Thursday, January 1, 2015

ஓஷோ அமைதி பற்றி

 
தியானம் செய்யும்போது சில நேரங்களில் அமைதிநிலை நீரோடை போல வந்து சேரும். கவனித்துக் கொண்டிரு. அமைதி நிலை நிகழ்கிறது, நான் சாட்சி மட்டுமே என்பது போல தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. சில நேரங்களில் ஆனந்தம் நீருற்று போல பொங்கி வரும், ஒவ்வொரு நாடி நரம்பிலும் பரவும், அதையும் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. எதையும் பிடித்து தொங்காதே.
உனது வெறுமை ஆனந்த தன்மை, அமைதி நிலை, பிரகாசம் ஆகியவற்றின் அலைகளை அனுமதிக்கும்.
உன்னுடன் நீ அமைதியாக இருத்தலே அமைதி நிலை.
உனக்குத் தேவை உயிர்த்துடிப்புள்ள அமைதிநிலை மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய மௌனம்.
உள்ளார்ந்த மௌனமும் உள்ளார்ந்த அமைதியும்தான் முழுமையான தளர்வு நிலையின் கனிந்த நிலை.
உள்ளார்ந்த அமைதி தியானத்தின் பக்க விளைவே.
உள்ளார்ந்த அமைதியின் நிழல் போல அன்பு தொடர்ந்து வரும்.
வானம்
உனது உள்இருப்பு என்பது உனது உள்வானமே. சூரியன், சந்திரன், நட்சத்திரம், பூமி, கோளங்கள், இந்த முழு பிரபஞ்சம் என யாவற்றையும் உள்ளடக்கிய வானம் அது. எல்லாவற்றிற்க்கும் இடம் தரும் வானம் அது. இருக்கும் அனைத்திற்க்கும் பின்புலமாக விளங்கும் நீலவானம் அது. எல்லாமும் வரும் போகும். ஆனால் வானம் அதேபோலவே இருக்கும்.
மனமற்ற தன்மை என்பது வெறும் விழிப்புணர்வு மட்டுமே. அது வெறும் வானம் போன்றது.
வானமாக மட்டுமே இருக்க உனக்கு தைரியம் வேண்டும்.
உன்னுள் நீ தளர்வு பெற்றால் உனது உள் வானத்தை நீ காண்பாய்.
வானத்தை மட்டும் பார், மேகத்தை மறந்து விடு. இது நிலைமாறுதலை கொண்டு வரும்.
உன்னுடைய அனுபவங்கள், உன்னுடைய இருப்பாகிய வானத்தில் வரும் மேகங்கள் போன்றதே.
நீல வானத்தில் செல்லும் மேகங்கள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை.
சப்தமும் நிசப்தமும்
வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள், அப்போதுதான் இரண்டு உலகங்களும் ஒருசேர உனக்கு கிடைக்கும், இந்த வெளி மற்றும் உள் உலகம், சப்தமும் நிசப்தமும், அன்பும் தியானமும், தொடர்பும் ஒருமையும் என இந்த விஷயங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல வாழப்பட வேண்டும், அப்போதுதான் உனது இருப்பின் அடி ஆழமும், உயர்ந்த உச்சியும் உனக்குத் தெரியவரும்.
இசை என்பது சப்தம் மட்டுமல்ல, அது மௌனத்தையும் உள்ளடக்கியது.
மிக ஆழ்ந்த மௌனத்தில் உண்டாக்கும் சில சிறிய சப்தங்களே நாம்.
சப்தமும் நிசப்தமும் ஒன்றிணைந்தே செல்லும், எதிர்மறை இல்லாவிடில் இதுவும் இருக்க முடியாது.
சப்தம் நமது மனம், மௌனம் நமது இருப்பு.
சப்தம் இந்த பூமியை சேர்ந்தது, மௌனம் கடந்ததை சேர்ந்தது.
வாழ்க்கை சப்தமும் நிசப்தமும் இணைந்த லயமாக இருக்க வேண்டும்

சேஷாத்ரி சுவாமிகள் - சிறை செய்தால் அறை விழும்!

இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை சற்று வேறுவிதமாக சுவாமிகள் 1928ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் ‘இதை விற்காதே’ என்று எச்சரித்தார். அவருடைய எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்த சுவாமிகள் மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.
கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அந்த முரடன் காவல் துறையில் புகார் செய்தான். போளூரிலிருந்து திருவண்ணாமலைக்கு திருவிழா பணிசெய்ய வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.
அடுத்த அரைமணியில் அந்தச் செய்தி ஊர்முழுவதும் பரவி, மக்கள் கொதிப்படைந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பிடிவாதமாக திருவிழா முடிந்தபிறகே சுவாமிகளை வெளியே விடமுடியும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.
ஆனால் அடுத்த அரைமணியில் போளூரிலிருந்து அவருக்குத் தந்தி வந்தது. அவர் மனைவி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொண்டான். “கதவைத் திறக்கத் தெரியாமல் பயந்து அழுது, மூர்ச்சையாகக் கிடக்கிறான். உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி தெரிவித்தது.
இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைத்து எடுக்கமுடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.
அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். “மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டீர்கள். அந்தப்பாபம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள்” என்று அழுதாள்.
இன்ஸ்பெக்டருக்கு தன் தவறு புலப்பட்டது. சுவாமிகளை விடுவிக்கும்படி திருவண்ணாமலைக்கு தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு, முரண்டு செய்யாமல், அச்சம் கொள்ளாமல் தானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? ஆச்சரியப்பட்டுப் போனார் இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் மகத்தான சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்று, சேஷாத்திரி சுவாமிகளை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

சேஷாத்ரி சுவாமிகள் - நோய் என்ன செய்யும்? சிறை என்ன செய்யும்? - 2

சுவாமிகள் எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்க மாட்டார். அரை மணிக்கு மேல் அவரை யாரும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. கால் போன போக்கில் எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பார். மரத்தின் அடியில் அமர்ந்து ஞானம் அடைந்த புத்தரைப் போல அல்லாமல் நடந்து நடந்தே ஞானமடைந்த அதிசயப் புயல்காற்று அவர்.
கிழிந்து போன ஆடைகளும், குளிக்காத உடலும், அழுக்கடைந்த தலைமுடியும். பார்ப்பதற்கு பைத்தியக் காரனைப் போன்ற தோற்றமும் கொண்டவர் மகான் சேஷாத்திரி சுவாமிகள். இதனால் அவரைப் பற்றித் தெரியாதவர்கள், அவரை விரட்டிவிடுவதும் உண்டு. சில பண்டிதர்களும், படாடோபப் பேர்வழிகளும் ‘இந்தக் கிறுக்கனை சித்தபுருஷன் என்று மூளையில்லாத மக்கள் நம்புகிறார்களே’ என்று கேலி செய்வதும் உண்டு.
1928ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் உள்ள மக்களை அம்மை நோய் தாக்கியது. பெரியம்மைநோய் பரவியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். நாளுக்கு நாள் அந்த நோய் கட்டுக்கடங்காமல் பெருகி மக்களை பலிவாங்கிக் கொண்டிருந்தது. சேஷாத்திரி சுவாமிகளையும் அம்மை நோய் தாக்கியது. அவர் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டாரே! நோய் கண்ட சுவாமிகளை ஒரே இடத்தில் இருக்கும்படியாகவும், வெளியே சுற்றக்கூடாது என்றும் சுகாதார இலாகாவினர் எச்சரித்தனர்.
இதற்கெல்லாம் கட்டுப்படுபவரா நம் சுவாமிகள்? அவர் தன் வழக்கப்படியே வெளியே சுற்றித் திரிந்தார். அதனால் நோய் எல்லாருக்கும் பரவும் என்று பயந்த அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்று வழக்குமன்றத்தில் நிற்க வைத்தனர். நீதிபதி அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும்படியாக உத்தரவிட்டார். அதனால் சுதந்தரமாகத் திரிந்த பறவை கூண்டுக் கிளியாகி விட்டது.
மறுநாள் காலையில் தண்டனை வழங்கிய நீதிபதி காரில் திண்டிவனம் அருகே சென்றபோது, சேஷாத்திரி சுவாமிகள் சாலையில் ஒரு புளியமரத்தின் அடியில் நிற்பதைக் கவனித்து ஆச்சரியம் அடைந்தார். தன் உதவியாளரிடம் அது குறித்துப் பேசும் போது, திருவண்ணாமலை நகைக்கடை செட்டியார் இராமசுவாமி என்பவர் அங்கே வந்தார். சுவாமிகளைக் கண்டு வணங்கினார். நீதிபதியிடம் அவர் மகானின் பெருமைகளைக் கூறினார்.
அவற்றை நம்பாத நீதிபதி தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்திரி இருக்கிறாரா? என்று பார்த்து வரும்படியாகச் சொல்லி அனுப்பி வைத்தார். மகானைக் கண்காணிக்க அவர் அங்கேயே தங்கிவிட்டார்.
“மகான் சேஷாத்திரி சுவாமிகளை யாராலும் சிறையில் அடைக்க முடியாது. அவர் பெருமையை அளவிட முடியாது” என்று செட்டியார் நீதிபதியிடம் எடுத்துக் கூறினார். நீதிபதி அவர் சொல்வதைக் கேட்கவில்லை. எனவே செட்டியார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் சிறைக்குச் சென்ற உதவியாளர், பூட்டியிருந்த சிறைக்குள்ளே சுவாமிகள் கண்களை மூடியவண்ணம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அச்சத்தால் வெளிறிப்போன முகத்தோடு மரத்தின் அடிக்கு வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொன்னார். அப்போதும் நம்பாத நீதிபதி விரைந்து வந்து சிறைக்குள் பார்த்தார். சுவாமிகள் சிறையில் நின்றிருந்தார்.

மகானின் பெருமையை உணர்ந்த நீதிபதி, அவரை விடுதலை செய்து, தான் செய்த தவறுக்காக மன்னிக்கும்படியாகவும் வேண்டிக்கொண்டார். சுவாமிகள் மௌனமாக சிறையிலிருந்து வெளியேறினார்.

மகான் சேஷாத்ரி சுவாமிகள்! - 1

சேஷாத்திரி சுவாமிகள் வரதராஜன், மரகதம் தம்பதிக்கு 1870ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் 22ஆம் தேதி மகனாகத் தோன்றினார். சிறு குழந்தையாக இருக்கும் போதே சில சித்து விளையாடல்களை சேஷாத்திரி சுவாமிகள் நடத்தியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள் ஒரு நாள் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார். சிறு வியாபாரிகளும் பெரும் வியாபாரிகளும் அவர் தனது கடைக்குள் நுழைய மாட்டாரா? என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சுவாமிகளின் கரம் ஒரே ஒரு முறை கடைப்பொருள்களை ஸ்பரிசித்தது விட்டால் போதும், அவ்வளவுதான். அத்தனை பொருள்களும் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு வியாபாரம் நடந்து பணம் குவிந்து விடும். அதனால் தான் வியாபாரிகள் அவரைக் கடவுளைப் போல எண்ணி எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சுவாமிகள் லேசுப்பட்டவரல்லர். அவ்வளவு எளிதில் ஏதோ ஒரு கடைக்குள் நுழைந்து விடமாட்டார். நல்ல குணமும், நேர்மையும் கொண்ட வியாபாரிகளின் கடைக்குள் மட்டுமே அவர் விஜயம் செய்வார். அவ்வாறே அன்றும் கடைவீதியின் தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் அவர் நோட்டம் விட்டவாறே சென்றார்.
என்ன நினைத்துக் கொண்டாரோ ஒரு கடைக்குள் நுழைந்தார். அது முத்தியாலு செட்டியாரின் மளிகைக்கடை. சுவாமிகள் உள்ளே சென்று, ஒரு மூலையில் இருந்த பெரிய நெய் டின்னை எடுத்துத் தூக்கிக் குப்புறக் கவிழ்த்தார். நெய் தெருவில் ஓடியது. மண்ணில் கலந்தது.
செட்டியாரோ சிறிதும் கவலை கொள்ளாமல் புன்னகையோடு சுவாமிகளைப் பார்த்துப் பக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தார். சுவாமிகள் கடையிலிருந்து வெளியெறிச் சென்றார். மறுநாளே செட்டியாருக்கு வராமல் போக்குக் காட்டிய நீண்ட நாளைய கடன் தொகை கேட்காமலேயே வந்து சேர்ந்தது. சேஷாத்திரி சுவாமிகளின் திருவிளையாடல் தான் வராத கடனை வரவழைத்துக் கொடுத்தது என்பதில் செட்டியாருக்கோ திருவண்ணாமலை வியாபாரிகளுக்கோ சிறிதளவும் சந்தேகமில்லை.

Wednesday, December 24, 2014

நாளை என்பது நம் கையில் இல்லை!

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக் கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், "என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம்,'' என்றது.
இரக்கமில்லாத அந்தப் பறவை, ""அடேய், எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன்,'' என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.
கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், "வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும்' என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது.
"அடே பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஊஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான்,'' என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

Wednesday, December 3, 2014

கபீரும் குருபரரும்


கபீரும் குருபரரும் சொல்ல வருவது ஒன்றே. சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். அதனால் எவரும் பயனடைவதில்லை. காலம் வீணே போய்க்கொண்டிருக்கும் என்பதே.

Wednesday, November 12, 2014

என்னை மாற்றும் இந்த பதிவுகள்

மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது. நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்

“ஒருநாள் ஒரு நண்பர் மகரிஷி 
 ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.
“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிஷி .
“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”
“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “

“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”

“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”
“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”
“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்
நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”
இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.
ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.
உடனே மகரிஷி  “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.
அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.
மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரி
ஷியும் செய்துள்ளார்