Wednesday, January 11, 2012

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ? பகுதி - 2

அசைவ உணவு உண்ணும் பிராணிகளின் உடல் அமைப்பு
பற்கள் -
மாமிச உணவினை கிழித்து தின்னும் வகையில் அமைந்துள்ள நெடிய கூரிய கோரைப்பற்கள் , இதற்கு உதவி செய்யும் வகையில் அவைகளின் கைகால்களில் அமைந்துள்ள வலுவான கூரிய நகங்கள்.

உமிழ்நீர் -
அதிக அமில சக்தியினை கொண்டதாக கொண்டதாக இருப்பதோடு அதிகம் சுரப்பதாகவும் உள்ளது.

நீர் அருந்துதல் -
நாக்குகளால் நக்கிக் குடிக்கும் வகையில் அமைந்துள்ள நீண்ட நாக்கு.
கண்கள் -
தனது இரையினை இரவில் மற்றும் இருளிலும் தேடிப்பிடிக்கும் வசதி உடைய கூரிய பார்வை மற்றும் சக்தி பெற்றதாகயிருக்கிறது.

கல்லீரல், பித்தப்பை , சிறுநீரகங்கள், இரைப்பை ஆகிய முக்கிய உறுப்புகள் அளவில் பெரியதாகவும், கழிவு நீக்கும் பணி விரைவாகவும் , அதிகமாகவும் நடைபெறும் வண்ணம் அமையப் பெற்றது.

குடல் அமைப்பு -

மாமிச பட்சிணியின் உடல் நீளத்தைப் போல்மூன்று மடங்கு மட்டுமே நீளம் உடையதாக இருக்கிறது .

இதனால் அவைகள் உண்ணும் உணவுகள் கழிவுகள் வேகமாக விரைவாக வெளியேறி குடலில் தங்க வாய்ப்பில்லாமல் செய்கிறது.

இது போன்ற எத்தனையோ மாறுபட்ட குடல் அமைப்புகளை அசைவ உணவிற்கேன்றே அமையப் பெற்றிருத்தல் ஏன் என்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் மனிதன் மாமிச உணவினை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க உடல் அமைப்பினை பெற்றிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

பொதுவான தகவல்கள்

மனிதர்களை அவர்கள் நடமாட்டம் மற்றும் வெளித் தோற்றத்தில் அவர்களுக்கு இருக்கும் சாதாரண நோய் முதல் கடுமையான நோய்கள் வரை (தொற்று ஏற்படும் நோய்கள்) கண்டறிந்து கொள்ளலாம்.
ஆனால் மாமிசத்திற்கு பயன்படும் ஆடு, மாடு, கோழி, மற்றும் சில பறவையினங்கள் அவைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் , கல்லீரல் நோய், குடல் நோய், சுவாச நோய், பெரும்பான்மையான தொற்றுநோய்கள் ஆகியவைகளால் அவைகள் பாதிப்படைந்திருக்கின்றன என்பதை வெளிப்படையாகப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

ஆகவே மேற்குறித்தவைகளின் மாமிசங்களை புசிப்பதால் நமக்கு ஏற்படும் நோய் பற்றி சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.

மேலும் அந்த விலங்கினங்களின் வெட்டப் பட்ட சதைப்பகுதி அழுகுதல் (கெட்டுப் போகுதல்) புறச் சூழலால் காற்று, நீர், ஆயுதம் , பயன்படுத்தும் கைகள், இடம் முதலியன மாசு உடையதாகவே 99விழுக்காடு இருந்து வருகின்றது.
இதனால் நோய்த் தொற்று கிருமிகள், மாமிசத்தில் பரவி அதை உண்பவர்களை ( எவ்வளவு கொதிக்க வைத்தாலும் வேக வைத்தாலும் ) நீங்காத நிலையில் மனித உடல் நோய்க்கு காரணமாகிறது.

மிருகங்களை உணவிற்காக அவை கொல்லப் படும்போது அவற்றிற்கு இறப்பு பயம் ஏற்பட்டு வேதனையால் அவற்றின் உடலில் அட்ரினலின் என்ற விஷ நீர்ச்சுரப்பு அதிகம் சுரந்து மாமிசத்திலும், உடல் உறுப்புகளிலும் கலந்து விடுவதால் அந்த விஷம் அதை உண்பவர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
இதனால் ஏற்படும் நோய் (பாதிப்பு ) என்னென்ன என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞான உலகம் அதிகம் வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.

மாமிசத்திற்கு பயன்படும் மிருகங்களை அவற்றிற்கு ஏற்படும் மாமிசத்திற்கு, அவற்றிற்கு அளிக்கப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் , 
விரைவு வளர்ச்சிக்காக கொடுக்கப் படும் மருந்துகள், என்னென்ன ?
அவைகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவையா இல்லையா என மனிதனுக்கு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (குறிப்பாக) பெனிசிலீன்போன்ற நூற்றுக்கணக்கான வகை மருந்துகளால் ஏற்படும் தீய (விளைவுகள்) பற்றி மனித குலத்திற்கு தெரிவித்திருக்கின்றனரா ?
ஒரு வேளை  அறிவித்திருந்தும் மக்கள் உணராமல் இருக்கின்றார்களா????????
உலகம் முழுவதும் உள்ள அசைவ உணவுப் பிரியர்களுக்கு இதற்கான விடையினை அளிக்க யார் முன்வருவார்கள்.
மேலும் ஆடு, மாடு மற்றும் கறிக் கோழிகளின் உடலில் 
டைதில்ஸ்டில் பெஸ்ட்ரேல் ஆர்சேனிக் ,
சோடியம் நைட்ரேட்,

போன்ற மனித உடலுக்கு பெரும் சீர்கேட்டினை விளைவிக்கும் விஷங்கள் இருப்பதை உறுதி செய்து அவற்றை அசைவ உணவுப் பிரியர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு சம்மந்தப் பட்ட துறைகள், பொது அறிக்கை உலகளாவிய நிலையில் வெளியிடுவது மனித குலத்திற்கு செய்யும் பெரும் பேருதவியும் கடமையும் ஆகும்.
இன்றைய மனிதர்களின் எதிர்பாராத திடீரென வரும் உயிரிழப்பிற்கு காரணமான ( இரத்தக் கொதிப்பு நோய்) இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் ( LD ) அளவு அதிகமாதலே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்புச் சத்து அதிகம் காரணாமாக
இரத்தக் குழாய் அடைப்பு,
இதயத்தின் செயல்பாடு முடக்கம்,
மூளை இரத்தக் குழாய்கள் அடைப்பினால் பாதிப்பு,

இவற்றால் வரும் ஏனைய அனைத்து முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு முன்னறிவிப்பின்றி திடீரென மனித உயிர்களை குடிக்கின்றன.
அந்த வகையில் கொழுப்பில்லாத உணவு அல்லது கெட்ட கொழுப்பினை குறைக்கும் உணவு அவசியம் ஆகிறது.
இதற்கு மாமிச உணவு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லாமல் எதிர்மறையான பலன்களையே தருவதாக இருப்பது அனைவரும் ( மருத்துவர் உட்பட) அறிந்ததே.

அதிக கொழுப்பைத் தரும் அசைவ அசைவ உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் பொரித்த உணவு என்று நீண்ட பட்டியலை நாம் நன்கு உணர்ந்திருந்தும் அந்த எச்சரிக்கைகளை உணராது சுவைக்கு எனவும் , உடல் மிகைக்கு எனவும் அதிக கொழுப்பு தருகின்ற உணவுகளையே உட்கொள்கின்றோம்.
இதனால் மேலே கூறிய மாரடைப்பு, போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் சிறுவயதினரையும் விட்டு வைக்காமல் மரணத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த மாரடைப்பு மற்றும் கூறிய அறிவுக் குறைவு எதையும் தீர்மானிக்க முடியாத பொறுமையற்ற பரபரப்பான , பயம் மற்றும் சோர்வு தருகின்ற நிலைக்கு தள்ளக் கூடிய வகைவகையான வாழ்வின் நற்பண்புகள் அற்ற துன்பியல் முடிவுகளை தரக் கூடியதுமான அசைவ உணவுகளை நாம் ஏன் ஒதுக்கக் கூடாது அல்லது தவிர்க்கக் கூடாது.?

நம் மீது நமக்கு , சுருங்கக் கூறினால் நம் வாழ் நாட்களை நாமே குறைத்துக் கொள்ளுதல் நம் மீது நமக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?பகுதி 1

விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் (ஆன்மீக) சைவ உணவே சாலச் சிறந்தது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. ஏன்? எதனால் ? வேண்டும் சைவம், மற்றும் வேண்டாம் அசைவம் என்று ஆன்மீக அன்பர்களுக்கு விளக்கமளிப்பது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


            சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உடல் அமைப்பும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகளின் உடல் அமைப்பும் ஒன்றை ஒன்று ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.
ஆனால் அசைவ உணவினை உட்கொள்ளும் புலி, சிங்கம், நாய், பூனை மற்றும் சைவ உணவினை உட்கொள்ளும் விலங்குகளோடு சிறிதும் ஒத்துப் போகாமல் பல்வேறு மாறுபட்ட ஜீரண உறுப்புகள் மற்றும் உடல் அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.
மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளின்
கடவாய்ப் பற்கள் தட்டையாக அரைத்து விழுங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.
உமிழ்நீர் உணவின் ருசிக்கு ஏற்றபடி குறைந்த அளவு சுரப்பதோடு அதில் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், ஜீரண சக்தியினை தரும் வகையில் பெரிய உமிழ் நீர் சுரப்பிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

உதடுகளால் நீரினை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் வாய் அமைப்பினை பெற்றிருக்கிறது.
உணவினை இரவிலோ அல்லது இருளிலோ பார்க்கும் தன்மை சைவ உணவு விரும்பிகளுக்கு இல்லை.

கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இரைப்பை, போன்ற வயிற்றின் உள்ளுறுப்புகள் சைவ உணவு விரும்பிகளுக்கு சிறியவைகளாகவும் உள்ளது.

மேலும் உணவுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற இயலாதவாறு உள்ளது.
இன்னும் கெட்டுபோன உணவுகள் பல சமயங்களில் விஷமாகவிடுவதால் மேற்படி உறுப்புகள் அந்த விஷத்தில் இருந்து தன்னையும் (தன் உறுப்புகளை), உடலையும் பாதுகாக்க முடியாமல் செயல்பாடுகளில் தோல்வி அடைகின்றன.

இந்த நிலையில் மருந்தின் உதவியாலோ அல்லது உண்ணா நோன்பினாலோ அந்த ஜீரணக் கருவிகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் மனித உடலின் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் அமைப்பின் படி இயல்பாகவே உடல்கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் ஜீரண மந்தம் வயிற்று உபாதைகள் வருகின்றபோது ஜீரண கருவிகளுக்கு வேலைப்பளு ஏற்படாமல் தவிர்க்க பசியற்ற நிலை உணவில் விருப்பமின்மை, ஆகியவைகளால் உணவு மறுப்பு செயல்கள் இயல்பாக நிகழ்கின்றன.

சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது.

தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது.

அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான்.

நீர்க் கழிவுகள் தொடர்பான வரையில் வியர்வை மூலம் வெளியேறும் வகையில் தோல் அமைப்பில் நுண்ணிய பல லட்சம் துளைகளின் மூலம் வெளியேற்றப் படுகின்றது.
இந்த அமைப்பு மாமிச பட்சிணிகளுக்கு இல்லை. அவைகள் உடலில் விஷ நீர் வெளியேற்றத்திற்கு தனது நாக்குகளை தொங்கப் போட்டு, வெளியே தொங்க வைத்து அதன் மூலம் வடிகால் நிகழ்வு நடைபெறுகின்றது.
இன்றைய விஞ்ஞான உலகின் மக்கள் தொகை , அதிக அளவு உணவின் அவசியம்மற்றும் குறைந்த கால உற்பத்தி என்ற நோக்கில் ரசாயன உரம் தாவரங்களுக்கு அளிப்பதால் அவற்றின் விஷத் தன்மை தாவர உணவின் மூலம் மனித உடலுக்கு கேடு தருகின்றவையாக இருக்கத்தான் செய்கிறது.

இதன் காரணமாக உரங்களின் விஷத் தன்மை மனித மற்றும் இதை உண்ணும் உயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாக உடல் பாதிப்பை பெறுகின்றன.

இதன் தீர்வாக ரசாயன உரத்திலிருந்தும் விலகி இயற்கை உரத்திற்கு மாறுதலுக்கு உரிய சூழல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேரடியாகவே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசைவ உணவினை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை பல்வேறு விளக்கங்களுடன் மனித நலம், நேயம் கருதி இதை  வெளியிட முனைகிறது.
இதனுடைய வரவேற்பு ஒரு விளம்பர செய்தியாக இல்லாமல் மனித உயிரிகளின் விலையினை உணர்வோர்கள் நிச்சயம் இதற்கு வரவேற்பு அளிப்பார்கள் அத்துடன் அந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பெரிதும் எங்களுக்கு இருக்கின்றது.

Friday, January 6, 2012

அட்சய பாத்திரம்

ஹரிதாஸ் என்ற விஷ்ணுபக்தர், வறுமையில் வாடிய போதும், நாலுபேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது இரக்க குணம் கண்ட இறைவன், அவருக்கு அட்சய பாத்திரம் ஒன்றைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
மனதில் எதை நினைத்துக் கொண்டு அதைத் திறக்கிறோமே அது நமக்கு கிடைக்கும். பசியால் வாடும் மக்களுக்கு சோறிட எண்ணிய ஹரிதாஸ் சோறு வர வேண்டும் என நினைக்கவே, சோறு வந்து கொண்டே இருந்தது. மக்கள் வயிறார சாப்பிட்டு
அவரை வாழ்த்தினர். அவருடைய புகழ் ஊரெங்கும் பரவியது.
பக்கத்துவீட்டில் கிரிதாஸ் என்ற பணக்காரர் இருந்தார். பணம் இருந்தும் தன்னை ஊரில் ஒருவரும் மதிப்பதில்லை. ஆனால், ஹரிதாஸை அனைவரும் புகழ்கின்றார்களே என பொறாமை கொண்டார்.
அட்சய பாத்திரத்தின் மூலம் ஹரிதாஸ் சோறிடும் விஷயத்தை தெரிந்து கொண்டார். அன்றிரவு, ஹரிதாஸுக்குத் தெரியாமல் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
இரவோடு இரவாக, ஹரிதாஸ் வீடு தீப்பிடித்து எரிய வேண்டும் என்று மனதில் எண்ணினார். ஆனால், கிரிதாஸ் வீடு தீப்பிடிக்க ஆரம்பித்தது.
அலறி அடித்தபடி ஹரிதாஸிடம் ஓடினார். தூங்கிக் கொண்டிருந்த ஹரிதாஸை எழுப்பி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். ஹரிதாஸ் அப்போதும் அவர் மீது இரக்கம் கொண்டு கடவுளை வேண்டினார்.
நொடியில் தீ அணைந்து போனது. பொறாமைத்தீ கொடியது என்பதை உணர்ந்த கிரிதாஸ் தன்னை மன்னிக்கும்படி வேண்டியதோடு பாத்திரத்தையும் ஒப்படைத்தார்.

Thursday, January 5, 2012

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

அதிகாரப்பூர்வ மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத. புத்த, சமண, சீக்கிய மதங்கள் எதுவுமே அசைவ உணவினை அனுமதிக்காததோடு அங்கீகரிக்கவும் இல்லை.
மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

அதிகாரப்பூர்வ மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத. புத்த, சமண, சீக்கிய மதங்கள் எதுவுமே அசைவ உணவினை அனுமதிக்காததோடு அங்கீகரிக்கவும் இல்லை.
இயேசு கிறிஸ்து.
                                                                               
இயேசுநாதர் அன்பு, கருணையினை அதிகம் உபதேசித்தார்.

மனித உருவில் இறைவனான அவர் சம்பந்தப்பட்ட திரு உருவ படங்களில் அவரது கையில் உள்ள ஆடு எவ்வளவு அன்புடன் அரவணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் அன்பு கனிந்த பார்வையிலும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அத்தகையவர் அந்த ஆட்டினை கொன்று தின்னும் செயலை போதித்திருப்பாரா அல்லது கண்டித்திருப்பாரா?

நிச்சயமாக அன்பின் மறு உருவத்தை அவர் மூலம் காணும் அவர் கோட்பாடுகளின் வழி நடக்கும் மக்கள் அசைவத்தை தவிர்த்து ஆக வேண்டும்.
இயேசு ஒரு போதும் மாமிசம் உண்ணவில்லை.
பல கிறிஸ்தவர்களுக்கு அசைவம் உண்பதை தவிர்ப்பதில் இடையூறாக இருப்பது கிறிஸ்து மாமிசம் உண்டார் என்ற தவறான நம்பிக்கை.

ஆனால் புதிய ஏற்பாட்டின் படி கிரேக்க மொழி மூலத்தை சற்று ஆழ்ந்து கவனிக்கும்போது உணவு அல்லது உண்ணுதல் என்று பொருட்படும் வார்த்தைகளும் மற்றும் டீராஃபி (TROPHE) பிராம் (BROME) என்ற வார்த்தைகளுமே தவறாக மாமிசம் என்னும் பொருள்படும் மீட் (MEAT) என்ற ஆங்கில வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் படி பல இடங்களில் உண்ண என்று பொருள் படும் பாகோ ((BHAGO) கிரேக்க வார்த்தை மாமிசம் என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் மாமிசத்தை குறிக்கும் கிரேக்க வார்த்தை கிரியஸ் (KRIYAS) என்பதாகும். அந்த வார்த்தை கிறிஸ்துவுடன் தொடர்புடைய எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு மாமிசம் உண்டதற்கு எந்த அத்தாட்சியமும் இல்லை.

மேலும் யூதர்களின் நசரையேர் பிரிவினர் இன்னும் தாவர உணவை உண்பவர்களாகவே உள்ளனர். ஏசுவும் தன்னை நசரையேன் என்று பிரகடனப்படுத்தியுள்ள அவர் அசைவ உணவை உண்ணாததை உறுதிப்படுத்துகிறது.

அசைவம் உண்பதை நிராகரிக்கும் சான்றுகள்.

1) சாம்ஸ் (PSALMS)) 145.9-ல் இறைவன் எல்லோருக்கும் நல்லவர் அவருடைய எல்லா படைப்புகளிலும் இரக்கம் உடையவர் என்று குறிப்பிடபட்டுள்ளது


2) ஏலாஹில் (EZEKIEL) 47.12 ல் உன்னுடைய உணவாக பழங்களாகட்டும், மருந்தாக விதைகளாகட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3) இசையா (ISAIAH ) 1ஃ11ல் நான் எரிக்கப்பட்ட ஆடுகளாலும் கொல்லப்பட்ட விலங்குகளின் கொழுப்பாலும் நிரப்பபட்டுள்ளேன். நான் எருது மற்றும் ஆடுகளின் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் பிரார்த்தனைகளை நான் ஏற்பதில்லை, ஏனெனில் உன்னுடைய கரங்கள் இரத்தம் பழந்ததாக உள்ளது. என்றும் 66:3ல் ஒரு எருதைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு சமமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4) எக்ஸோடாஸ் (EXODUS ) 20:13ல் நீ கொல்லாதிருப்பாயாக என்று குறிப்பிடப்படபடுகிறது. 
(நன்றி - ISCON ULAGAM)
புத்தர்


மற்ற உயிர்களுக்கு பயம் உண்டாகாமல் இருக்க என் சீடர்கள் எவரும் மாமிசம் உண்ணலாகாது.

புத்திசாலிகளின் உணவு சாதுக்களின் உணவாக இருக்கட்டும். மாமிசம் கலவாதிருக்கட்டும். நான் புலாலை உண்பதை எவ்விதத்தும் எந்நிலையிலும். எந்த சூழலிலும் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
தம்மப்பாதாவில் யாரொருவர் சொந்த மகிழ்ச்சியினை விரும்புகிறார்களோ இவர்களை போலவே மகிழ்ச்சியினை நாடும் மற்ற உயிர்களை தண்டிக்கவோ கொல்லவோ செய்தால் இப்பிறவிக்கு பின் மகிழ்ச்சியினை அடைவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமண மதக்கோட்பாடுகள்

108 வகையான ஹிம்சைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹிம்சையே சமண மதத்தின் அடிப்படைக்கோட்பாடு மற்ற உயிர்களுக்கு கேடு செய்ய சிந்தனை, சொல், செயல் இவற்றால் ஈடுபடுவதும் பாவமாகிறது, அப்படி இருக்கையில் மாமிசத்திற்காக ஓர் உயிரைக்கொல்வது பற்றி பேசுவதற்கே இடமில்லை.
இஸ்லாமிய மதம்குர்-ஆன் சுரா 36, பதங்கள் 33.34.35-ல்
அவர்களுக்கு வறண்ட பூமி அடையாளமாக அளிக்கப்பட்டது.
நாங்கள் அதை உயிர்ப்பித்தோம். அவர்கள் உண்ணும் வண்ணம் அதிலிருந்து தானியங்களை உண்டாக்கினோம்.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை தோட்டங்களை அங்கு உருவாக்கினோம். அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களை உண்ணட்டும்,
பின் அவர்கள் நன்றி சொல்ல மாட்டார்களா? என்று கூறப்பட்டுள்ளது.
 
(இங்கே தாவர உணவினையே குறிப்பிட்டிருப்பதால் அசைவ உணவை குறிப்பிடபடவில்லை என்பது தெரிகிறது)
இறைத்தூதர் முகமது நபி விலங்குகளை ஊனப்படுத்தாதே என்றும் தன்னை விட கீழ்ப்பட்ட உயிர்களுக்கு கருணை காட்டுபவர் தனக்கே கருணை காட்டுகிறார் என்று கூறியள்ளார்.

குர்-ஆன் சுரா 6 பதம் 38ல் 
இந்த பூமியில் உள்ள மிருகங்களும் இரண்டு இறக்கைகளுடன் வானில் பறக்கும் பறவைகளும் உனக்கு மற்ற மக்களை போன்றவர்களே என்று குறிப்பிடப்படுகிறது.
அசைவத்தினை தவிர்த்த சூஃபி சாதுக்கள்

தூய்மை, துறவு, இரக்கம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தனர். மேலும் அசைவம் முழுதும் தவிர்த்த எளிமையான உணவினை மட்டுமே உண்டனர். இவர்களில் அன்பு, .கருணை, ஒழுக்கம், தவநெறி. கொண்ட கீழ்க்கண்ட பெரியோர்கள்

1) ஸேக் இஸ்மாயில்

2) க்வாஜா மைதீன் சிஸ்டி

3) ஹசரத் நிசாமுதீன் அவுலியா

4) பூ அலி கொலண்டர்

5) ஸா இனையட்

6) மீர் தட்

7) ஸா அப்துல் கரீம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவா.
நம் முன்னாள் இந்தியக்குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் கூட அசைவம் தவிர்த்த சைவ உணவாளரே என்பதும் குறிப்பிடதக்கது.
பத்ம புராணம்.

பதங்கள் 3, 31, .25, 28 மற்ற உயிர்களை துன்பபடுத்தும் மனிதர்கள் வேதங்களை ஓதினாலும் தவறுகள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும். சொர்க்கத்திற்கு போவதில்லை.
ஏனெனில் அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம் அதுவே பெரிய தவம். அதுவே பெரிய தானம். இவ்வாறு முனிவர்கள் கூறியுள்ளனர்.
கர்மா நியதிக் கொள்கையின்படி சிறு உயிரோ அல்லது பெரிய உயிரோ எதுவாயினும் அதை அறிந்தோ. அறியாமலோ கொல்பவர்கள் அவைகளாலயே ஒரு நாள் கொல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.
பகவத் கீதை-

 
பதம் 9ஃ26ல் 
பகவான் கிருஷ்ணர் ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும். இலையோ. பழமோ, பூவோ அல்லது நீரோ அளித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். தாவர உணவையே அளிக்குமாறு கூறினாரே தவிர எந்த இடத்திலும் தனக்கு அசைவ உணவினை அளிக்குமாறு கூறவில்லை.
ஸ்ரீ மத் பாகவதம்.

பதம் 1:17:38ல் கலி என்னும் பாவ புருசன் குடியிருக்கும் நான்கு இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால் கலியின் கேடுகள் அவர்களை அடைகிறது.
மனுசம்ஹிதை.
5:51 மிருக வதையினை அனுமதிப்பவர்கள். கொல்பவர். கூறுபோடுபவர். வாங்குபவர். விற்பவர். சமைப்பவர். பரிமாறுபவர் உண்பவர் ஆகிய அனைவரும் கொன்றவர்களாக கருதப்படுவர்.திருக்குறள்திருவள்ளுவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள திருக்குறள் என்ற உலகம் முழுவதும் தமிழ்மறை என ஒத்துக்கொள்ளப்பட்ட அந்த நூலில் புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரம் முழுவதும் புலால் உண்பதைச் சாடி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அதிகார எண் 26

251)தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்
252)பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பார்க்கு

253)படைகொண்டார் நெஞ்சம்போது நன்று ஊக்கானது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்

254)அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்
255)உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணுத்தல் செய்யாது அளறு
256)தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்

257)உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண் அது உணர்வர்ப்பெறின்

258)செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

259)அவிசொரிந்து ஆயிரம் வெட்டலின் ஒன்றன்
உயிர்செருத்து உண்ணாமை நன்று
260)கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.
வள்ளுவரின் வரிசையில் எத்தனையோ ஈரடிச் செய்யுள்கள் தந்த எத்தனையோ மென் மக்களுள் ஒருவரான அவ்வை முனி தனது கொன்றை வேந்தன் நீதி நூலில் குறள் எண் 58. 63 இரண்ழலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
58) நோன்பென்பதுவே கொன்றுதின் னாமை.

பொருள்:
ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியினை தின்னாதிருப்பதே புண்ணியம் பெருக்கும் சிறந்த விரதமாகும்.
63) புலையும், கொலையும் களவும் தவிர்
இழிவான இறைச்சி உண்பதையும் (ஐந்து மா பாதகச்செயல்களுள்) மாபாதகச்செயலான கொலை செய்வதையும் நெஞ்சத்தைக் கெடுக்கும் வஞ்சகச் செயலாகிய திருட்டையும் கைக்கொள்ளாதே.
இதுபோன்று உலகின் மறை அத்தனையிலும் உணர்த்தும் ஒரே நெறியாகிய கொல்லாமையினை பற்றி மாபாதகச்செயல்களுள் மிகப்பெரியதென இதனையே வற்யுறுத்தி மக்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆன்மீக அடிப்படை செய்திகளும் உணர்வுக்கோட்பாட்ழல் உறுதியாய்ப் பற்றிடும் செய்திகளும் உடல் விஞ்ஞான அணுக் கோட்பாட்டின்படி    ஆதாரச்செய்திகளாயும் விரிந்த வண்ணம் புலால் மறுப்புக்கொள்கை தொடர்ந்து வர இருப்பது இறைவனுக்குச் செய்யும் ஒரு தொண்டாகும்  என்பதுவே இறுதிச்செய்தி.

Tuesday, January 3, 2012

நல்லொழுக்கம், கட்டுப்பாடு

மனிதனாக பிறந்த நாம் எல்லோரும் நல்லொழுக்கம், கட்டுப்பாடு கொண்டவர்களாக வாழ வேண்டும்,இல்லையேல் இக்கணமே வாழத் தொடங்க வேண்டும். 
கட்டுப்பாடில்லாத காளை எல்லாரையும் முட்டித்தள்ளி விடுவது போல, காளைப்பருவத்தில் வாலிபர்களும் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறார்கள். காளைக்கு மூக்கணாம் கயிறு போட்டாக வேண்டும். அப்போது தான் அது தனக்கும் உபயோகமாக, மற்ற பேருக்கும் <உபயோகமாக உருவாக முடியும். நல்லபடியாக வளர்ச்சி பெறாமல், தாங்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற கவலை மட்டும் வாலிபர்களுக்கு இருந்துவிட்டால் போதும். பிரியப்பட்டு தானே மூக்கணாங்கயிறு என்னும் கட்டுப்பாட்டை போட்டுக் கொண்டு விடுவார்கள். மற்றவர்கள் போடுவதற்கும் இஷ்டப்பட்டு விடுவார்கள்.
அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டை எப்படி உண்டு பண்ணுவது? பெரியவர்கள் தான் விடாமல் பிரியத்துடனும், பொறுமையுடனும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்பவர்களும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் உபதேசத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? அதனால், வாலிபர்களை உத்தேசித்தாவது வயதானவர்கள் நல்லொழுக்கம், கட்டுப்பாடு கொண்டவர்களாக வாழத் தொடங்க வேண்டும்

Monday, January 2, 2012

ஜோதி வடிவான ராமலிங்க வள்ளலார் -


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் ஜோதி வடிவான ராமலிங்க வள்ளலார். அவர் நிறுவிய சத்யஞான சபையில் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

கடலூரிலிருந்து 34 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது வடலூர். வடலூரிலிருந்து பார்த் தால் இராமலிங்கரின் இஷ்டதெய்வமான தில்லை அம்பலவாணரின் ஆலய நான்கு கோபுரங்களும் தெரியும். இந்த புனிதத் தன்மையை முன்னிட்டுதான் ஒளி வடிவ இறைவனுக்கு சத்ய ஞான சபை உருவாக்க வடலூரைத் தேர்ந்தெடுத்தார் வள்ளலார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற சித்தாந்தத்தை மேற்கொண்ட வள்ளலார், 1865-ல் உலகை நல்வழிப்படுத்துவதற்கு உருவாக்கியதுதான் சமரச சுத்த சன்மார்க்க சங்கமாகும்.

பசித்தவர்களுக்கு அன்னமிட 23-5-1867-ல் உருவாக்கப்பட்டதுதான் சத்ய தரும சாலை. இதை அமைத்து அன்னதானத்தை வள்ளலார் துவக்கினார். அதற்கு அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை 145 ஆண்டுகளாக எரிந்து கொண்டே உள்ளது. இது 21 அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் ஆழமும் கொண்டது. தினமும் காலை 6.00 மணி, 8.00 மணி, பகல் 12.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 8.00 மணி என்று ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடத்துகின்றனர்.

சத்யஞான சபை என்ற கோவில் 25-1-1872-ல் அமைக்கப்பட்டது. இறைவன் ஒளிமயமானவன். இதை உணர்த்த நிறுவியதுதான் இது. உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் எண் கோண வடிவில் சத்யஞான சபை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப் புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத் தின்மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபத்தைக் காணலாம். அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடி உள்ளது. கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.

சத்யஞான சபையில் 1872-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று வள்ளலார் ஜோதி தரிசனத் தைத் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

இந்த ஏழு வண்ணத் திரைகளுக்கும் தத்துவங்கள் உண்டு.

கருப்புத்திரை- மாயையை விலக்கும்.

நீலத்திரை- உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும்.

பச்சைத்திரை- உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும்.

சிவப்புத்திரை- உணர்வுகளைச் சீராக்கும்.

பொன்னிறத்திரை- ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும்.

ஆறு வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும்.

இந்த ஏழு திரைகளை விலக்கி ஞான ஒளி யைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.

சூரியனின் உத்தராயன புண்ணிய காலப் பயணம்- அதாவது வடக்கு நோக்கிய நகர்தல் தை மாத முதல் நாளில் தொடங்குகிறது. அந்த மாதத்தில் வரும் பூச நாளின் அதிகாலையில், கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் நடுவில் ஞானசபையில் உள்ள ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இந்த அபூர்வ அமைப்பால்தான் எல்லா ஆலயங்களும் தைப் பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்துகின் றனர். அன்றைய நாளில் சூரிய ஒளியிலிருந்து காஸ்மிக் கதிர்கள் எனும் மெய்காந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும்.

"ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய் காந்த அலைகளைப் பெறமுடியும். தியானத்தின் மூலம் இயற்கையின் உண்மை விளக்கங்களையும் ரகசியங்களையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்' என வள்ளலார் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

"தேவையற்ற எண்ணங்களையும் ஆசை களையும் மனதிலிருந்து அகற்ற மனத்தூய்மை வேண்டும். இதை அடைய தியானத்தால் மட்டுமே இயலும். இதுதான் ஆன்ம விசாரணை ஆகும். மனம் ஒருமைப்பட சுவாசம்தான் உறு துணை. சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்ற சுவாசத்தால் புருவ மத்தியான சிற்சபை யில் மென்மையான ஜோதியாக உருவெடுக்கும். இதை ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியால் உணரலாம்' என்கிறார் வள்ளலார். தியானத் தால் இயற்கை ரகசியங்களான இயற்கைச் சீற்றம், பேரழிவு போன்றவற்றையும் அறியலாம்.

வள்ளலார் இயற்றிய நூல்கள்

திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் ஆகியவை. திருவருட்பா ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது. இவர் ஒரே இரவில் எழுதிய 1956 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி என்ற அகவல் பா, இவரின் சன்மார்க்க சங்கத்தினரால் பொதுமறை என போற்றப்படுகிறது.

ஆன்மநேய ஒருமைப்பாடு பன்னிரண்டு

ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள் நிலையறிந்து அவ்வமயம் ஆதல் என நான்கு நெறிகளும்; இந்திரிய ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கமும்; சமரச சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்யஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கும் என பன்னி ரண்டும் ஒன்றுபட்டதே ஆன்மநேய ஒருமை.

வள்ளலாரின் பத்து நிலைகள்

● நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

● தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்று எண்ண வேண்டும்.

● உலகில் உள்ள எல்லாரும் இன்பமாய் வாழவேண்டும் என நினைத்தல்.

● மனிதனைவிட குறைந்த அறிவுடைய விலங்குகள்மீதும் கருணை காட்ட வேண்டும்.

● பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.

● புழு, மீன் ஆகியவற் றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.

● ஓரறிவு உயிர்கள் வாடி னால்கூட நாம் வாட வேண்டும்.

● எல்லா உயிர்களையும் தம் உயிர் என நினைத்துப் பழக வேண்டும்.

இவை புற வாழ்வு தொடர் பான எட்டு நிலைகளாகும்.

அடுத்த இரண்டு நிலை களில் இறைவழிபாட்டுச் சிந்தனை தோன்றிவிடுகிறது.

● எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங் கள் என்று எண்ணி அவற் றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.

● இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதி யில் கருணைமயமான இறைவனோடு இரண் டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு.

வள்ளலாரின் பத்து நெறிகள்

● கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதிமயமானவர்.

● மக்களிடம் ஜாதி- சமய வேறுபாடு கூடாது.

● மாமிசம் உண்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

● ஏழைகளின் பசி போக்க வேண்டும்.

● ஜீவகாருண்யம்தான் அன்பு வடிவமான ஆண்டவனை அடைய சுலபமான வழியாகும்.

● உயிர்கள் யாவும் சமமானவை.

● அவற்றை அரவணைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எல்லாரிடமும் வர வேண்டும்.

● தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கக் கூடாது.

● உடலும் உள்ளமும் இறைவன் வாழும் ஆலயங்களாகும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்.

● உண்மையான அன்பால் கடவுளை வழி பாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.

வள்ளலார் கூறிய வாழ்க்கை வழிமுறைகள்

காலையில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து தியானம் செய்ய வேண்டும். அதுபோல் இரவு படுக்கும் முன்பும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் சிந்தனையுடன் எழவேண்டும். அதே சிந்தனையுடன் உறங்க வேண்டும். கீரைகள், பழங் களைப் புசிப்பது நல்லது. எப்போதும் மன உற்சாகத்து டன் இருக்க வேண்டும். ஜீவகாருண்யத்துடனும் சுபகுணங்களுடனும் வாழ வேண்டும்.

வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:

சென்னை 1825- 1858; கருங்குழி- 1858- 1867; வடலூர் 1867- 1870; மேட்டுக் குப்பம் 1870- 1874.

வள்ளலாரின் அற்புதங்கள்

தில்லை நடராசர் தரிசனம் காண இராமை யாப் பிள்ளை குடும்பத்துடன் தன் நான்கு மாதக் குழந்தையான வள்ளலாரை எடுத்துச் சென்றார். அக்குழந்தை நடராசப் பெருமானுக்கு கற்பூர ஆராதனை நடக்கும்போது கண்ணிமை யாது கண்டு மகிழ்ந்து, கலகலவென சிரித்தது. இது கண்ட தீட்சிதர், "இக்குழந்தை அம்பல வாணரின் அருட்குழந்தைதான்' என்று போற்றி னார்.

பிள்ளைப் பருவத்தில் முருகன் அருளால் திண்ணையிலிருந்து கீழே விழாமல் காக்கப் பட்டார். ஐந்து வயது குழந்தைப் பருவத்திலேயே சிதம்பர ரகசியத்தை மக்களுக்குக் காட்டினார். சக்திதேவியே அண்ணி வடிவில் வந்து இவருக்கு உணவு அளித்துள்ளார். தண்ணீராலேயே இவர் விளக்கெரிய வைத்துள்ளார்.

இராமலிங்கர் தனியறையில் கண்ணாடிமுன் விளக்கேற்றி வழிபட்டார். அப்போது முருகன் கண்ணாடியில் திருக்காட்சி தந்து, எல்லா கலைகளையும் ஓதாது உணர்த்தியருளினார்.

திருவொற்றியூர் பட்டினத்தடிகள் ஆலயத் தில் தொண்டாற்றிய மூதாட்டி, தான் உய்யுமாறு ஓர் அற்புதம் காட்டியருள வேண்டினதால், அவர் கரத்தில் மணலைக் கொடுத்தார் வள்ள லார். அது உடனே சிவலிங்கமாக மாறியது.

கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவரின் வாதநோயை- அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தீர்த்து வைத்து, வாத நோய் போக்கிய வள்ளலார் என்று பெயர் பெற்றார்.

துலுக்காணத்தம்மன் கோவிலில் பக்தர்கள் வள்ளலாரைப் பாட அழைத்தனர். அங்கு பலி கொடுக்க ஆடு, கோழிகள் இருந்தன. அது கண்ட வள்ளலார், "பலி கொடுப்பது கூடாது; ஆடு, கோழிகளை விடுவித்தால்தான் பாடுவேன்' என்றார். அப்படியே செய்தனர். பின்னர்தான் இவர் பாடினார். அப்போது இவருக்கு வயது 44. அன்று பக்தர்கள் இவருக்கு வள்ளலார் என்ற பட்டம் தந்தனர்.

வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பு

தவ அருட்செல்வர், ஆன்மிக விஞ்ஞானி, ஓதாது உணர்ந்தவர், வள்ளலார் எல பலவாறு போற்றப்பெற்றவர் இராமலிங்க சுவாமிகள். இவரது பெற்றோர் ராமையா- சின்னம்மை. சுபானு ஆண்டு, புரட்டாசி மாதம், 21-ஆம் தேதி (5-10-1823) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு மீன லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரத்தில் வடலூரில் அவதரித்தார்.

வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும்; சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் ஆன்மிக நாட்டத்தில் வளர்ந்த அவர், பெரியோர்களின் வற்புறத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்தார். மனைவியை ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார். ராமகிருஷ்ணர்- சாரதாதேவிபோல் இருவரும் வாழ்ந்தனர்.

பல்வேறு ஆன்ம சாதனைகளையும் சமுதாயத் தொண்டையும் செய்த வள்ளலார், இறுதியாக தை மாத வெள்ளிக்கிழமை (30-1-1874) நள்ளிரவு 12.00 மணியளவில், மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு இறைஜோதியில் கலந்தார். இந்த அறை திருக்காப்பீட்டு அறை எனப்படுகிறது.

தைப்பூசத்துக்கு மறுநாள் இவ்வறை திறக் கப்படுகிறது. அன்று சத்யஞான சபையிலிருந்து வள்ளலார் அருளிய திருவருட்பா பல்லக்கில் எடுத்து வரப்பட்டு இவ்வறையில் வைக்கப்படு கிறது. நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இவ்வறையை ஜன்னல் வழியாக பக்தர்கள் தரிசிக்கலாம்.

Sunday, January 1, 2012

பசு தானம்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியன. பொன்னிறம், கருமை, வெண்மை, புகைநிறம், சிவப்பு நிறமானவை. இவற்றின் சந்திகளே பூலோகத்தில் வாழும் பசுக்கூட்டமாகும். இந்த ஐந்தும் கிருஷ்ணருக்குரிய கோலோகத்தில் இன்றும் இருப்பதாக ஐதீகம்.
பசுதானம் செய்தால் பிதுர்சாபம், முன் வினைப்பாவம் நீங்கும். திருமந்திரத்தில் திருமூலர் தினமும் பசுவிற்கு புல் இடும்படி வேண்டுகோள் விடுக்கிறார். இதனை வேதம் "கோக்ராஸம்' என்று குறிப்பிடுகிறது. ஒருவர், தானம் தரும் பசுவின் உடம்பில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கைக்கு ஈடான ஆண்டுகள் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழும் பாக்கியத்தை அடைவார் என சில நூல்களிலும் தகவல் உள்ளது.
அவ்வையார், "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கோயில் வழிபாட்டோடு, பசுவின் சிறப்பையும் பாடியுள்ளார். ஆலயம் என்ற சொல்லை ஆ+ லயம் என்று பிரித்து "பசுக்கள் சேர்ந்திருக்கும் இடம்' என்று பொருள் கூறுவர். அவ்விடத்தை தொழுவது நன்மையைத் தரும் என்பதே இதன் பொருள். பசுமாடுகள் கட்டியிருக்கும் இடம் தொழுவதற்குரிய (வழிபாட்டுக்குரிய) இடமாக இருப்பதால் "மாட்டுத் தொழுவம்' எனப்படுகிறது.