்கிறது. எல்லாப் பொருட்களையும் கடவுளாகவே பார்க்க வேண்டும். இதை விடுத்து அந்தப் பொருட்களை அதன் உண்மை இயல்புக்கேற்ப மனதைச் செலுத்தினால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை