Thursday, March 21, 2013

மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்".

 
கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.
..இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடுகிறார்.
இதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.
இந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.
தினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்
உரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்

( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் ) அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.

எறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்

"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்".
என்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்

Wednesday, February 6, 2013

குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை!


சத்திய மில்லாஸ் மரணையும் கூடா சத்குரு வில்லா பக்தியும் சமையா
நித்தியத் திரையும் நிற்றலு மிடையே பாரதம் செய்யும் கஞ்சனம் வாரா!

( ஸ்மரணை = இறை சிந்தனை ; சமையா= பக்குவப் படாதது ; பாரதம் = பாதரசம்; கஞ்சனம் = பொன், தகம் )
ரச வாதம் என்பது பல விதமான உலோகங்களை பாதரசத்தின் தொடர்பினால் பொன்னாக மாற்றும் கலை. தாயுமானவர் இதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். எப்படி ? " அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்". அதாவது
குபேரனுக்கு சமமாக செல்வம் உள்ளவரும் செப்பையும் இரும்பையும் பொன்னாக மாற்றும் கலைக்காக அலைந்திடுவர் என்றார். இந்த ரசாயன மாற்றத்திற்கு தேவையான பாதரசத்தின் தொடர்பை ஒரு மெல்லிய துணியால் பிரித்து விட்டால் பின் இரும்பு இரும்பாகவே இருக்கும். செப்பு செப்பாகவே இருக்கும். விரும்பும் கிரியா மாற்றம் அங்கே நிகழாது என்கிறார் கபீர்.
ஆன்மீக முன்னேற்றத்தில் அசத்தியம் ஒரு திரை. அவநம்பிக்கை ஒரு திரை. சத்தியத்தைக் கடைபிடிக்காமல் என்னதான் பிரார்த்தனைகளும் பூசைகளும் ஒருவன் செய்யினும் அவை என்றும் கைக்கூடாது. அசத்தியம் குறுக்கே வருகிறது. அது போலவே குரு என்பவரிடம் வைக்கப்படும் நம்பிக்கையும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதை unconditional என்று சொல்லலாம். அது சற்றே ஆட்டம் கண்டாலும் பக்தி என்பதானது பக்குவப்படாமலே நின்று விடுகிறது. குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை. கீழ் நிலைக்கு ஒப்பான சாதாரண இரும்பைப் போன்ற சாதகனை பொன்னுக்கு நிகரான ஆன்மீக சக்தியுள்ளவராக மாற்றும் வல்லமை அவைகளுக்கு உண்டு. இவைகள் இல்லாமல் ஆணவ மலத்தால் பாதிக்கப்பட்ட யாரும் தமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு திரையிட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். அதை வெற்றி கொள்ள வேண்டுமானால் மானுட உருவத்தில் உலவும் குரு ஒருவரில் அசையாத நம்பிக்கை வைத்து அவரையே கடவுளாகப் பாவித்து சாதனையில் ஈடுபட வேண்டும். இன்னொன்றையும் நினவில் கொள்ள வேண்டும். உண்மையான ஞானப் பசி உள்ளவனுக்கு இறைவனே ஒரு குருவை அனுப்பி தடுத்தாட் கொள்கிறான் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆகையால் நமது முதல் கடமை ஆன்மீகத்தில் முழுமையான நாட்ட முடையவராய் மாறுவது தான்.

Saturday, January 26, 2013

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?

                                  உ
ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பத...ையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக் கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.....

Friday, January 18, 2013

குருவின் அவசியம் பற்றி......

இந்து கோடி உகுக்கினும் கோடி விண்மணி கூடினும்
அந்தகாரம் அழிவதில்லை ஆசானில்லா அந்தனுக்கே


(இந்து = சந்திரன் ; விண்மணி =சூரியன் ; அந்தகாரம்= இருள் ; அந்தன்= அந்தகன், குருடன்)
(தீமிர் என்ற ஹிந்தி சொல்லும் தமிழில் திமிரம் என்ற சொல்லும் இருள் என்பதை குறிக்கும் !)

பல கோடி ஜென்மமெடுத்து சந்திர சூரியர்களின் ஆதிக்கத்தில் இந்த பூமியில் வந்து போனாலும் நல்ல குரு வாய்க்காதவனுக்கு ஞானமென்பது கிடையாது. அவனென்றென்றும் அஞ்ஞான இருளில் உழலும் குருடனாகவே இருந்திடுவான். இது மேலெழுந்தவாரியான விளக்கம். வேறொரு வகையிலும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. நாம் மூச்சு விடும் பாங்கில் இடது பக்கம் சந்திர கலை என்றும் வலது பக்கம் சூரிய கலை என்றும் இவையிரண்டும் சேருமிடத்து சுஷும்னை அல்லது சுழுமுனை என்றும் கூறுவர். முறையாக செபத்தின் மூலம் மூச்சைக் கூட்டி சுஷும்னயில் எழுப்புவதை (அக்னி கலை) கற்றறியும் போது சிந்தை தெளிந்து சிவமாவர் என்பதை திருமூலரும் பல இடங்களில் கூறுகிறார்.
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திர மாரு மறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற வோதி வழுத்தலுமே (2703)


சந்திர கலையும் சூரிய கலையும் "சிவாய நம" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் கூட்டப் படுதலை உணார்த்துகிறார். இன்னுமொரு பாடலில்

சந்திரன் சூரியன்தான் வரின் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே (1989)


உபய நிலம் என்பது சக சிரதளத்தை குறிப்பதாகிறது. இப்பெரும் தத்துவத்தை கபீரும் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதும் செபம் மற்றும் குருவின் அவசியம் பற்றி அவர் எளிமையாக போதித்தார் என்பதையும் நாம் காண்கிறோம்.

Tuesday, January 1, 2013

புதிய 2013 வருட பிரார்த்தனை......

இந்த புதிய 2013 ஆங்கில வருடத்தில் எமது வலைத்தள  நண்பர்கள் அனைவருக்கும் பதினாறு பேறுகளுமான; 

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும் (நாட்டில் நல்லாட்சி)
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
பெற்றிட  அருள் புரியட்டும்.

என்றும் அன்புடன்
ரமணி என்கிற ஜனனி ரமணர் 

மனது, ஆன்மாவாகி விடாது...............

 

மனது நினைவுகளும், உணர்வுகளும் கலந்த ஒரு ஜடப்பொருளே.

ஏனெனில் அது எப்போதும் மற்றொரு ஜடப்பொருளைத்தான் சார்ந்து இருக்கிறது.

ஐந்து இந்திரியங்களுக்கு ஐந்து உணர்வுகளும் ஆறாவது புலனான மனது என்பது நினைப்பதற்கும்,உணர்வதற்கும்,தீர்மானிப்பதற்கும். கண்ணில் படும் இப்புவியும், பிரஞ்சமும்,ஜீவர்களுக்கு என்றும் நிலைத்தது போல் தோற்றமும், அதன் விளைவால் அவனது ஞான அறிவினை மழுக்கி மறைத்து வைத்துள்ளது.

மேலும் நிலைத்தல் நிலையாமை கொள்கைகளையும் அறியவொட்டாது தடுத்து நிறுத்துகிறது.
இப்பிரஞ்சம் ஒரு தொகுப்பு அல்லது கலவை அதை தனித்தனியே பிரித்து விட்டால் பிரபஞ்சம் என்ற எதுவும் மிச்சமாய் இருப்பதில்லை.

பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு? நாம் பார்க்கும் அனைத்து கூட்டு தொகுதியில் மனிதனுடைய தனி இடமும், பங்கும் என்ன?இப்படைப்பு முழுமைக்கும் மனிதனோடு என்ன தொடர்பு?மனிதன், தன்னை ஒரு மகத்  என உறுதியாக உணர்வானேயானால்,பிரஞ்சத்துள் நான் அடக்கம் என்றால்,அவனுள் பிரபஞ்சமும் அடக்கம் தானே பிரஞ்சப் பொருளால் ஆனவனால்,பிரபஞ்சத்தில் அவனால் நிகழ்த்தக் கூடியது எது, அவனாலும் ஒரு பிரஞ்சத்தை படைக்க முடியாதா?


இரசாயனம், பௌதீகம்,தாவரஇயல், உயிரியல், வானியல்,புவியியல், மன சாஸ்திரம், ஜோதிடம்,மருத்துவம் இந்த ஒன்பதைப் பற்றியும் விஞ்ஞானக் கூற்றைக் கூறுவதாயின்


இரசாயனம்: எந்த எவ்வெவ்வகையான எண்ணற்ற மூலப்பொருட்களால் எவ்வாறெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து எண்ணற்ற ஜடப் பொருளை உருவாக்கியுள்ளவை என்றும்,


பௌதீகம்: எல்லாவிதமான சக்திகளும் Energy Different இயற்கை விதிகளும்   (Nature of Law) இப்பிரபஞ்ச நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன என்றும்,

தாவர இயல்:
           தாவர வர்க்கங்களில் எண்ணிக்கை மருத்துவ குணம்,இயற்கைச் சுழலை மேம்படுத்துதல் மற்றும் பிரிவுகளை அதன் தன்மைக்கு ஏற்றவாறு ஆய்வு செய்கின்றன எனவும்,

 உயிரியல்:
                 ஜீவராசிகள் என்ற அனைத்து பிராணிகள் அவற்றின்;வகைகள் இனம், குணம் அவற்றின் எண்ணிக்கை போன்றவற்றையும்,இயற்கைச் சங்கலி போன்ற இதர இயல்புகளையும், கூறுவதுபோல்,

புவியியல்:
                       பூமியின் மேற்புறத்தோற்றம் அதன் உட்புறத் தோற்ற்ம் உயிர்கள் தோன்றி வாழும் (உயிர்வாழி) கிரகம் மற்றும் அதன் இயற்கை வளம் அமைப்பு என்பதனை பற்றிக் கூறுவதுதாயும்,


வானியல்:-
            பழங்காலந்தொட்டு இன்றளவும் பேசப்படுகின்ற கோள்களையும் புதிதாய் கண்ணுற்ற (கண்டுபிடிக்கப்பட்ட) புதிய கோள்கள்,நட்சத்திரங்களைப் பற்றி அவைகளின் பரிமாணம், ஒன்றுக்கொன்று கொண்டுள்ள இடைவெளி ஒன்றை ஒன்று சுற்றி வரும் பாதை அதற்கான காலம் மற்றும் அவற்றின ஈர்ப்பு சக்தி,வெளியேற்றும் சக்தி, அதனால் ஏற்படும் பாதிப்பு அல்லது பலன் இவ்வாறாய், பல்வேறு தகவல்களை சேகரித்து தருவதாயும், தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் முழு பிரபஞ்ச உண்மைகளை ஆய்ந்தறிய துடிக்கிற நிலையிலும் இவைகள், யாவும் ஏனைய அனைத்து இயல்களும் மனிதத்தோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது,மாறுபடுகின்றன, பாதிக்கப்படுகின்றன,பலன் தருகின்றன என்றெல்லாம் பார்க்கும் போது விஞ்ஞானத்துடன் ஒரளவு சாஸ்திர சம்பந்தத்துடன் கூடிய ஜோதிட இயல், மன இயல், மற்றும் மருத்துவம், உடற்கூறு சாஸ்திரம் என்பதெல்லாம் படைப்பின் ரகசியங்களை வளரும் விஞ்ஞானத்தால் இன்றும் முழுமையாக கண்டுபிடிக்கபடவில்லை என்பதை விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் மெய் ஞானத்தின் தூண்டுதல்களால் யாவற்றிற்கும் ஒரு இறுதி வினா-விடையாக இறைவன் -உளன் ? ஏதோஒரு அடிப்படைப்பொருளாக, ஒரு இருப்பாக இருந்து கொண்டு,அந்த அடிப்படைப் பொருள்யாது எனக் காண இயலும் போது மேற்கண்ட ஒன்பது விஞ்ஞான ஆய்வுகள் தொடர்ந்து  செல்லாமல் நின்றுவிடுகிறது. அந்த அடிப்படைப் பொருளும் இந்தப் பிரபஞ்சத்தை மட்டுமல்லாது அதனுள் உயிருடன்,அல்லது ஜடமாக இருக்கும் அத்தனையும் உண்டாகக் காரணமானது என்பதனை மெய்ஞானத்தால் யோகத்தின் வழியாக அறியப்பட்டது. எனும்போது காலமயமான இறைவனைக் காண்பது அதே யோக ஆற்றலால் தான் என ஊகிக்கலாம்.

                   பிரபஞ்ச பிரம்மாண்டங்களிலிருந்து பரமாணு வரை அப்பரமாணுக்குள் இருக்கும் அசைவுகள் வரை திட்டமிட்டபடி கால கதியில் இயங்கி வருவதால் நுண் நொடி முதல் பரார்த்தம் வரை காலத்தின் அளவுகள் விரிந்து கொண்டேதான் இருக்கும்;வஸ்துக்கள் (பொருட்கள்) பரிமாணங்களுடையது. பல தத்துவங்கள் வேகத்தின் அலகுகளை கொண்டது. (சத்தம், ஒலி, ஒளி) காலத்தின் நகர்வு அல்லது அலகுகள்(அளவைகள்) என்பது துவக்கம், முடிவு என இரண்டும் அதற்கு இல்லாததால் அதன் பரிமாணங்களாய் இருப்பது நடந்து முடிந்ததும் நடக்க இருக்கும் நிலைகளும் மட்டுமே. கால சக்கரத்தில் காலத்தின் அளவுகோல் பல உயிர்களின் வாழ்க்கையில்நிகழ்ந்த, நிகழ்ந்து முடிந்த, நிகழ இருப்பதோடு சம்பந்தப்பட்டவையாகும். காலத்தின் உயிர்க் கடிகாரம் என்பதும் அதுவேயாகும்.

ஜீவன்கள் அக்கடிகாரத்தின்படி கால அளவுகளில் தத்தம் பணிகளைச் செய்து உரிய இடம் சென்றடைகின்றன. இவ்வாறே சிறு எறும்பும் அது வாழும் காலத்தில் (குறைந்த சில நாட்களில்) பரிபூரிண வாழ்வை முயற்சியால் முடித்தே செல்கின்றன. மனித வாழ்வின் பல வருட வாழ்க்கைச் செயல்கள் அதனுடைய குறுகிய வாழ்நாளில் செய்து ஒரளவு பூரண வாழ்க்கை பெற்று விட்டதாக எண்ணி வாழ்ந்து முடிக்கின்றன. உயிர்க் கடிகாரம் என்பது ஜோதிட தத்துவத்தின்படி 12இராசிகளில் பின்னப்பட்டு இருக்கின்றன. ராசி எனில் உடல் எனவும், 12 உடல்கள் சேர்ந்து ஒரு ஜீவனின் உயிர்க்கடிகாரமாய் ஆகுகிறது.

விரிவு:

மேஷம், விருச்சிகம், உடலுக்கு = அங்காரகன் என்ற செவ்வாய் ஆதிக்கமும்,

ரிஷபம், தூலம் என்ற உடலுக்கு = சுக்கிரன் என்ற அசுர குருவின் ஆதிக்கமும்
மிதுனம், கன்னி என்ற உடலுக்கு = புதனின் ஆதிக்கமும்

கடகம் என்ற உடலுக்கு =  சந்திரனின்ஆதிக்கமும்,

சிம்மம் என்ற உடலுக்கு = சூரியனின் ஆதிக்கமும்

தனுசு, மீனம் என்ற உடலுக்கு =     குருவின் ஆதிக்கமும்,

மகரம், கும்பம் என்ற உடலுக்கு = சனியின் ஆதிக்கமும் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு ஜீவனின் உடலில் செவ்வாய் என்பது =  இரத்த சிவப்பணுக்களாகவும்,

குரு என்பது = வெள்ளையணுக்களாகவும்,

 புதன் என்பது =  பித்த நீராகவும்,

சந்திரன் என்பது =  இரத்த தட்டணுக்களாகவும்,

சுக்கிரன் என்பது =  விந்துவாகவும்,

சூரியன் என்பது =  எலும்பாகவும்,

சனி என்பது =  ரோம கால்களாகவும்,

இராகு, கேதுக்கள் =  நாளமில்லா சுரப்பிகளாகவும் செயல்படுவதாக ரிஷிகள் கூறுகின்றனர்.

 27 நட்சத்திரங்கள் அறிவு பலன் (விவேக பலன்கள்) எங்கு தோன்றுகிதோ அதன்படி அந்த ஜீவனின் அறிவு செயல்படுகிறது.

உடலுக்கு ஆதாரமான உயிர் எனப்படும் இலக்கினம், பூர்வாதாரம் ஆகும்.
இலக்கினமும், இராசியும் உயிர்க்கடிகாரத்தின் ஆதாரமாகும்.

ஜீவன்களின் உயிர்க் கடிகாரம் ஜீவாத்மாகும்.

கால சக்கரம் பராமாத்மாவாகும். கிரகங்களின் சுழற்சி கால மயமாகிறது.

இக்காலம் மனித வாழ்நாளில் ஒருவகை அங்கமாகிறது. இவ்வுடலைக் காப்பதற்கும் அதன் மூலம் ஆன்ம தரிசனம் கண்டு இறையானுபூதி  பெறுவதற்கும் யோகம் பேருதவியும் நிச்சயமான வழியுமாகிறது.

யோக பலன் அல்லது வெற்றி நிலையில் காலம் தனது முகவரியை இழக்கிறது எனவே அறிவு = பிரபஞ்ச முகமாய் பிரஞ்சத்தைச் சார்ந்தும் அறிவு, உடல் என்ற முகம் =  உடலை சார்ந்தது.

அறிவு என்ற (பேரறிவு) முகம் ஆன்மாவைச் சார்ந்ததாகிறது.

மேலும் விரித்து சொல்வதென்றால்அறிவு =  பிரபஞ்சப் பொருள் என்றும்,பிரபஞ்சப் பொருள் பிந்து பொருள் என்றும், பிந்து பொருள் =  ஒளி என்றும் ஒளிப் பொருள் =  ஒலிப் பொருள் என்றும், ஒலிப் பொருள் = உயிர், ஆன்மா என்றும் ஆகிறது. ஒளவைமுனி தன் ஞானக்குறளில் இதனை

          'எல்லா பொருளும் முடிக்கலாம் ஈசன் தன்
          தொல்லையருள் பெற்றக்கால்'
                   அக்னி, சூரியன், சந்திரன்,பிரணவக்கலை =  சாக்கிரம் என்ற நனவுநிலை.
நனவு என்பது =  சூட்சமம் என்ற உலகில் நனவு.

துறவு என்றால் தொடர்பு யாவற்றைவும் அறுப்பது.
மிளகாய்ச் செடியில் பச்சைநிற இலை முதல் மிளகாய்ப்பழம் என்ற சிகப்பு வரை பரிணாம வகை என சிறுசெடி,செடி, இலை, கொப்பு, பூ, பிஞ்சு, காய்,பழம் என பல்வேறு தொடர்புகளையுடையதாக இருப்பினும் அச்செடியின் பழம் என்ற பலன் தரும் நிலையில் செடியின் தொடர்பு அற்றுவிடுகிறது.

இறைதொடர்பு எனில் யாவற்றையும் பெறுவது.
இவ்வுடல் இருக்கும்போதே சூட்சம தொடர்பும், ஆன்மாவின் உதவியால் இறை தொடர்பும் பெற்றிட வேண்டும். இவ்வகை நிகழ்வுகளைச் சொல்லுதல் எளிதெனிலும் விளக்குதலும்,பயனடைவதும் சற்று கடினமே.

எனவே இதனை எளிமையாக்குதற்கு யோகமே நிச்சய வழி.

                   ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் அவனின் உடலும்,மனமும் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. எனினும் அவனுக்கு சூட்டிய பெயரின் உள்ளேயிருக்கும் அவன் அவனாகவே இருந்திருக்கிறான். அவன் பருவங்கள் குழந்தை, இளைஞன்,நடுநிலைப்பருவம், பின் வயோதிகம் என்ற முதுமைப்பருவம் இவற்றையொல்லம் அவன் ஒவ்வொன்றாகக் கடக்கும் போது அவனின் மனமும், உடலும், ஒரே நிலையின்றி படிப்படியாக மாற்றங்களைக் கொண்டதாக தொடர்கின்றன.


 
ஆண், பெண், இருபாலருக்கும் பொதுவானதாகவும் அந்தந்த பருவத்திற்கு உரிய நிலையிலும் மனத்தின் செயல்பாடுகள் மாற்றங்களைப் பெற்றது. இதை உணர ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோக சூத்திரத்தினைப் பின்பற்றி வரும் சாதர்கள் நன்கு உணர தலைப்பட்டபின் அவர்கள் மனமும் உடலும் ஒரு சாதனை அல்லது அதன் மூலம் மேல்நிலை  அடைந்து மானுடத் தத்துவங்களில் உடல், மனம் என்பதிலிருந்து விலகுவது போல் அதே சமயம் அதன் உதவியால் இவ்வுடலில் சாராது உடலின் மாற்றங்கள் மனதை சாராது. அவனுள் இருக்கும் ஆன்ம உடலில் அவனது சுயம் பாதிக்கப்படாமல் இருக்கவும்,அவனுடைய நிஜ அடையாளம் என்றும் மாறாமல் பிறந்ததுபோல் இருந்தேன். அவனாகவே இன்றும் இருக்கிறேன். என் உடலால் மனதால் நிகழ்வுற்ற அத்தனை நிகழ்வுகளும் என்னுள்ளிருந்து விலகி நான் ஒரு சாட்சியாக மட்டும் இருப்பதை உணர்கின்றேன் .

நான் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்ல.

 பிறப்பில் சம்பந்தப்பட்ட எந்த அடையாளமும் என்னுடையதில்லை.
நிர்மலமான பளிங்கு போல் தெளிந்த நிலை விஷய சம்பந்தத்தால் பல நிறங்கள்  தோன்றியது போல் இருப்பினும் அதில் எதையும் கலக்க முடியாத, மாற்ற முடியாத முழு நிறைவுடைய சுத்த அறிவோடு இருக்கின்ற பூரிபூர்ணத்தின் அங்கமாய் உள்ளேன்.

ஒலியாகவும் ஒளியாகவும் உருவாகவும் இருப்பதலொல்லம் காண்பதலொல்லம்,உணர்வதலொல்லம் இறைவனுடைய அங்கங்களே என புரிந்துக் கொண்டு என்றும் மாறாது என்றும் புதிதாக என்றும் ஒரே மாதிரியாக இருக்கின்றன

இறைவன் அமைத்து தந்த சங்கேதம் என்னென்றும் சாஸ்திரங்களில் பேசப்படுகின்ற ஒலியானது பிரவணமே அதுவென்று உணர்ந்து பிரணவப் சப்தம் என்பது இறைவனின் பெயர் என ஆய்ந்து  அறிந்து கொண்டேன்.
'அம்மா' என்ற சப்தம் கேட்டவுடன் அந்தத் தாய் மகிழ்வதுபோல் 'ஓம்'என்ற சப்தம் இறைவனை மகிழ்விக்கும் மந்திரமாய் உள்ளது என்பதையும்,அதுவே இறைவனது பெயர் என்றும் அறிந்தேன்.
 
 
 
 
 
  'தஸ்ய வாசக: பிரணவ:
                            பிரணவ என்ற சொல், தஸ்ய = அந்த இறைவனுக்கு, வாசக = பெயராகும். எனவே சமாதிநிலை பேரமைதியில் பிரணவ ஞான ஒங்காரத்தினுள் சென்று ஒங்கார வடிவினைக் கண்டு ஒங்காரமாகவே மாறி ஒங்காரத்தினுள் உட் கலந்துவிடுவோம். யோக தர்ஸன் இதுவாய்த் தானிருக்கும் ஓம் சற்குருபாதம் போற்றி போற்றி.


               குருவழியே ஆதிஆதி
               குரு மொழியே வேதம் வேதம்
               குரு விழியே தீபம் தீபம்
               குரு பதமே காப்பு காப்பு...

Monday, November 12, 2012

அட்ட திக் பாலகர்கள்...

எட்டு திசைகளிலும் இருந்து எங்களை காப்பவர்கள் அட்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை திசை நாயகர்கள் என்றும் சொல்லப் படுகிறது.

நாம் செய்யும் எல்லா செயல்களையும் இவர்கள் கவனிக்கிறார்கள்.செயல்களுக்குச் சாட்சியாகவும் இருக்கிறார்கள். என்று பாரதம் சொல்கிறது. அத்துடன் இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அட்டதிக் பாலகர்களில் வருபவர்களே.

அவர்கள் யார்? யார்? அவர்களை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன?

1 , இந்திரன்(கிழக்கு) :-ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.

2, அக்கினி(தென் கிழக்கு) :-உடலுக்கும் ஒளியையும் வனப்பையையும் தருபவர்.

3, யமன் 
(தெற்கு):- தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.

4, நிருதி (தென் மேற்கு) :-எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.

5, வருணன்(மேற்கு) :- மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.

6 , வாயு (வட மேற்கு) :-வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர். ஆயுள் விருத்தி தருபவர்.

7, குபேரன்(வடக்கு) :- சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.

8, ஈசானன் 
(வட கிழக்கு) :-மங்கள வடிவமானவர், அறிவும் ஞானமும் அளிப்பவர்.

இத்தகைய பலன்கள் தரும் இவர்களை தொடர்ந்து வணங்கி வருவோருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.