Tuesday, May 14, 2013

அன்னையும் ஆசாரியரும்.. {இதை முழுவதும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது}


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோர் கூற்றில் முதன்முதலாகப் போற்றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாதுகாத்து வருவதில் பெரும் பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவனாயினும் தாய் தன் அன்பினால் அவனைத் திருத்த முயல்வாளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் தீங்கு எண்ணமாட்டாள். இதுவே தேவ்யபராத - க்ஷமாபனஸ்துதியில் -
(குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி)
என்றவாறு தாயின் மேன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக உலகில் ஒருவன் அல்லலுறும் போது அன்னையை நினைந்து அவளுடைய ஆறுதலை எதிர்பார்ப்பது இயல்பு என்று பாஸ்கரராயர் என்ற உரையாசிரியர் தமது லலிதா ஸஹஸ்ரநாம உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புவியிலுள்ள அன்னையர் தமது மக்களின் துயர்துடைத்து ஆறுதலளிப்பார்களேயன்றி ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆத்யாத்மிகமெனும் மூன்றுவித தாபங்களைப் போக்க அவர்களால் இயலாது. அவ்விதமான மூன்று தாபங்களையும் போக்க வல்லது ஜகன் மாதாவான அம்பிகையின் அருளே என்று திண்ணமாக உரைக்கிறார் -
(அநுபூதாஸ்து மாதரோ ந தாபத்ரய ஹரண-ஸமர்த்தா:
அதோ துரந்த துஃக்க ஹரணக்ஷமாஸு ஸர்வோத்தமா ஜகன்மாதா ஏவ
ஸ்வஸ்மின் தயாவத்வாபாதனாய மாத்ருத்வேன ஸ்தோதவ்யா)
ஆகவே பிறப்பு இறப்பு என்று மாறி மாறி உழலும் சக்கரத்திலிருந்து முழுமையாக விடுபட ஜகன்மாதாவின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவதேயன்றி வேறோர் உபாயமுமில்லை. ஜகன்மாதாவான அம்பிகையானவள் தன்னைத் துதிப்போர்களை, துதித்த மாத்திரத்தில் அவர்களுக்கு தன்னுடன் இரண்டறக் கலக்கும் மேலான நிலையை - ஸாயுஜ்யத்தை - அருள்வாள் என்று பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரீயின் 22ஆவது சுலோகத்தில் கூறுகிறார் -
(ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்)
என்று ஆசார்யர், ஜீவாத்மாவானது பரமாத்மாவான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை நிலை நாட்டியிருப்பினும் அந்தப் பரமாத்ம ஸ்வரூபத்தை உணர்வதற்கு ஸகுணப்ரஹ்ம உபாஸனை வழிவகுக்கும் என்றும், அதற்கு பக்தி ஓர் இன்றியமையாத ஸாமக்ரீயென்று விவேகசூடாமணியில் னீணீமீ]sணீஜ்ஸீ sணீனீ¢(ணீனீ! தூவீடுக்ஷீமீஸ் ரீக்ஷீமிஹ்sமி (மோக்ஷஸாதனஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ) என்று சொல்லப் பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார். இவ்விதம் சுத்த சைதன்யஸ்வரூபமான நிர்குணப்ரஹ்மணை உணர ஸகுணப்ரஹ்மஸ்வரூபமாக தமக்கு உகந்த இறைவடிவங்களைத் துதிக்கிறார். பாவனோபனிஷத்தில்
(நிருபாதிக ஸம்விதேவ காமேச்வர:, ஸதானந்தபூர்ண: ஸ்வாத்மைவ பரதேவதா லலிதா)
என்று உபாதியற்ற சுத்தசைதன்யமே ஸம்வித் வடிவான காமேச்வரன், எப்பொழுதும் ஆனந்தம் நிறைந்து பரிபூர்ணமாயிருக்கின்ற தன்னுடைய ஆத்மசைதன்யத்தின் ஓர் அம்சமே பரதேவதையென்னும் லலிதாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம் மற்றும் ஸௌரம் என்ற ஆறு மதங்களை ஸ்தாபித்து அந்த தெய்வங்களுக்கான துதிகள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அந்த ஸ்தோத்ரப் படைப்புகளில் அம்பிகையைக் குறித்ததான சிலவற்றில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துகள் சிலவற்றை இங்கு காண்போம். பகவத்பாதரின் தேவீ ஸ்தோத்ரங்களில் முதன்மையாகத்  திகழ்வது ஸௌந்தர்யலஹரீயாகும். 103 சுலோகங்களைக் கொண்ட இந்த அரிய படைப்பு முதல் 41 சுலோகங்களுடன் ஆனந்தலஹரீ யெனும் பெயரில் முதல் பாகமாகவும், எஞ்சியிருக்கும் பாகம் ஸௌந்தர்யலஹரீ என்ற பெயரில் இரண்டாவது பாகமாகவும் பிரிக்கப் பட்டுள்ளதை உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அருணா மோதினீ உரையாசிரியரான காமேச்வர ஸூரி அல்லது காமதேவ கவி தம் உரையில் -
(வஸ்துதஸ்து அத்ர ஆனந்தலஹரீ ஸௌந்தர்யலஹரீ இதி வ்யவஹாரேண)
என்ற மரபைக் குறிப்பிடுகிறார். இதே கருத்தை டிண்டிம உரையாசிரியரான இராமகவியும், கோபாலஸுந்தரீ, ஆனந்தலஹரீ உரையாசிரியர்களான கோபாலசுந்தரரும், கௌரீகாந்தபட்டரும் குறிப்பிடுகின்றனர். மேலும் முதல் பகுதியில் காணும் 41 சுலோகங்கள் மந்த்ர சாஸ்த்ரத்தை விவரிப்பதாகவும் இரண்டாம் பகுதி அம்பிகையின் எழிலை வர்ணிப்பதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய மேன்மையான ஸ்தோத்ரத்தை தம் அடியவர்களின் மேன்மைக்காக சிவபெருமானின் அவதாரமான பகவத்பாதர் அருளியுள்ளாரென்று ஆனந்தகிரி என்ற உரையாசிரியரும் தெரிவிக்கிறார். அருணாமோதினீ உரையாசிரியர் இந்த ஸ்தோத்ர காவ்யத்தின் சிறப்பை suஜ்ணீவீsழிஜ்ணீமீனீஸிஙீஹ்மீ (ஸுதாஸிந்தோர் மத்யே) என்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் - பகவத்பாதர் இந்த ஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரத்தை எடுத்துக் கொண்டு கயிலாயத்திற்குச் சென்றபோது அங்கு ஏற்கெனவே அத்துதியைப் பாடக்கேட்டு, தம் இதயத்தில் இத்துதியைத் தோற்றுவித்து அருள்புரிந்தவர் கயிலாயத்தில் உள்ள உமாமஹேச்வர தம்பதியே என்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(பகவத்பாதா: ஸ்தோத்ரமேதத் விதாய கைலாஸம் கத்வா தத்ர ஏதாமேவ
ஸ்துதிம் பார்வதீ பரமேச்வர ஸமீபே பட்யமானாம் த்ருஷ்டவந்த: இதி ப்ரஸித்தி:)
ஸ்தோத்ரம் அல்லது வழிபாடு தமது மனத்துக்குகந்த கடவுளைக் குறித்த புற வழிபாடாக அமைவது அனைவராலும் இயன்ற ஓர் எளியமுறை. ஆனால் அதையே உட்புற வழிபாடாக தம் இதயத்தின் தஹராகாசத்தில் அமைந்திருக்கும் ஜ்யோதிஸ்வரூபத்தைக் குறித்ததாக அமையும் போது அது புலன்களைக் கட்டுப்படுத்திய துறவிகளால் மட்டுமே இயலும். இதுவே ஸமயாசாரமென்று அழைக்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தில்(ஸமயாசார தத்பரா) என்ற பெயருக்கான உரையில் பாஸ்கரராயர் இவ்வாறு விளக்குகிறார் -
(தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி
ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:)
இதயத்தின் தஹராகாசத்தில் ஸ்ரீசக்ரத்தைப் பாவித்து அதற்குச் செய்யப்படும் பூஜையே ஸமயாசாரம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார், பாஸ்கரராயர். இவ்வகையான ஸமயாசார முறையையொட்டியே ஸௌந்தர்யலஹரீ அமைந்ததாகவும் லக்ஷ்மீதரர் தம் உரையில் குறிப்பிட்டு பகவத்பாதரின் ஸமயாசார முறையில் ஆழ்ந்த புலமையையும் விவரித்துக் கூறியுள்ளார் -
(பகவத் பாதாசார்யா: ஸமயமத பாரத்ருச்வான: ஸமயாசாரப்ரவீணா: ஸமயரூபாம் பகவதீம் -
ஸ்துவந்தி ஸமயாசாரோ நாம ஆந்தரபூஜாரதி: குலாசாரோ நாம பாஹ்யபூஜாரதி: இதி ரஹஸ்யம்)
என்றும், மேலும் இதையே விவரிக்கும் போது பாஹ்யபூஜா என்னும் புறவழிபாட்டில் பூர்ஜபத்ரம் அல்லது துணி அல்லது தங்கம் அல்லது வெள்ளியாலான தகட்டில் சக்ரவடிவம் எழுதி வழிபடுவது. இதையே ஆன்றோர் கௌல பூஜையென்று அழைப்பதாகவும் கூறுகிறார் -
(பாஹ்யாகாசஜம் நாம பாஹ்யாவகாசே பீடாதௌ பூர்ஜ பத்ர சுத்த பட ஹேம
ரஜதாதி பட்டதலே லிகித்வா ஸமாராதனம் ஏததேவ கௌல பூஜேத்யாஹு: வ்ருத்தா:)
பகவத்பாதர்களும் புறவழிபாட்டினும் மேலான உட்புறமான ஆறு சக்ரங்களின் வழிபாட்டின் வாயிலாக தஹராகாசத்தில் தேவியை உபாஸிப்பதையே உணர்த்துகிறார். ஆத்மானு ஸந்தானமெனப்படும் சிவ-சக்தி வேறுபாடற்ற சுத்த சித்சக்தியான அம்பிகையை துதியின் மூலம் வர்ணிப்பதற்காகவே பகவத்பாதர் மந்த்ரங்களைக் குறிப்பிடுகிறாரென்று ஸௌபாக்யவர்த்தனீ உரை யாசிரியரான கைவல்யாச்ரமியும் தெரிவிக்கிறார் -
சிவ-சக்த்யோ: அபேதம் ஞாபயிதும் ஸகல ப்ரபஞ்ச ஸாக்ஷிண்யா: ப்ரஹ்ம –
அவினாபூத சித்-சக்தே: ஸ்துதித்வாரா மாத்ருகாதி மந்த்ரான் உத்தரதி
இதையே பாவனோபனிஷத் உணர்த்துவதாக முன்னர் குறிப்பிடப்பட்டது.
அம்பிகையை வழிபடவும் ஒருவர் ஈட்டிய நற்பலன்களே வழிவகுக்கும் என்பதை ஆசார்யர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஸௌந்தர்யலஹரியில் காணும் சுலோகங்களை விளக்கும் பொழுது உரையாசிரியர்களனைவரும் ஆசார்யரின் உத்திகளில் காணும் பொருட்செறிவையும். அவரது ஆழ்ந்த புலமையையும் போற்றியுள்ளனர். ஒவ்வொரு சுலோகத்தின் உரையிலும் சாக்த விஷயமானதும், பீஜமந்த்ரங்களைக் குறித்ததுமான பல சீறிய குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டாம் சுலோகத்தில் காணும் tஸீமிஹ்ணீ
(சரணா: சத்வார: - சுக்ல-ரக்த-மிச்ர-நிர்வாணா: தேஷாம் த்யான ஸ்தானானி - சுக்ல-ரக்தயோ: ஆக்ஞாசக்ரம் த்விதலம் மிச்ரஸ்ய ஹ்ருத்கமலம் நிர்வாணஸ்ய ஸஹஸ்ரதலம் த்வாதசாந்தம் சுக்லரக்தயோ: ப்ரஹ்ம-விஷ்ணூ த்யேயௌ மிச்ரே ருத்ர: நிர்வாணே ஸாக்ஷாத் பரமானந்த நிர்பர: ஸதாசிவரூப:)
என்று வர்ணித்து ப்ரஹ்மா அம்பிகையின் ரக்தவர்ணமான திருவடித்தாமரையின் துகளைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார்; விஷ்ணு வெண்மையான துகளைக் கொண்டு காத்தலையும், ஹரன் மிச்ரமான துகளைக் கொண்டு அழித்தலையும் புரிகின்றனரென்று சாக்த ஸம்ப்ரதாயத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.
அடுத்ததாக ஸுதாஸிந்தோர் மத்யே என்று தொடங்கும் 8ஆவது சுலோக உரையில் டிண்டிம உரையாசிரியர், தியானம், 64 உபசாரங்களுடனான பூஜை மற்றும் மந்த்ரங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். ஆங்காங்கே ஆகம ரஹஸ்யங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர் உரையாசிரியர்கள். மேலும் (ஸுதா ஸிந்தோர் மத்யே) என்று தொடங்கு (குல குண்டே குஹரிணி) என்று முடியும் 10ஆம் சுலோகம் வரையிலான மூன்று சுலோகங்களில் குண்டலினியின் ஸ்வரூபம் வர்ணிக்கப்பட்டு துதிக்கப்படுகிறது. (சதுர்பி: ஸ்ரீகண்டை:) யென்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் ஸ்ரீசக்ரம் அதை எழுதும் முறை ஆகிய விளக்கப்பட்டுள்ளன. (முகம் பிந்தும் க்ருத்வா) என்ற சுலோகத்தின் மூலம் ஆசார்யர் அர்த்தநாரீச்வர த்யானத்தை வர்ணித்து அதன் பலனையும் குறிப்பிடுகிறார். இங்கு பெரும்பாலான உரையாசிரியர்கள் 'க்லீம்' என்ற காமபீஜத்திலுள்ள உயிரெழுத்தாகிய 'ஈம்' என்ற எழுத்தின் வடிவத்தைக் குறிப்பிட்டு வேத மந்த்ரமான யஸ்தித்யாஜ ஸசிவிதம் என்று தொடங்கும் ரிக்வேத மற்றும் தைத்திரீய ஆரண்யகத்தில் இடம் பெறும் மந்திரத்தை மேற்கோளாகக் காண்பித்து பகவத்பாதரின் கருத்தை விளக்குகின்றனர். குறிப்பாக டிண்டிம உரையாசிரியரான இராமகவி சாரதா இலிபியெனும் காச்மீரதேசத்து எழுத்துகளில் 'ஈம்' என்ற எழுத்தின் வடிவம் ஸ்த்ரீரூபமாகப் புலப்படும் என்று விளக்குகிறார் -
(அத்ர லகார ககார வர்ஜனேன நிஷ்க்ருஷ்ட ரூப மன்மத பீஜம் ஸா ஏவ மஹாவித்யா
தஸ்யா சாரதாலிபிப்ரகாரேண லேகனேன ஸ்த்ரீரூபம் ஸம்பவதி முகம் பிந்துதயா
பாதி தத் அதஸ்தாத் த்வி பிந்துகம் குசத்வயம் ததா ஞேயம் அதஸ்தாத் த்ரிகோணகம்
ஏவமீகாரம் ஸ்யாத் ஏவம் காமகலா பரா)
முன்னர் குறிப்பிட்டவாறு ஸௌந்தர்யலஹரீயின் முதல் பகுதியில் காணப்படும் சுலோகங்கள் பெரும்பாலும் மந்த்ரகர்பமாக - அதாவது மூலமந்த்ரங்களை மையமாகக் கொண்டு வர்ணிக்கப்படுவதாக இருப்பினும் பாமரமக்களின் நலன் கருதி எளிய முறையில் கடைப்பிடிக்கப்படும் நாமோச்சாரணத்தின் மகிமையையும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். ராமகவி இக்கருத்தை தமது 22-ஆவது சுலோகத்திற்கான உரையில் விளக்குகிறார். “ஆகமங்களில் கூறப்பட்டுள்ள அந்தர்யாக முறைகள் கவனமிக்க மனநிலை கொண்டவர்களால் மட்டுமே பின்பற்ற இயலும். ஒவ்வொரு கணத்திலும் உலக வாழ்க்கையின் ஜ்வரத்தால் அல்லது தாபத்தால் மிகவும் அல்லல்பட்டு பக்தியொன்றை மட்டுமே ஸாதனமாகக் கொண்டு ஏதேனும் ஒரு தேவீஸ்தோத்ரத்தால் அம்பிகையைக் காண விழைவோர்க்கு உகந்த உபாயமிது”. “பவனாகிய சிவனின் துணைவியே! உன்னை வழிபடுகின்ற அடியவன் மீது கருணை நிரம்பிய பார்வையைச் செலுத்துவாய்!” எனச் சொல்லத் தொடங்கியதுமே 'பவானி த்வம்' என்ற இரு பதங்கள் முன் வந்தன. உடனே நீ அந்த அடியவனுக்கு முகுந்தனும், பிரம்மனும் இந்திரனும் தன் கிரீட ஒளிகளால் தீபாராதனை செய்கிற தனது நேரிடைக் காட்சியையளித்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாய்' என்று உரைத்து -(ஸாலோக்ய ஸாமீப்ய - ஸாரூப்ய - ஸாயுஜ்ய) போன்ற நான்கு உன்னதமான நிலைகளையும் அழகாக விளக்குகிறார். இந்த சுலோகத்தின் மற்றொரு சிறப்பு அத்வைதக் கோட்பாடுகளுக்கு அடிப்படையான மஹாவாக்யமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பதையும் விளக்குவதாக அமைந்ததுவே. வ்யாகரண ரீதியில் விளக்குங்கால் “அஹம் த்வம் பவானி” என்ற 'லோட்' உத்தமபுருஷ ஏகவசனப்ரயோகத்தால் “நான் நீயாவேன்” என்பதாகவும் பொருள் அமையும். லக்ஷ்மீதரர் இந்த சுலோகத்தின் உரையில்-
(பவானி இதி பதஸ்ய லோட் உத்தமபுருஷ ஏகவசானந்தத்வம் அவகம்ய தத்ஸாமா
மஹாவாக்ய ப்ரயோகோ அனேன ஸாதகேன னாதிகரண்யேன த்வம்பதஸ்ய அன்வயே
ப்ரயுக்த இதி மத்வா மஹாவாக்யபலம் தாதாத்ம்யம் திசதி பவதீ)
என்று குறிப்பிடுகிறார். இதுபோல் தாதாத்ம்யம் வேண்டி தியானிப்போரின் பலனை “ஸ்வதேஹோத் பூதாபி: க்ருணிபி:” என்று தொடங்கும் சுலோகத்திலும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். இவ்விதமாக ஒவ்வொரு சுலோகத்தின் பொருட்செறிவும் கருத்தாழமும் உரையாசிரியர்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஸ்ரீசக்ரத்தை வர்ணித்தது போல் பகவத்பாதர் ஆறு சக்ரங்களையும் வர்ணிக்கும் பொழுது ஆசார்யர் அவரோஹக்ரமமான ஆக்ஞாசக்ரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான வர்ணனை அருளியுள்ளார். சுலோகம் 36-ஆவது முதல் 41-ஆவது சுலோகம் வரை ஆறு சக்ரங்களும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இங்கு 41-ஆவது சுலோக உரையில் லக்ஷ்மீதரர் ஸமய மார்கத்தையும் அதைப் பின்பற்றுவோரையும் விளக்கிவிட்டு பகவத்பாதர் இந்த ஸ்தோத்ரத்தில் மூலாதாரத்திலிருந்து தொடங்காமல் மாறாக ஆக்ஞாசக்ரத்திலிருந்து அவரோஹக்ரமமாக வர்ணித்ததன் நோக்கம் வேதங்களின் வசனத்தை அனுஸரித்ததுவே என்று குறிப்பிடுகிறார் -
(அத்ர பகவத்பாதை: ஆதாரகமலாதிக்ரமம் விஹாய
ஆக்ஞாசக்ராதிக்ரமேண அவரோஹக்ரமேண பூஜாப்ரகார: கதித:
அயமாசய: - ஆத்மன: ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ
இதி ச்ரௌதக்ரமமவலம்ப்ய அவரோஹக்ரம: உக்த:)
இங்கு கௌல மார்க்கத்தையும், திகம்பர, க்ஷபணகர்களின் உபாஸனா முறைகளைக் குறிப்பிட்டுச், சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. ஆனால் அவையனைத்தும் வேதமார்க்கத்திற்குப் புறம்பானதால் நினைத்துப் பார்க்கவும் உகந்ததல்ல என்றும் கூறுகிறார் -
(அத்ர பஹு வக்தவ்யமஸ்தி: தத்து அவைதிகமார்கத்வாத் ஸ்மரணார்ஹம் அபி ந பவதி)
ஸௌந்தர்யலஹரீயின் இரண்டாவது பாகமான 42 -முதல் 103 வரையிலான 62 சுலோகங்களில் அம்பிகையின் ஸௌந்தர்யம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸ பரிவ்ராஜகரான ஆசார்யர் முற்றிலும் அனைத்தையும் துறந்தவர். அவர் ஏன் பவானியின் அழகை வர்ணிக்க முனைந்தார் என்று பூர்வபக்ஷமாகக் கேள்வியெழுப்பிய பதார்த்த சந்த்ரிகா உரையாசிரியர் அதற்கு இவ்வாறு பதிலுமளிக்கிறார் - பவானீ ப்ரஹ்மவடிவினள். ப்ரஹ்மத்தை உருவகப்படுத்துவதே பவானியின் வர்ணனை என்று -
(பவான்யா ப்ரஹ்மரூபத்வேன ப்ரஹ்மஸ்வரூப வர்ணனமேவ
பவானீ வர்ணனம் இதி ந அநௌசித்யம்)
சித்சக்தியாக அனைத்திலும் பரவிநிற்பவள் இவளேயென்று மார்க்கண்டேய, புராணமும் வர்ணிக்கிறது.
(சிதிரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்)
பகவத் பாதர் அருளிய தேவீஸ்தோத்ரங்களில் பவானீபுஜங்க ஸ்தோத்ரத்தில் பதினாறு சுலோகங்களும் ஸௌந்தர்யலஹரீயில் காணப்படும் கருத்துகளுக்கு ஒப்பானதாகவே பெரும்பாலும் உள்ளன. பகவத்பாத ஸ்தோத்ர ரத்னாவளி என்ற தலைப்பில் வெளியான நூலில் ஸ்ரீலலிதா பஞ்ச ரத்னம், கௌரீதசகம், ஸ்ரீத்ரிபுரஸுந்தர் - யஷ்டகம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம் பவானீ புஜங்கம், கல்யாணவ்ருஷ்டிஸ்தவம், மற்றும் ஆனந்தலஹரீ ஸ்தவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவ மெனும் ஸ்தோத்ரத்தில் பீஜாக்ஷரங்களான க,ஏ,ஈ,ல, ஹ்ரீம்;, ஹ,ஸ,க,ஹ,ல,ஹ்ரீம்; ஸ,க,ல, ஹ்ரீம் என்ற எழுத்துகளில் தொடங்கி அவற்றை மாலையாக அம்பிகைக்கு அர்ப்பணித்துள்ளார். இங்கு காணப்படும் 'ஹ்ரீம்' என்ற பீஜாக்ஷரத்திற்கு இருக்கும் சிறப்பை ஆசார்யரின் துதிகளில் பல இடங்களில் அறியலாம். இங்கு 15-ஆவது சுலோகத்தில் - (ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மனுனா) என்று குறிப்பிடுவதற்கேற்ப அவரது கல்யாணவ்ருஷ்டி ஸ்தவத்திலும் தெளிவாகக் கூறுகிறார் -
(ஹ்ரீங்காரமேவ தவ நாம க்ருணந்தி வேதா:) (சு:5), என்றும்,
(ஹ்ரீம் - ஹ்ரீமிதி ப்ரதிதினம் ஜபதாம்) (சு:11), என்றும்,
(ஹ்ரீங்காரமேவ தவ நாம ததேவ ரூபம்) (சு:14), என்றும், வர்ணித்து இறுதியாக பலச்ருதியில்,
(ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மஹதா மந்த்ரேண ஸந்தீபிதம் ஸ்தோத்ரம் ய: ப்ரதிவாஸரம் தவ புரோ மாதர்ஜபேன் மந்த்ரவித் தஸ்ய க்ஷோணி புஜோ பவந்தி வசகா லக்ஷ்மீ சிர: ஸ்தாயினீ வாணீ நிர்மலஸூக்தி பார பரிதா ஜாகர்த்தி தீர்க்கம் வய:)
“ஹ்ரீங்காரத்தை மூன்று முறை ஸம்புடீகரணம் செய்வதாக அமைந்த இத்துதியை அன்னையே! எவனொருவன் உனது முன்னிலையில் ஒவ்வொருநாளும் ஜபிப்பானோ அவனுக்கு அரசர்களும் கட்டுப்பட்டு, நிலையான செல்வம், குறையேதுமில்லாத தெளிவான சொல்வன்மை, மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கப்பெறும்” என்று உணர்த்துகிறார். மேலும் இதே துதியில் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவது மிகுந்த பலனை அளிக்கும் என்பதை -
(ஸர்வக்ஞதாம் ஸதஸி வாக்படுதாம் ப்ரஸூதே தேவி த்வதங்க்ரி ஸரஸீருஹயோ: ப்ரணாம:)
என்றும் வர்ணிக்கிறார். “இறைவன் என்று ப்ரஹ்மா முதலானோரிருப்பினும் அவர்களனைவரும் ப்ரளயகாலத்தில் மறைந்து போவார்கள். அன்னையே! எவனொருவன் உனது திருவடிகளில் ஒருமுறை பணிந்து வணங்குவானோ அவன் ஒருவனே நிலையாக இருப்பான்” என்றும் “உன்னைக் குறித்து செய்யும் வழிபாட்டில் உனது மேன்மையான வடிவங்கண்டு எனது கண்களில் நீர்மல்கி களிப்படையவேண்டும் என்பதே நான் விரும்புவது” என்றும் பிரார்த்திக்கிறார்.
(ஏதாவதேவ ஜனனி ஸ்ப்ருஹணீயமாஸ்தே த்வத்வந்தனேஷு ஸலில ஸ்தகிதே ச நேத்ரே
ஸான்னித்யம் உத்யதருணாயுத ஸோதரஸ்ய த்வத்விக்ரஹஸ்ய பரயா ஸுதயாப்லுதஸ்ய) (சு:2)
இவ்விதம் ஸ்ரீசிவனின் அவதாரமாகப் போற்றப் பட்ட பகவத்பாதர் அடியவர்களின் நலன் கருதி அருளிய துதிகள் ஏராளம். சில துதிகள் அவர் பெயரில் காணப்படினும் அவற்றின் நடை மற்றும் பொருட்செறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யும்பொழுது அவை விலக்கப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பீஜாக்ஷரங்களனைத்தும் தகுந்த குருவின் உபதேசத்தால் மட்டுமே முறையாகப் பயிலவேண்டும். ஸ்ரீவித்யாஉபாஸனையில் நன்கு தேர்ச்சிபெற்ற தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்ற பின்னர் பயில்வதன்மூலம் தக்க பலனைப் பெற இயலும். மந்த்ரகர்பமான பல துதிகள் ஸாதகனின் வினைப்பயன்களுக்கேற்ப அமையும். அம்பிகையைத் தொழுவதும் அவரவர்களின் நற்பலன்களால் மட்டுமே இயலும் என்பதையே பகவத்பாதர், (ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருதபுண்ய: ப்ரபவதி) என்று குறிப்பிடுகிறார். பகவத்பாதர் போன்ற அவதார புருஷர்கள் தாம் ஆத்ம ஸாக்ஷாத்காரமெனும் முக்தி பெற்று, தம் ஆனந்தானுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் உலகத்தோர் உய்யத் துணை புரிவார்கள் என்று அவரது விவேக சூடாமணியின் வசனம் மூலம் அறியலாம் -
(சாந்தா மஹாந்தா நிவஸந்தி ஸந்த: வஸந்தவல்லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீம பவார்ணவம் ஜனான் அஹேதுனா அன்யானபி தாரயந்த:) (சு:39)
மஹான்கள் சாந்தஸ்வரூபத்துடன் அனைவருக்கும் வஸந்தருதுபோல் நன்மை புரிந்து பயங்கரமான பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஏனையோரையும் எந்தவொரு பலனையும் கருதாது பிறவிப் பெருங்கடலைக் கடக்க வைப்பார்கள்.

Thursday, May 9, 2013

குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும்,

பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார், " இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது, இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம்" என்றார்.

உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.

Tuesday, May 7, 2013

தெய்வீக கதைகள்

ராமான்னு சொல்லு!
வெங்கடாஜலபதிக்கு ஒரே மகன். அவரது மகன் வாசுதேவனுக்கு பக்தி சிறிதும் இல்லை. துறவி ஒருவரிடம் மகனின் நிலையைச் சொல்லி, ""சுவாமி! நீங்கள் தான் அவனுக்கு வழி காட்ட வேண்டும்'' என்று வேண்டினார். 
""கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார் துறவி.
மறுநாள் வெங்கடாஜலபதியின் வீட்டுக்கு வந்து, ராம நாமம் ஜெபித்தபடி பூஜை செய்தார். வாசுதேவன் தனது அறைக்குள்ளேயே 
இருந்தான்.
இதையறிந்த துறவி, அறையை வெளிப்புறமாகப் பூட்டினார்.
உள்ளிருந்த வாசுதேவன் கதவைத் திறக்கும்படி கூச்சலிட்டான்.
""அடேய்! வீட்டிலே பூஜை நடக்குது! அதில் கலந்துகிடாமே உள்ளேயே இருக்குறியே! உனக்கு பொறுப்பிருக்கா! சரி...சரி...ராமா.. ராமான்னு பதினொரு தடவை சொல்லு... திறக்கிறேன்,'' என்றார் துறவி.
உள்ளிருந்த வாசுதேவன், ""ராமான்னு தானே சொல்லணும்...11 தடவை என்ன! 101 தடவை கூட சொல்றேன்... கதவைத் திறங்கய்யா சாமி!'' என்றான்
""அவ்வளவு லேசிலே திறக்க மாட்டேன்! தினமும் நீ ராமநாமம் சொல்லணும்! உன் விதி முடிந்து, நீ எமலோகம் சென்ற பிறகு எமன் அந்த புண்ணியத்தின் பலனைக் கேட்பான். ஆனால், நீ அதைக் கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கணும். இதை நான் காரணமாத்தான் சொல்றேன்,'' என்றார். 
""இந்த சாமியாருக்கு பைத்தியம் போலும்! செத்த பிறகு, நடக்கப் போறதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும்? சரி..சரி..இப்போ கதவைத் திறந்தாகணும்! அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டி வைப்போம்,'' என சிந்தித்த வாசுதேவன், அவர் சொல்கிறபடி நடப்பதாக வாக்களித்தான்.
துறவி கதவைத் திறந்து விட்டார். காலம் கடந்தது. வாசுதேவனும் இறந்து போனான்.
எமலோகத்தில் சித்ரகுப்தர் ஏட்டைப் புரட்டி, ""பிரபு! பக்தி இல்லாத இந்த வாசுதேவன், நரகம் செல்ல வேண்டியவன். ஆனால், ஒரே ஒரு முறை நிர்ப்பந்தத்தின் பேரில் ராம நாமம் சொல்லியிருக்கிறான். அதற்கான புண்ணிய பலனை இவனிடமிருந்து தாரை வார்த்து பெற்றால் தான், இவனை நரகத்துக்கு அனுப்ப முடியும், '' என்றார்.
அப்போது தான்,"எதற்காகவும் ராம நாம பலனை எமதர்மனுக்கு கொடுக்கக்கூடாது' என்று துறவி சொன்னது அவனது நினைவுக்கு வந்தது.
"" எமதர்மனே! ராமநாம பலனை எக்காரணம் கொண்டும் தரமாட்டேன். வேண்டுமானால், என்னை நரகத்தில் இப்போதே தள்ளுங்கள்,'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான். 
சித்ரகுப்தர்,""புண்ணிய பலன் இருக்க, ஒரு ஜீவன் நரகம் செல்ல முடியாது'' என்றார். 
என்ன செய்வதென புரியாத எமதர்மன் இந்திரன் உதவியை நாடினான்.
குழம்பிய இந்திரன், "" பிரம்மாவிடம் தீர்வு கேட்போம்'' என்றான்.
பிரம்மாவோ,""விஷ்ணுவிடம் இவனை ஒப்படைப்போம்'' என்றார் . 
வைகுண்ட வாசலில் நின்றபடி, "" நாராயணா! இந்த ஜீவன் அடைய வேண்டிய கதி தான் என்ன? ஒரு முறை ராமநாமம் சொன்ன இவனை என்ன தான் செய்வது? '' என ஓலமிட்டனர் அனைவரும்.
""சித்திரகுப்தன், எமதர்மன், இந்திரன், பிரம்மா, நாராயணனாகிய நான் என நம் அனைவரின் தரிசனமும் ஒன்று சேர இவனுக்கு கிடைத்ததே ராம நாமத்தின் மகிமையால் தான்! இவனை சொர்க்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை,'' என்று நாராயணன் 
சொன்னார். வாசுதேவனுக்கு சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டது. 

Tuesday, April 30, 2013

நானே கடவுள்! அஹம் ப்ரஹ்மாஸ்மி!





ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம்.
பைரவ ருத்ராய
 - பயங்கரமான ருத்ரன்
மகா ருத்ராய - பெரிய ருத்ரன்
கால ருத்ராய - கால வடிவான ருத்ரன்
கல்பாந்த ருத்ராய - கால முடிவான ருத்ரன்
வீர ருத்ராய - வீர ருத்ரன்
ருத்ர ருத்ராய - ருத்ரர்களில் பெரிய ருத்ரன்
கோர ருத்ராய - பயமுறுத்தும் ருத்ரன்
அகோர ருத்ராய - பயங்கரமில்லாத ருத்ரன்
மார்த்தாண்ட ருத்ராய - ஒளிவீசும் ருத்ரன்
அண்ட ருத்ராய - முட்டை வடிவ அகில ருத்ரன்
ப்ரஹ்மாண்ட ருத்ராய - மிகப்பெரிய அகில ருத்ரன்
சண்ட ருத்ராய - ஆவேசமான ருத்ரன்
ப்ரசண்ட ருத்ராய - மிக ஆவேசமான ருத்ரன்
தண்ட ருத்ராய - தண்டனையான ருத்ரன்
சூர ருத்ராய - பலம் பொருந்திய ருத்ரன்
வீர ருத்ராய - வீரனான ருத்ரன்
பவ ருத்ராய - பிறப்பிறப்புச் சுழலான ருத்ரன்
பீம ருத்ராய - வியப்புக்குரிய ருத்ரன்
அதல ருத்ராய - கீழ் உலகங்களின் முதலான அதல உலக ருத்ரன்
விதல ருத்ராய - இரண்டாவதான விதல உலக ருத்ரன்
சுதல ருத்ராய - மூன்றாவதான சுதல உலக ருத்ரன்
மஹாதல ருத்ராய - நான்காவதான மஹாதல உலக ருத்ரன்
ரசாதல ருத்ராய - ஐந்தாவதான ரசாதல உலக ருத்ரன்
தளாதல ருத்ராய - ஆறாவதான தலாதல உலக ருத்ரன்
பாதாள ருத்ராய - ஏழாவதான பாதாள உலக ருத்ரன்
நமோ நம: - போற்றி போற்றி
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்
சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
(அடுத்து வருவது ஸ்ரீருத்ரம் என்னும் வேத மந்திரத்தின் பகுதி)
நம: சோமாய ச - உமையுடன் கூடியவனுக்கு வணக்கம்
ருத்ராய ச - அழுகையைத் தருபவனுக்கும் வணக்கம்
நம: தாம்ராய ச - தாமிர நிறம் கொண்டவனுக்கு வணக்கம்
அருணாய ச - சிவந்த நிறம் கொண்ட சிவனுக்கும் வணக்கம்
நம: சங்காய ச - மகிழ்ச்சியைத் தருபவனுக்கு வணக்கம்
பசுபதயௌ ச - எல்லா உயிர்களின் உரிமையாளனுக்கும் வணக்கம்
நம உக்ராய ச - உக்கிரமானவனுக்கு வணக்கம்
பீமாய ச - பயமுறுத்துபவனுக்கும் வணக்கம்
நமோ அக்ரேவதாய ச - அருகில் இருந்து அழிப்பவனுக்கு வணக்கம்
தூரேவதாய ச - தூரத்தில் இருந்து வதைப்பவனுக்கும் வணக்கம்
நமோ ஹந்த்ரே ச - அழிப்பவனுக்கு வணக்கம்
ஹனீயசே ச - அனைத்தையும் அழிப்பவனுக்கும் வணக்கம்
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ - பசுமையான முடி கொண்ட மரங்களாக இருப்பவனுக்கு வணக்கம்
நம ஸ்தாராய - தாரக மந்திரமான ஓம்காரமானவனுக்கு வணக்கம்
நம: சம்பவே ச - அனைத்து இன்பத்திற்கும் பிறப்பிடமானவனுக்கு வணக்கம்
மயோ பவே ச - இம்மையும் மறுமையும் ஆனவனுக்கு வணக்கம்
நம: சங்கராய ச - இயல்பாகவே இன்பத்தைத் தருபவனுக்கு வணக்கம்
மயஸ்கராய ச நம: - பேரின்பத்தை மறுமையில் தருபவனுக்கும் வணக்கம்
சிவாய ச - மங்கல வடிவான சிவனுக்கு வணக்கம்
சிவதராய ச - எல்லோரையும் விட மங்கலமானவனுக்கு வணக்கம்
(ஸ்ரீருத்ர மந்திரப் பகுதி முடிந்தது)
அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா - கோடி கோடி உலகங்களாக நிற்கும் முட்டை வடிவான பிரபஞ்சத்தை நன்றாக நடத்துபவனே
பூரணா - முழுமையானவனே
ஜகத்காரணா - உலகத்தின் பிறப்பிடமே
சத்ய தேவ - உண்மைக்கடவுளே
தேவ ப்ரியா - தேவர்களுக்குப் பிரியமானவனே
வேத வேதார்த்த சாரா - வேதங்களுக்கும் வேதப் பொருளுக்கும் அடிப்படையானவனே
யக்ஞ யக்ஞோமயா - வேள்விகளின் உருவானவனே
நிஷ்சலா - சலனம்/அசைவு இல்லாதவனே
துஷ்ட நிக்ரஹா - தீமையை அகற்றுபவனே
சப்த லோக சம்ரக்ஷணா - ஏழுலகையும் நன்கு காப்பவனே
சோம சூர்ய அக்னி லோசனா - சந்திரன், சூரியன், தீ என்னும் மூன்று கண்களை உடையவனே
ஷ்வேத ரிஷப வாகனா - வெள்ளை விடை வாகனனே
சூல பாணி - திரிசூலம் ஏந்தியவனே
புஜங்க பூஷணா - பாம்புகளை அணிந்தவனே
த்ரிபுர நாச நர்தனா - மூவுலகையும் அழித்து ஆடுபவனே
வ்யோம கேச - மேலே தூக்கி முடித்த சடையை உடையவனே
மஹாசேன ஜனகா - தேவசேனாபதியான முருகனின் தந்தையே
பஞ்ச வக்த்ர - ஐந்து முகத்தோனே
பரசு ஹஸ்த நம: - மழுவேந்தியவனே போற்றி
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
கால - காலமே
த்ரிகால - மூன்று காலமே
நேத்ர - கண்ணே
த்ரிநேத்ர - முக்கண்ணனே
சூல - சூலனே
த்ரிசூல தாத்ரம் - திரிசூலம் தாங்கியவனே
சத்ய ப்ரபாவ - உண்மைப் பெருமையுடையவனே
திவ்ய ப்ரகாச - தெய்வீகமான ஒளியை உடையவனே
மந்த்ர ஸ்வரூப மாத்ரம் - மந்திர உருவமாக மட்டும் இருப்பவனே
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் - உலகமும் அதன் குறைகளும் இல்லாதவன் நான்
நிஜ பூர்ண போதகம் ஹம் - உண்மையான முழுமையான அறிவு உடையவன் நான்
கத்ய கத்மாகம் - படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்தவன்
நித்ய ப்ரஹ்மோகம் - என்றும் பிரம்மமானவன்
ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம் - கனவுகள் இல்லாதவன் நான் நான் (வாழ்க்கை என்னும் பெருங்கனவு இல்லாதவன்)
சத் சித் ப்ரமானம் ஓம் ஓம் - உண்மையும் அறிவுமே ஆதாரங்கள் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம் - உலகமே அறிவது ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - இதுவே கடவுள் ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - நானே கடவுள் ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரதி - கன கன என்று ஆயிரம் குரல்களின் ஒலி கேட்கிறதே
டம டம டம டம டும ரும டும ரும சிவ டமருக நாத விஹரதி - டம டம டும ரும என்று சிவனின் உடுக்கை ஒலி கேட்கிறதே
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.
வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்
சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

Thursday, April 25, 2013

உணர்வில் உணவின் தாக்கம்

[lalo3.jpg]

குரு நானக் தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நில சுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோ நானக் கை தேடி வந்து கேட்கலானார்.
“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”
“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால் பாயி லாலோவுடன் தங்கினேன்”
“லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?”
“அவசியம் தெரிய வேண்டுமா ?”
“ஆம்”
“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும் பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.

மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”


“அன்பிற்குரிய பாகோ உன்னை அவமானப் படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.

குருவினுடைய கூற்றை உண்மையாக்கிக் காட்டினார் குரு நானக். ஆம், கபீர்தாஸரை நானக்கின் குரு என்று கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவர்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சீக்கியர்களின் கிரந்த சஸாஹேப் எனப்படும் புனித நூலில் கபீரின் 541 ஈரடிகளும் பாடல்களும் உண்டு. கிரந்தஸாஹேப்~ல் இல்லாத ஈரடிகளை கபீரது மூல ஈரடிகள் அல்லவென்றும் பிற்சேர்க்கையெனவும் கொள்வோர் உளர்.அந்த அளவிற்கு கபீரின் போதனைகளுடன் ஒன்றியிருந்தார் குரு நானக்.
இப்போது கபீரின் அந்த ஈரடியைக் காண்போமா?
பாலொக்கும் தானே வந்தது,நீரொக்கும் இரந்து பெற்றது
ஒறுத்து ஆர்தல் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது
.
(ஒக்கும் = போல;ஒறுத்து =துன்புறுத்துதல்;ஆர்தல்= அனுபவித்தல்,புசித்தல்,குடித்தல்; செந்நீர்= இரத்தம்; கேண்மினோ =கேட்பீரே)மாற்று :
வழிமுறை வந்தது பாலொக்கும், நீராகும் இரந்து பெற்றது

வலித்து புசிப்பின் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது

(வழிமுறை =முறையான வழி, தர்மத்திற்குட்பட்ட வழி; வலித்து =துன்புறுத்தி )
உடல் வளர்ச்சியைப் போலவே ஆன்ம வளர்ச்சியும் இன்றிமையாதது. இதை அருட்செல்வம் என்பார் வள்ளுவர்.
"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்...." என்று குறிப்பிடுகிறார். பால் உடலின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவது. அருட்செல்வம் ஆன்மாவிற்கு ஊட்டமாகும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)'

என்ற குறளில் தீய வழியில் அல்லாமல் முறையறிந்து நேர்மையாக செயல் புரிந்து தேடிய செல்வம் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் என்கிற கருத்தை பார்க்கிறோம்.லாலோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே குருஅருளுக்கு முழுவதும் தகுதியானவர்கள்.
ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் பிறன்கையை எதிர்பார்க்காமல் வாழ்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுவதுண்டு.அத்தகைய நிலைமையில் பிறரிடமிருந்து பெருகின்ற உதவி ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக உதவாவிட்டாலும் பாதை பிறழாது இருக்கலாம். எப்படி குடிநீரில் ஊட்டச்சத்து இல்லாவிடினும் அது உடலுக்கு அத்தியாவசியமோ அது போல சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரத்தலும் ஈகையும் ஒரு முக்கிய அங்கம்.
துறவிகளும், வறியவர்களும் அபலைகளும் இரத்தல் மூலமே ஈகைக்கான வாய்ப்பை பிறருக்கு அளிக்கிறார்கள்.
இதை திருவள்ளுவரும் அங்கீகரிக்கிறார்.

இரக்க இரக்கத்தக்கார்க் காணின், கரப்பின்அவர்பழி; தம்பழி அன்று (1051)
[யாசித்தலுக்கு ஏற்றவரிடம் சென்று யாசிக்கலாம்.அவர் மறைத்து இல்லை என்றால் அது அவருக்கே பழியாகும்,யாசிப்பவருக்கு இல்லை]
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
[பொருளற்ற ஏழையின் கடும்பசியைத்தீர்ப்பதே தன் செல்வத்தை தனக்குப்பின் உதவுவதற்காக சேர்த்து வைக்கும் சிறந்த இடமாகும். ]பாலும் நீரும் உடலுக்கு இன்றியமையாதது போல ஈகையும் இரத்தலும் உலகில் அற வாழ்க்கைகு இன்றியமையாதது.
ஆனால் பிறரை துன்புறுத்தி பயனடைபவர் போக்கு அசுரகுணத்தை சேர்ந்தது. அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவை பிறரின் இரத்தத்தை குடிப்பதற்கு சமானமாக சொல்கிறார் கபீர்.
குருநானக் இந்த நிகழ்ச்சி மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எவனொருவன், பாகோ போன்ற சித்தசுத்தி இல்லாதவர் கையால் உணவை ஏற்பானோ அவனது சித்தமும் அன்னமிட்டவனின் சித்தத்தைப் போலவே அசுத்தம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. 

நம் எண்ண அதிர்வுகள் எந்த அளவுக்கு பிறரை பாதிக்கக்கூடும் என்பதையும் அதன் காரணமாக நல்ல எண்ணங்களை வளர்ப்பதிலும் காப்பதிலும் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பும் இதன் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார் மகான் குரு நானக்.

Monday, April 8, 2013

அந்த ஒலி ஓம்

ஒரு கால கட்டத்தில் இரண்டு வெவ்வேறு அணுக்கூறுகள் ஒன்று சேர்ந்து  
( H2 +O2 = H2O ) என்ற ஒரு நீர் அணுக்கருவாக மாறின.

இப்படி பல கோடிக்கணக்கான நீர் அணுக்கள் ஒன்று சேர்ந்த மழை மேகங்கள் என்ற நிலையினை அடைந்தது. பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியினை அடைந்தது . பிறகு நீர் துளிகளாக மாறி மழையாக பூமியின் மீது பெய்யத் தொடங்கியது.
இப்படித்தான் பூமி உண்டான காலத்தில் , பிற்காலத்தில் பூமியில் உண்டாகப் போகும்   தாவர இனங்களுக்கும் உயிரினங்களுக்கும் ஆதாரமான தண்ணீர் என்ற ஒன்று உண்டாகியது. 

இப்படி பெய்யும்  மழையின் நீரானது பூமியினை நெருங்க முடியாதபடி, அதாவது மழை நீரானது பூமியினை நெருங்கும் முன்பே ஆவியாகி விடும் அளவிற்கு  பூமியானது  கடுமையான நெருப்புக் கோளமாக இருந்தது.

மழை நீர் பூமியினை தொடவே பல ஆயிரம் ஆண்டுகள்  ஆயிற்று.
இப்படி தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக பூமி குளிர்ந்து ஒரு கடின தன்மையினை அடையலாயிற்று . பூமியின் மேல் ஓட்டின் ஆழம் 40 கிலோ மீட்டர் வரை சென்றது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் பெய்த மழையின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால்  சூழப்பட்டும், மீது ஒரு பங்கு நிலப் பரப்பகவும்  நீருக்கு  மேல் தோன்றியது.

ஒரு வழியாக பூமியின்  மீது பெய்த மழை நின்றது. இருட்டும் மறைந்தது. சூரியனின்  ஒளியும், வெப்பமும் பூமியின் மீது விழுந்தது. அந்த காலத்தில் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்து விழுந்து கொண்டே இருந்த விண்கற்களின் வெடிப்பால் ஏற்பட்ட ஒலிகளும் மற்றும் உலகம் சுற்றுவதால் ஏற்பட்ட ஒலியினையும் தவிர வேறு ஒலிகள் என்பது ஒன்று இல்லாமலே உலகம் முழவதும் ஒரே நிசப்தமாக இருந்தது.
ஒன்று அசையும்போது அதிலிருந்து ஒரு ஒலியும் உண்டாகும் என்பது இயற்கைக் கோட்பாடு.
அந்த ஒலி ஓம் என்று ஒலித்தது என்று ஆன்மீகம் கருதுகிறது. 

அப்போது பூமியில் மலைத்தொடர்கள், எரிமலைகள், வெந்நீர் ஊற்றுகள், நதிகள் என்று பல  உண்டாகியிருந்தன.
மலைகளில் இருந்து பல நீர் ஓடைகள் தோன்றி சமவெளியில் நதியாகப் பாய்ந்து முடிவில் கடலில் கலந்தன.  மலைகளில் உண்டான நதியானது அது வரும் வழியில் உள்ள பாறை களையும் அடித்துக் கொண்டு வரும்போது அவைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறி மணலாகவும் , வண்டல் மண்ணாகவும் மாறியது.
                                        அதனால் நதியின் ஓரங்களில் விவசாய நிலங்கள் உண்டாயின.
பல எரி மலைகளின் அடியில் உள்ள வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக திரவ நிலையில் இருந்தமக்மா என்ற எரிமலையில் இருந்து வெளியே சீறிப் பாய்ந்தது. இந்த குழம்பானது நன்கு பக்கங்களிலும்  ஒழுகி ஓடின. எரிமலையின் சாம்பல்கள் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரையிலும் சென்று படிந்தன.
 இந்த எரிமலையின் சாம்பல் விவசாயத்திற்கு ஏற்ற உரமாக மாறியது.
அந்த காலத்தில் உலகின் பல பாகங்களிலும் அதிக அளவில் எரிமலைகள் இருந்தன. ஆனால் பிற்காலத்தில் அவைகளில் பல வெடித்துச் சிதறி மறைந்து விட்டது.
பூமியின் சுழற்சியின் வேகம் மற்றும்  சூரிய வெப்பம் குறைவின் காரணமாகவும் அந்த பகுதிகளில் கடுமையான குளிர்ச்சி நிலை ஏற்பட்டு அதனால் அந்த பகுதிகளில் இருந்த தண்ணீரானது பனிமலைகளாக  உறைந்திருந்தன

Thursday, March 21, 2013

மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்".

 
கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.
..இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடுகிறார்.
இதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.
இந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.
தினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்
உரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்

( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் ) அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.

எறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்

"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்".
என்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்