Friday, February 17, 2012

காஞ்சி முனிவர்

காஞ்சிப்பெரியவர் ""மாதா, பிதா, குரு, தெய்வம்'' என்னும் வேதவாக்கியத்தை பக்தர்களுக்கு அடிக்கடி உபதேசிப்பார். பிறருக்கு உபதேசம் செய்வதோடு தானும் வாழ்வில் கடைபிடித்து நடப்பதே நல்ல குருநாதரின் அடையாளம்.
தன் வாழ்க்கையின் கடைசிநாளில் இதைக் கடைபிடித்து நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.
1994 ஜனவரி 8ல், அவர் ஸித்தியடைந்தார். அதற்கு முந்தியநாள் இவரது தாயாருடைய ஊரான ஈச்சங்குடியில் வைப்பதற்காக பெற்றோரின் புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு தயாராக இருந்தன. ஸித்தியடைவதற்கு முன் அவரது மரக்குவளையைச் சுத்தம் செய்வதற்காகச் சென்ற சீடரிடம், "நீ கலவை சென்றிருக்கிறாயா? அங்கே தான் என் குரு, பரமகுரு ஆகியோரின் பிருந்தாவனம் இருக்கிறது'' என்று சொல்லி அவர்களை நினைவு கூர்ந்தார். பின் அவரிடம் ஈச்சங்குடிக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த பெற்றோரின் புகைப்படங்களை எடுத்துவரச் சொல்லிப் பார்த்தார். சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
மாதா,பிதா, குரு, தெய்வம் என்னும் உபதேசத்தை பின்பற்றி வாழ்ந்த பெரியவரின் பிருந்தாவனத்தை பிர்லா குடும்பத்தினர் கலையழகு மண்டபமாக அமைத்தனர். அதில் நித்ய வாசம் செய்யும் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பூஜையறையில் பெரியவரின் பிருந்தாவனப்படத்தை வைத்து பூஜித்தால் அவரது பூரண அருள் பெறலாம்.

பொய் சொல்ல வேண்டாம்

கிருஷ்ணர் துர்வாச முனிவரிடம் வந்து, பாண்டவர்களை அவருடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதித்த முனிவர், "அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், யாராவது வந்து கேட்டால் என்னால் பொய் சொல்ல முடியாது." என்றார்.

"நீங்கள் பொய் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது வந்து கேட்டால், சற்று உரத்த குரலில், கோபம் தெரியும்படி பதில் சொல்லுங்கள். போதும்" என்று கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார்.
துரியோதனனின் ஆட்கள் பாண்டவர்களைத் தேடி வருவதை அறிந்த துர்வாசர், பாண்டவர்களை ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கியிருக்கச் சொல்லி அந்தப் பள்ளத்தின் மேல் ஒரு மரப்பலகையைப் போட்டு அமர்ந்து கொண்டார்.
அவர் எதிர்பார்த்ததைப் போலவே பாண்டவர்களைத் தேடி வந்தவர்கள் துர்வாசரிடம் விபரம் கேட்டார்கள்.
துர்வாசரும் கிருஷ்ணரின் யோசனைப்படி சற்றே உரத்த குரலில், "பாண்டவர்களா? இங்கே இருக்கிறார்கள்!" என்று தான் அமர்ந்திருந்த இடத்திற்குக் கீழே கையைக் காட்டினார்.
அதைக் கேட்டவர்கள் பயந்து போனார்கள்.
முனிவர் ஏதோ கோபமாக இருக்கிறார். இல்லாவிட்டால் எதற்காகக் கோபமாகவும், ஏதோ நம்மைக் கேலி செய்வது போலவும் கீழேக் கையைக் காட்ட வேண்டும்? என்று எண்ணியபடி அவரைத் தொந்தரவு செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

Saturday, February 11, 2012

பாகவதத்தில் அஜாமிளன்

ஒழுக்கமில்லாதவன் கூட கடைசி நேரத்தில் பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான் .
 
பாகவதத்தில் அஜாமிளன் என்பவனின் கதை வருகிறது. "ஜாமி' என்றால் "ஒழுக்கமான பெண்'. "அஜாமி' என்றால் ஒழுக்கமற்றவள். ஒழுக்கமற்ற பெண்களை விரும்பியதால் இவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. 88வயது வரை பெண்பித்தனாக வாழ்ந்த அஜாமிளனுக்கு அந்திமகாலம் நெருங்கியது. இவனுடைய பத்து பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை நாராயணன். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை "நாராயணா' என்று கூப்பிட்டபோது உயிர் நீங்கியது. பெரியாழ்வார் பாடியது போல, "நாராணன் அன்னை நரகம்புகாள்' என்பது அஜாமிளன் வாழ்வில் உண்மையானது. விஷ்ணுதூதர்கள் வந்து அஜாமிளனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒழுக்கமில்லாதவன் கூட கடைசி நேரத்தில் பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான். எனவே, ஒழுக்கத்துடனும், பக்தியுடனும் நாராயணன் பெயரைச் சொன்னால் அவனது அருள் நிச்சயம். அதற்காக அஜாமிளன் போல கடைசி நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். நாக்கு உள்ளே இழுத்துவிட்டால் எதுவும் பேசமுடியாமல் போய்விடும்.இன்றே சொல்லுங்க! இப்போதே சொல்லுங்க! நற்கதிக்கு பாதை ஏற்படுத்துங்க!

Wednesday, February 8, 2012

கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?

 பாரத யுத்த்ததிற்குக் காரணமாக நிகழ்ந்த விஷயங்கள் இன்றும் நம்மிடையே தோன்றுகின்றன. எத்தனை அனாசாரங்கள், எவ்வளவு கொலை கொள்ளைகள், எப்பேர்ப்பட்ட துராசாரங்கள்? அந்தக் காலத்தில் நடந்த எல்லா விதமான் துர் நடவடிக்கைகளும் இப்பொழுதும் நடைபெறுகின்றன. குடும்ப சச்சரவு, ராஜ்யத்தில் கலகம், சமூஹத்தில் அனாசாரம், நீதியின்மை, பலாத்காரம், உயிர்ப் பொருள் சேதங்கள் என்னென்ன? எல்லோரும் தங்கள் சுகத்தை நாடியே வாழ்கிறோம். மற்றவருக்கு இழைக்கப்படும் தீங்கைப் புறக்கணிக்கிறோம். இதைவிட துஷ்கர்மாக்கள் வேறு என்ன வேண்டும்? அதர்மம் தலைவிரித்தாடுகிறது.. இந்த சமயத்தில் இந்த கீதோபதேசம் மிக ஆதரவாக அமைந்துள்ளது. இதில் சொன்ன ஒவ்வொரு நீதியும் இந்தக் கலியுகத்திலும் கடைபிடிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காலத்திற்கும் அவை மிகப் பொருத்தமாகத் திகழ்கின்றன. அர்ஜுனனை வியாஜமாக வைத்து நமக்கு இந்தக் காலத்தில் நடக்க வேண்டிய தரும வ்ருத்திகளைப் பறைசாற்றுகின்றன. ஆகையால் தான் கீதாஸாரம் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லோராலும் எப்பொழுதும் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஒரு பெரும் உபதேசமாகக் கருதப்படுகிறது. விவேகத்தால் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யாதி துஷ்ட குணங்களை வென்று, மனதை ஓர் நிலையில் வைத்து, தருமம், ப்ரேமை, கருணை, ஸமபாவம், பரோபகாரம், வைராக்யம், த்ருட நிச்சயம் என்ற நல்வழியில் வாழ்ந்து, அஹம் என்ற பாவத்தை விட்டு, பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து, பக்தியெனும் ஓடத்தில் ஞானமெனும் துழவுகோலின் உதவியால், ஸம்ஸாரம் எனும் மஹா சமுத்திரத்தைக் கடந்து ப்ரம்ம நிலையை அடைய உதவி புரியும் மஹா காவியம் இந்த பகவத்கீதை.

Monday, February 6, 2012

கீதோபதேசம்:

பாண்டவர்களின் மூன்றாமவனான அர்ஜுனன் மிகப் பெரிய வில்லாளி. அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்தார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். யுத்த களத்தின் மத்தியில் அர்ஜுனன் எதிரியின் ஸேனையைப் பார்த்து அதில் தன்னுடைய சுற்றத்தார்கள் இருப்பதையும் யுத்தத்தில் எல்லோரும் மரணமடையத் தான் காரணமாகப் போவதையும் சுட்டிக்காட்டி, தன்னால் இந்த பாபத்தை செய்ய முடியாது. அப்படி எல்லோரையும் வதைத்துக் கிட்டும் இராஜ்யம் தமக்கு வேண்டாம் எனப் புலம்பினான். அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் விஷாதத்தைக் கண்டு அவன் அஞ்ஞானத்தைப் போக்க அவனுக்கு போர்க் களத்திலேயே, இரண்டு ஸேனைகளுக்கு மத்தியில் தந்த வாழ்வின் இரகசியம், வாழ்க்கை என்பது என்ன, அதில் மனிதனின் தருமம் என்ன, நம் ஜன்ம இரகசியம் என்ன, வாழ்க்கை எப்படி தருமப் பிரகாரம் வாழ வேண்டும், மனிதனின் கடமை என்ன முதலிய கருத்துக்களை எடுத்துரைத்து அர்ஜுனனுக்கு திவ்ய திருஷ்டியைத் தந்து தன் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பித்து, வாழ்க்கையின் தத்துவத்தை விளக்க, அர்ஜுனன் மாயை நீங்கிப் போர்க்களத்தில் யுத்தம் செய்து பாண்டவர்கள் விஜயிக்குமாறு செய்தான். அந்த உபதேசம்தான் இங்கு கீதோபதேசமாகத் தரப்பட்டுள்ளது. இது, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல், நம் எல்லோருக்கும், கால, தேச, சமய, ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கை எப்படி தருமத்துடன் வாழ வேண்டும் என்ற தத்துவம், ஸனாதன தருமத்தின் ஸாரம், வேத வேதாந்தக் கருத்துகளடங்கிய உபதேசமாகக் கருத வேண்டும். இதை ஐந்தாவது வேதமாகப் பெரியோர்கள் கருதுகிறார்கள். அத்துணைத் தத்துவங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. இது மஹரிஷி வேதவியாஸரால் இயற்றப்பட்டு மஹாபாரத கிரந்தத்தின் மத்தியில் தரப்பட்டுள்ள ஒரு மஹா காவ்யம். இதைப் படித்து இதன்படி வாழ்ந்தால் நமக்கு முக்தி நிச்சயம்.

Sunday, February 5, 2012

பாரத யுத்தத்தின் கதைச்சுருக்கம்:

கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?
 
ஹஸ்தினாபுரத்தில் விசித்திரவீரியன் என்ற மஹாராஜாவிற்கும் அம்பிகா என்ற அவர் மனைவிக்கும் பிறந்தவர் த்ருதராஷ்டடிரன். த்ருதராஷ்டிரருக்கும் அவர் மனைவி காந்தாரிக்கும் பிறந்த 100 புத்திரர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப் பெற்றார்காள். அதே விசித்திரவீரிய மஹாராஜாவிற்கும் அம்பாலிகா என்ற இன்னொரு மனைவிக்கும் பிறந்தவர் பாண்டு. பாண்டுவுக்கும் அவர் மனைவி குந்தீ தேவிக்கும் பிறந்த 5 பிள்ளைகள் பாண்டவர்கள் என அழைக்கப் பெறறார்கள். த்ருதராஷ்டிரர் மூத்தவரானாலும் பிறாவிக் குருடனானதால் அவருக்கு பதில் பாண்டு அரசரானார், பாண்டுவின் மூத்த மகன் தருமபுத்திரன் யுவராஜாவானார். இதனால் த்ருதராஷ்டிரனின் மூத்த மகன் துர்யோதனன் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களுக்குப் பல இன்னல்களை விளைவித்தான். இடையில் பாண்டு இறந்து தருமபுத்திரர் பால்ய பருவத்திலிருந்ததால் ராஜ்யப் பொறுப்பை ஏற்ற த்ருதராஷ்டிரன் தருமபுத்திரர் இந்த்ரப்ரஸ்தம் எனும் ராஜ்யத்தை ஆளுமாறும் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை ஆளுமாறும் அமைத்தார். ஒரு சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே. சூதாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் துர்யோதனன், தன் மாமா சகுனியின் சொற்படிக்கு சூதாட்டத்தில் சூழ்ச்சியால் தருமபுத்திரரைத் தோற்கடித்து அவர்பால் உள்ள ராஜ்யத்தையும், சதுரங்கப் படைகளையும், எல்லா சொத்துக்களையும், தம்பிகளாகிய பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்பவர்களையும், தன்னையும் இழக்கச் செய்தார். கடைசியில் தருமபுத்திரர் தங்களது மனைவி பாஞ்சாலியைப் பணயமாக வைத்து அதிலும் தோற்கடிக்கப் பெற்றார். பாஞ்சாலியை ராஜ சபைக்கு தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் கௌரவார்கள். அப்போது பஞ்சாலி ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டி சரணாகதி அடைந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் வஸ்திரத்தைக் கொடுத்து பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றினார். பிறகு தங்களது ராஜ்யங்கள் கௌரவர்களிடம் சிக்கியதால் ராஜ்யமில்லமால் பாண்டவர்கள் மீண்டும் ஆடிய சூதாட்ட நியதிப்படி 12 வருடம் வனவாசமும் 1 வருடம் அஞ்ஞாத வாசமும் செய்தார்கள். ஆனால் அந்த 13 வருடங்களில் அவார்களை வாழ விடாமல் கௌரவர்கள் இடையூறுகள் பல செய்தார்கள். ஆனாலும் பாண்டவர்கள் நியதிப்படி 13 வருடங்களை முடித்து வந்து ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டபொழுது தர மறுத்து விட்டார்கள் கௌரவர்கள். முடிவில், பாண்டவர்களின் மித்திரராகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான், கௌரவர்களிடம் பாண்டாவர்களுக்காகத் தூது சென்று பாண்டவர்களுக்கு ஒரு ராஜ்யமோ, ஒரு தேசமோ, ஐந்து கிராமமோ தருமாறு வேண்டினார். பயனில்லை. துர்புத்தி படைத்த துர்யோதனன், மாமா சகுனியின் போதனையால் ஒரு ஊசி குத்துவதற்குக் கூட இடம் தர மறுத்துவிட்டார். இதனால் சினமூண்டு பாண்டவர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போர் 18 நாட்கள் நீடித்தது.

Saturday, February 4, 2012

தற்பெருமை மட்டும் கூடவே கூடாது...

மனிதனுக்குள், நல்லதும் கெட்டதுமாக ஆயிரம் வகையான குணங்கள் புதைந்து கிடக்கும். ஆனால், தற்பெருமை மட்டும் கூடவே கூடாது. ஏன்?
வியாசரின் மகன் சுகபிரம்மர். "சுகம்' என்றால் "கிளி'. ஆம்..சுகபிரம்மர் கிளிமுகம் கொண்டவர். பிறந்தவுடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது. எள் முனையளவு கூட களங்கம் இல்லாத மனதுடையவராக இருந்தார்.
ஒருநாள் வியாசர், ""சுகபிரம்மா இங்கே வா,'' என்றார்.
""வருகிறேன்,'' என்று சுகபிரம்மர் மட்டுமல்ல, அங்கே நின்ற மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் "வருகிறேன்,'' என்றன. சுகபிரம்மருக்கு பெருமை தாங்கவில்லை.
"நான் வருகிறேன்' என்றேன். ஆனால், ஊரிலு<ள்ள மரம் மட்டைக்குள் கூட நான் இருக்கிறேன். நான் எவ்ளோ பெரிய ஆள்,'' என்று நினைத்தாரோ இல்லையோ ஞானம் போய்விட்டது.
""சுகா! தற்பெருமையால் ஞானம் இழந்தாய். நீ ஜனகரைப் பார்த்து உபதேசம் பெற்று வா,'' என்றார்.
சுகர் மிதிலாபுரிக்கு சென்றார். ராஜாங்கத்தில் இருந்தும், குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்த ஜனகரைச் சந்திப்பதற்காக வாயில் காப்பவனிடம் அனுமதி கேட்டார்.
""சுவாமி! இங்கேயே நில்லுங்கள்! நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். மன்னர் நீங்கள் யார் எனக் கேட்பார். என்ன சொல்ல வேண்டும்?'' என்றான்.
""சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்,'' என்றார்.
காவலன் உள்ளே ஓடினான்.
""மன்னா! சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அனுப்பட்டுமா?'' என்றான்.
""அவர் நாலைந்து பேருடன் வந்துள்ளார். அவர்களை வெளியே விட்டுவிட்டு தனியே வரச்சொல்,'' என்றார்.
காவலனுக்கு புரியவில்லை.
""அவர் ஒருவர் தானே வந்துள்ளார். மன்னர் இப்படி சொல்கிறாரே!'' இருந்தாலும் எதிர்க்கேள்வி கேட்க முடியுமா? அவன் தலையைப் பிய்த்துக்கொண்டு, ""சுகர் அவர்களே! தாங்கள் அழைத்து வந்துள்ள நாலைந்து பேரை விட்டுவிட்டு மன்னர் தங்களை உள்ளே வரச்சொன்னார்,'' என்றான்.
""சரி...சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல்,'' என்றார்.
காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல, ""இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
அவனுக்கு இன்னும் குழப்பம்.
""சுவாமி! தங்களுடன் இருக்கும் ஒருவரை விட்டு வரச்சொல்கிறார்,''.
""சரியப்பா! சுகபிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல்,'' என்றதும், அவனும் அங்கு போய் சொல்ல, ""அவரை உள்ளே வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
ஜனகர் அவரிடம் பேசவில்லை. மொட்டையடித்த ஒருவரை அழைத்து வரச்சொன்னார். அவனை அமரவைத்து தலையில் ஒரு தட்டை வைத்தார். தட்டில் எண்ணெ#யை ஊற்றினார்.
""டேய்! உடனே புறப்பட்டு ரதவீதிகளைச் சுற்றி விட்டு மீண்டும் இங்கே வா. தட்டு கீழே விழக் கூடாது. தட்டில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக்கூடாது. விழுந்தால், உனக்கு தலையிருக்காது,'' என்று எச்சரித்தார்.அவன் பயத்துடன் கிளம்பினான். செல்லும் வழியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கச்சேரி எல்லாம் நடந்தது. அவன் எதன் மீதும் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த கருத்தும் தட்டின் மேலேயே இருந்தது. அது கீழே விழாமல் பவ்யமாக நடந்து மன்னர் முன்னால் வந்து நின்றான்.
""ஓடிப்போ,'' என்றார் ஜனகர். அவன் தலை தப்பித்த மகிழ்ச்சியில் பறந்தான். ஜனகர் அப்போதும் சுகரிடம் பேசவில்லை.
ஆனால், ஒன்றைப் புரிந்து கொண்டார்.
"ஒருவனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலையில், சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது செலுத்தினான். அதுபோல, நாமும் மனதை அடக்கி, கடவுளின் மீது மட்டும் கருத்தைச் செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும்' என்ற உபதேசத்தைப் பெற்றவராக அங்கிருந்து கிளம்பினார்.